அண்மையில் பெய்த பருவமழையால் சேதமுற்றுள்ள, காயல்பட்டினம் பிரதான வீதியிலுள்ள - பேருந்து போக்குவரத்திற்கான சாலையை போர்க்கால அடிப்படையில் செப்பனிட்டுத் தருமாறு, கடந்த 21.01.2012 அன்று திருச்செந்தூர் வந்திருந்த தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கமிடம், காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் ஏ.லுக்மான் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
காயல்பட்டினம் ஊரிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலை அண்மையில் பெய்த மழையால் மிகவும் சேதமடைந்துள்ளது. இச்சாலையை பழுது நீக்கி தரும்படி நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் முறையிட்டும், சாலை பழுது நீக்கப்பட வில்லை. அதனால் இரண்டு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் பலமுறை விபத்துக்குள்ளாகும் சம்பவம் ஏற்படுகின்றது. எனவே மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இந்த சாலையை உடனடியாக பழுது நீக்க ஆவண செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
இவ்வாறு அந்த மனுவில், நகர்மன்ற உறுப்பினர் ஏ.லுக்மான் கோரியுள்ளார்.
மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர், தான் அம்மனுவை நெடுஞ்சாலைத்துறைக்கு அனுப்பி வைத்து, நடவடிக்கைக்கு பரிந்துரைப்பதாகத் தெரிவித்ததாக, நகர்மன்ற உறுப்பினர் ஏ.லுக்மான் தெரிவித்துள்ளார். அவருடன், நகர்மன்ற உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் உடன் சென்றிருந்தார்.
இச்சந்திப்பிற்கான ஏற்பாடுகளை, அதிமுக மாவட்ட சிறுபான்மைப் பிரிவு தலைவர் எம்.ஜே.செய்யித் இப்றாஹீம், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் எல்.எஸ்.அன்வர் ஆகியோர் செய்திருந்தனர். |