காயல்பட்டினத்தில், அண்மையில் தொடர்ச்சியாகப் பெய்த பருவமழை காரணமாக தார் மற்றும் சிமெண்ட் சாலைகள் அரிப்பெடுத்து, பெரும்பாலும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
குறிப்பாக, பேருந்து போக்குவரத்துள்ள சாலைகளான கே.டி.எம். தெரு சாலை, பிரதான வீதி உள்ளிட்ட சாலைகளில், சுரங்கப்பாதையாக இருக்குமோ என சந்தேகப்படும் அளவுக்கு பெருமளவில் பள்ளங்கள் உருவாகி, வாகனப் போக்குவரத்திற்கு அவை இடையூறாக உள்ளன.
இக்குறையை சரி செய்யக்கோரி, அண்மையில் அத்துறை சார்ந்த அதிகாரிகளிடம், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பல்வேறு காலகட்டங்களில் தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
இந்நிலையில், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜுமஆ மஸ்ஜித் முன்புறமுள்ள சாலையில் 23.01.2012 முதல் செப்பனிடும் பணி நடைபெற்று வருகிறது. தார் ஊற்றி, கருங்கல் ஜல்லி கொண்டு பள்ளங்கள் சமப்படுத்தப்பட்டு வருகிறது.
திருச்செந்தூர் நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளர் உத்தரவின்பேரில் இப்பணி நடைபெற்று வருவதாகவும், காயல்பட்டினத்தில் பேருந்து போக்குவரத்துள்ள சாலைகளில் உள்ள அனைத்து பள்ளங்களும் சரிசெய்யப்படும் என்றும், ஜல்லி - தார் உள்ளிட்ட பொருட்கள் குறைந்த அளவில் படிப்படியாகவே தரப்பட்டு வருவதாகவும், பெறப்படும் பொருட்களைக் கொண்டு வரிசையாக அனைத்து பள்ளங்களும் சரிசெய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. |