காயல்பட்டினம் பெண்கள் கோஷா முறையைப் பின்பற்றுபவர்கள் என்ற காரணத்தால், அவர்களின் தடையற்ற போக்குவரத்திற்காக, அக்காலத்திலேயே அனைத்து தெருக்களிலும் வீடுகளுக்கு பின்புறம் ஓடை போன்று அகலமான சந்துப் பாதைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இவை நாராயண ஓடை என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில், பொதுநலனைக் கருத்திற்கொள்ளாத சிலரால் அந்த ஓடைகள் ஆக்கிரமிக்கப்பட்டு, அவரவர் விருப்பத்திற்கு வீடுகளை விரித்துக் கட்டி அனுபவித்து வந்த காரணத்தால், தற்காலத்தில் நகரில் பெரும்பாலும் இந்த ஓடைகள் இருந்த இடம் தெரியாமற்போயிற்று.
இந்நிலையில், காயல்பட்டினம் கே.டி.எம். தெருவில் அதுபோன்றுள்ள ஓடையின் சில பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. எஞ்சிய பகுதிகள் குப்பைகளைக் கொட்டும் இடமாக சுற்றுவட்டார மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று கருதிய அப்பகுதி நகர்மன்ற உறுப்பினரும், நகர்மன்ற துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன், கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற காயல்பட்டினம் நகர்மன்றக் கூட்டத்தில், அக்குப்பைகளை அகற்றித் தர கோரிக்கை வைத்து, அது ஏற்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று முதல் அப்பகுதியில் குப்பை அகற்றும் பணி துவங்கியது. நகராட்சி சுகாதார துணை ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் குப்பை அகற்றும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. மும்பை முகைதீன், முகமூடியணிந்து அவ்விடத்தில் நின்றவாறு பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார்.
தேங்கியுள்ள குப்பைகளை முற்றிலுமாக அகற்றிவிட்டால், இப்பாதையை தாயிம்பள்ளி குறுக்குச் சாலையிலுள்ள மூப்பனார் ஓடை பகுதி வரை மீண்டும் இணைத்து பாதையமைக்க இயலும் என்று மும்பை முகைதீன் தெரிவித்தார்.
|