காயல்பட்டினத்தில் பேருந்து நிலையம் அமைப்புப் பணிகள் நிறைவுற்று முறைப்படி துவக்கப்பட்ட பின்னரும், பெரும்பாலான பேருந்துகளின் ஓட்டுனர்கள் பேருந்து நிலையத்திற்குள் செல்லாமல், மகாத்மா காந்தி ஞாபகார்த்த வளைவின் வழியாக பேருந்துகளை ஓட்டிச் செல்வது வழமையாக இருந்துவந்தது. இதனால், பேருந்துகளை எதிர்பார்த்து பேருந்து நிலையத்திற்குள் காத்திருந்த பயணிகள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.
இதனையடுத்து சில மாதங்களில், மகாத்மா காந்தி வளைவின் நடுவில் பெரிய இரும்பு உருளையைக் கிடத்தி, பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் செல்ல வழிவகை செய்யப்பட்டு, பல ஆண்டுகளாக இந்நடைமுறையே வழமையில் உள்ளது.
ஆனால், கிடைக்கும் இடைவெளியைப் பயன்படுத்தி, ‘திறமை‘யுள்ள சில பேருந்து ஓட்டுனர்கள் மீண்டும் மகாத்மா காந்தி வளைவு வழியாகவே தமது வாகனங்களை இயக்கி வருவதாக அறியப்படுகிறது.
இது ஒருபுறமிருக்க, தற்காலங்களில் தினமும் குறைந்தபட்சம் 5 மணி நேரம் மின் தடை செய்யப்பட்டு வருகிறது. இரவு நேரங்களிலும் மின்தடை செய்யப்படுவது வழமையாக உள்ளது. மகாத்மா காந்தி வளைவிற்கிடையில் கிடத்தப்பட்டுள்ள இரும்பு உருளையில் சாலை பாதுகாப்புக் குறியீடுகள் எதுவும் இல்லாத காரணத்தால், அவ்வழியே அடிக்கடி வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் இரும்பு உருளை அவ்விடத்தில் இருப்பதை உணர்ந்து ஓட்டிச் செல்கின்றனர். ஆனால், புதிதாக அவ்வழியே இருசக்கர - நாற்சக்கர வாகனங்களை ஓட்டி வருபவர்கள், குறிப்பாக மின் தடை நேரங்களில் மிகவும் அருகில் வந்த பின்னரே அங்கு இரும்பு உருளை இருப்பதை உணர்ந்து அதிர்ச்சியுடன் தமது வாகனங்களை இடைவெளி வழியே ஓட்டிச் செல்கின்றனர். இதன் காரணமாக பெரும் விபத்துக்கள் ஏற்படுமென அஞ்சப்படுகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த நகர காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் சதக்கத்துல்லாஹ், “பேருந்து நிலையம் என்று ஒன்று இருந்தால் அங்கே பேருந்துகள் உட்சென்றுதான் வரவேண்டும் என அதிகாரிகள் ஓட்டுனர்களுக்கு உத்தரவிட்டு, அதைக் கண்காணிக்க வேண்டுமேயல்லாது, இதுபோன்று ஆங்காங்கே தடைகளை நிறுவுவது அவர்களின் கையாலாகத்தனத்தையே காண்பிக்கிறது...
அதுமட்டுமின்றி, மகாத்மா காந்தி வளைவிற்கிடையில் இரும்பு உருளை கிடத்தப்பட்டுள்ளதால், பேருந்துகளைப் போல பெரிய சரக்குந்துகள் பலவும் பேருந்து நிலையத்திற்குள் சென்று வருவதால், பேருந்து நிலைய வளாகத்திலுள்ள சாலைகளின் தரம் திட்டமிடப்பட்ட ஆயுட்காலத்திற்கு முன்பாகவே குறைய வாய்ப்புள்ளது... அதிகாரிகள் இது விஷயத்தில் கவனம் செலுத்தி, எந்த தடையுமின்றியே பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்லவும், இதர கனரக வாகனங்கள் மகாத்மா காந்தி வளைவு வழியாக – பேருந்து நிலையத்திற்குள் வராமலேயே செல்லவும் வழிவகை செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம்! தற்போதைக்கு, அந்த உருயின் மீது பிரதிபலிக்கும் (reflector) ஸ்டிக்கர் எதையேனும் ஒட்டி, குறைந்தபட்சம் வாகன ஓட்டிகளுக்கு உணர்த்தலாம்...” என்றார்.
“பேருந்து நிலையத்திற்குள் செல்லும் மேற்புற நுழைவாயில் பெரிய கோட்டைச் சுவருடன் காணப்படுவதால், உள்ளிருந்து வெளியே வரும் வாகனங்களை, சாலை வழியே வருவோர் உணர முடிவதில்லை...
எனவே, அக்கோட்டைச் சுவர்களை அகற்றி, கம்பி வளை போன்று எதையேனும் நிறுவி, உட்புறத்திலுள்ள வாகனங்கள் வருவதை வெளியிலிருந்தே பார்க்க வழிவகை செய்ய வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
தகவல்:
A.T.ரியாஸ்தீன்,
பிரதான வீதி, காயல்பட்டினம். |