இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட 17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கால்பந்து விளையாட்டுப் போட்டியில் எல்.கே.மேனிலைப்பள்ளி, இறுதிப்போட்டியில் வெற்றி வாய்ப்பையிழந்து இரண்டாமிடம் பெற்றுள்ளது.
துவக்கப்போட்டியில் சேலம் அணியினரை எதிர்த்தாடி காலிறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்ற எல்.கே.மேனிலைப்பள்ளி அணி, காலிறுதிப் போட்டியில் ஈரோடு அணியை வென்று அரையிறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது. அரையிறுதிப் போட்டியில், சென்னை அணியை வென்று இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.
பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், திருச்சி காஜா மியான் பள்ளி அணியுடன் மோதியது. ஆட்டத்தின் துவக்கத்திலிருந்தே திருச்சி அணி தாக்குதல் ஆட்டத்தை மேற்கொண்டது. அத்தாக்குதல்களை எல்.கே.மேனிலைப்பள்ளி அணி நேர்த்தியான தனது தடுப்பாட்டத்தின் மூலம் எதிர்கொண்டது.
ஆட்டத்தின் முதல் பாதி வரை இரு அணியும் கோல் எதுவும் அடிக்காததால், பிற்பாதி ஆட்டம் மிகவும் பரபரப்புடன் காணப்பட்டது. ஆட்ட நேர இறுதி வரை இரு அணியினரும கோல் எதுவும் அடிக்காத நிலையில், சமனுடைப்பு (டை ப்ரேக்கர்) மூலமே முடிவு நிர்ணயிக்க வாய்ப்புள்ளதென அனைவரும் கருதிய நேரத்தில், ஆட்டத்தின் கடைசி நிமிடங்களில் தனக்குக் கிடைத்த கார்னர் கிக் வாய்ப்பை நன்கு பயன்படுத்தி, திருச்சி அணி ஒரு கோல் அடித்தது. அடுத்த சில மணித்துளிகளில் இரண்டாவது கோலையும் அந்த அணி அடித்தது.
முடிவில், 2-0 என்ற கோல் கணக்கில் திருச்சி அணி இறுதிப்போட்டியில் வெற்றிபெற்றது. காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி அணி மாநில அளவில் இரண்டாமிடத்தைப் பெற்றது.
எல்.கே.மேனிலைப்பள்ளி அணி பயிற்சியாளரும், அப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியருமான ஜமால் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில்,
“எப்படியும் மாநிலத்தில் முதலிடத்தைத் தக்கவைத்துக்கொள்வதில் எம் பள்ளி அணியினர் மிகுந்த ஆவலுடனும், ஊக்கமுடனும் முயற்சி செய்தனர்... இதற்காக அனுதினமும் கடுமையாக பயிற்சி எடுத்துக்கொண்டனர்...
எனினும், தொடர்ச்சியாக நடைபெற்ற ஆட்டங்களால் அவர்கள் சற்று சோர்வுற்ற அவர்கள், இறுதிப்போட்டியில் கடும் முயற்சி செய்தும் வெற்றி பெற இயலாமல், இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளனர்...
வருங்காலங்களில், மாணவர்கள் முழு உடல் திறனுடன் விளையாடத் தேவையான நுணுக்கங்களுடன் அவர்களுக்குப் பயிற்சியளித்து, மாநில அளவில் எம் பள்ளி முதலிடத்தைப் பெற எங்களாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்...” என்றார்.
மாநில அளவிலான இப்போட்டியில் இறுதிப்போட்டி வரை காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி அணி முன்னேறியதால், இறுதிப்போட்டியைக் காண காயல்பட்டினத்திலிருந்து ஏராளமான கால்பந்து விளையாட்டு ஆர்வலர்கள் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வெற்றிபெற்ற மாணவர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பகவதி அவர்கள் கோப்பையையும், பணப்பரிசையும் வழங்கினார்.
மாநில அளவில் இரண்டாமிடம் பெற்ற எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர்களை அப்பள்ளியின் நிர்வாகிகள், தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
மாணவர்களைப் பாராட்டி தலைமையாசிரியர் பேசுகையில், தம் பள்ளி மாணவர்கள் மயிரிழையில் வெற்றியைத் தவறவிட்டுள்ளபோதிலும், மாநில அளவில் இரண்டாமிடம் என்ற அவர்களின் இந்த சாதனை நமதூர் கால்பந்து வரலாற்றில் ஒரு மைல் கல் எனவும், இது போன்ற வெற்றிகள், கல்வியிலும், விளையாட்டிலும் தொடர வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தகவல்:
அஹ்மத் மீராத்தம்பி,
ஆசிரியர்,
எல்.கே.மேனிலைப்பள்ளி, காயல்பட்டினம்.
படங்களிலுதவி:
ஹபீபுர்ரஹ்மான்.
ஒரு படம் கூடுதலாக இணைக்கப்பட்டது. @ 26.01.2012 - 22:43hrs) |