குடியரசு தினமான ஜனவரி 26 அன்றும், சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்றும் - அரசு அலுவலகங்கள் உட்பட பல இடங்களில் தேசிய கொடியேற்றப்படுவது வழமை. இதில் உள்ளாட்சி மன்றங்களும் அடங்கும்.
இரண்டாம் நிலை நகராட்சியான கீழக்கரையில் நேற்று (ஜனவரி 26) காலை நடந்த நிகழ்ச்சியில், நகர்மன்றத் தலைவர் ராபியத்துல் காதரியா - தேசியக் கொடியை ஏற்றினார்.
முதல் நிலை நகராட்சியான கடையநல்லூரில், நகராட்சித் தலைவி சைபுன்னிசா - தேசியக் கொடியை ஏற்றினார்.
புகைப்படம்:
www.kadayanallur.org
மாநகராட்சியான தூத்துக்குடியில், மாநகர் மேயர் சசிகலா புஷ்பா - தேசியக் கொடியை ஏற்றினார்.
புகைப்படம்:
www.tutyonline.net
ஆனால் - இரண்டாம் நிலை நகராட்சியான காயல்பட்டினம் நகர்மன்ற வளாகத்தில் கொடியேற்றியது ஆணையர் பொறுப்பில் இருக்கும் வீ.கண்ணையா.
இதுதான் காயல்பட்டினம் நகர்மன்ற வழமையா?
2010 ஆம் ஆண்டு குடியரசு தினம் அன்று அப்போதைய நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு S. செய்யத் அப்துர்ரஹ்மான் கொடியேற்றிய காட்சி...
இவ்வாண்டு மட்டும் ஏன் இந்த மாற்றம்?
இது குறித்து - ஆணையர் பொறுப்பில் இருக்கும் வீ.கண்ணையாவிடம் காயல்பட்டணம்.காம் வினவியது. விதிமுறைகள் என்ன கூறுகின்றன என்று தனக்கு தெரியவில்லை என்றும், நகர்மன்ற துணைத் தலைவர் எஸ்.எம்.மொஹிதீன் - இது அரசு விழா என்றும், இதில் ஆணையர் தான் கொடியேற்றவேண்டும் என்றும் தெரிவித்ததால் தான் கொடியேற்றியதாகவும் கூறினார்.
இது குறித்து விளக்கம் அளித்த நகர்மன்ற துணைத் தலைவர் - சென்னையில் நடக்கும் அரசு குடியரசு விழாவில் ஆளுநர் கொடியேற்றுவதால், நகர்மன்றங்களிலும் ஆணையர் தான் கொடியேற்றுவார் என தான் நினைத்ததாகவும் தெரிவித்தார்.
விதிமுறைகள் என்ன கூறுகின்றன என நகராட்சிகளின் மண்டல இயக்குனர் மோகனிடம் காயல்பட்டணம்.காம் வினவியது. விளக்கம் தந்த மண்டல இயக்குனர் - விதிமுறைகள்படி - நகர்மன்றத் தலைவரே, கொடியேற்ற வேண்டும் என தெரிவித்தார்.
அரசு நியமன அதிகாரிகள் விதிமுறைகளை முழுவதுமாக தெரிந்துகொள்வது - இதுபோன்ற நிகழ்ச்சிகளில் - வருங்காலங்களில் தேவையற்ற சர்ச்சைகள் உருவாகாமல் இருக்க உதவியாக இருக்கும். |