காயல்பட்டினம் மகுதூம் பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி குறித்த நகராட்சியின் நிலை குறித்து, 25.01.2012 அன்று காயல்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில், அப்பள்ளி நிர்வாகத்தின் சார்பில் கேள்வியெழுப்பப்பட்டது.
காயல்பட்டினம் நகராட்சியின் சேவைகளில் உள்ள குறைபாடுகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்து, அக்குறைகளைக் களைவதற்காக, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் முன்வைத்த தீர்மான முன்வடிவின்படி, மக்கள் குறைதீர் கூட்டத்தை மாதந்தோறும் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
அதனையடுத்து, முதற்கூட்டம் 25.01.2012 அன்று மதியம் 03.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொதுமக்கள் பலர் நகராட்சி மூலம் நிறைவேற்றப்பட வேண்டிய பல்வேறு செயல்திட்டங்களிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்யுமாறு, நகர்மன்றத் தலைவர், ஆணையர், அதிகாரிகள் மற்றும் அலுவலர்களிடம் முறையிட்டனர்.
அப்போது, காயல்பட்டினம் மகுதூம் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த ஹாஜி ஏ.ஆர்.முஹம்மத் இக்பால், முஹம்மத் இப்றாஹீம் மற்றும் குழுவினர், மகுதூம் பள்ளி மையவாடியில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைய - மக்கள் நலன் கருதியே இடமளித்துள்ளதாகவும், தொட்டி கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகளாகியும் இதுவரை அத்தொட்டி பயன்படுத்தப்படாதது ஏன் என்றும் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதாவிடம் கேட்டனர்.
அவர் உடனடியாக, குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துனர் நிஸார், உதவி அலுவலர் பாஸ்கர் ஆகியோரை அழைத்து இதுகுறித்து விளக்கம் கேட்டார். அத்தொட்டியில் தண்ணீர் ஏற்ற இயலவில்லை என்று அப்போது அவர்கள் தெரிவித்தனர்.
அடுத்து பேசிய பள்ளி நிர்வாகத்தினர், “எங்கள் பள்ளியில் தேவைக்கதிகமாக இடம் உள்ளது என்று கருதி இதற்கு இடம் தரவில்லை... மாறாக, மக்கள் நலனுக்காக கேட்கப்பட்டதையடுத்தே தரப்பட்டது... அவ்விடம், இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காக நாங்கள் வைத்திருந்தும், எங்கள் தேவைகளை சுருக்கிக் கொண்டு ஊர் நன்மைக்காக அளித்துள்ளோம்... ஒன்று, இத்தொட்டியைப் பயன்படுத்தி குடிநீர் வினியோகம் செய்யுங்கள்... வாய்ப்பில்லையெனில், தொட்டி தேவையில்லை என்று எழுதித் தாருங்கள்! நாங்கள் அதை அகற்றிவிட்டு, அவ்விடத்தைப் பயன்படுத்திக்கொள்கிறோம்...” என்று தெரிவித்தனர்.
இதுகுறித்த முறையீட்டைப் பதிவு செய்துகொண்ட நகர்மன்றத் தலைவர், உரிய அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் அப்பகுதி நகர்மன்ற உறுப்பினருடன் கலந்தாலோசித்து, மேல் நடவடிக்கை குறித்து விரைவில் தெரிவிக்கப்படுமென தெரிவித்தார். |