பெங்களூரு காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில், கல்வி - வேலைவாய்ப்பு துறைகளுக்கு தனியாக வழிகாட்டுக் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
கர்நாடக மாநிலம் பெங்களூரு காயல் நல மன்றத்தின் ஆறாவது பொதுக்குழுக் கூட்டம், 22.01.2012 அன்று, பெங்களூரு நகரிலுள்ள லால்பாக் பூங்காவில், மன்ற உறுப்பினர் ஜனாப் முஹம்மத் இப்றாஹீம் (Honey Well) தலைமையில் இறையருளால் நடைபெற்றது.
ஹாஃபிழ் மக்கி இஸ்மாஈல் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். மன்றத்தின் துணைச் செயலாளர் ஜனாப் கே.கே.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தியதுடன், சென்ற கூட்ட நிகழ்வுகளை நினைவுபடுத்தி உரையாற்றினார்.
பின்னர், மன்றத்தில் புதிதாக உறுப்பினராக இணைந்துகொண்ட ஹாஃபிழ் என்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.
பின்னர் நடைபெற்ற உறுப்பினர் கலந்தாய்வில் சென்ற கூட்டத்தின் முதல் தீர்மானப்படி, கல்வி, வேலைவாய்ப்பு துறைகளுக்கு வழிகாட்டு செயல்திட்டம் வகுத்து செயல்படுவதற்காக 8 நபர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
மன்றத்தின் வருங்கால செயல்திட்டங்கள் மற்றும் நகர்நலன் குறித்த உறுப்பினர்களின் ஆர்வத்துடன் கூடிய கலந்துரையாடலைத் தொடர்ந்து பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டு குழு:
கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய மன்றத்தின் செயல்திட்டங்களுக்கான துறை பொறுப்பாளர்களாக,
முஹம்மத் இப்றாஹீம்,
ஜாஹிர் ஹுஸைன்,
எஸ்.ஏ.கே.ஜபரூத்,
ஜெய்த் நூருத்தீன்,
முஹம்மத் அப்துல் காதிர்,
எஸ்.எச்.ஷேக் சுலைமான்,
கே.கே.எஸ்.செய்கு முஹம்மத் ஸாலிஹ்,
ஹாஃபிழ் ஷேக் அப்துல்லாஹ் முஹாஜிர்
ஆகிய எட்டு பேரடங்கிய குழு நியமனம் செய்யப்பட்டதுடன், இத்துறை சார்ந்த கலந்தாலோசனைகள், செயல்திட்டங்களை இக்குழுவினரே நடத்திக்கொள்ள இக்கூட்டம் இசைவு தெரிவிக்கிறது.
இக்குழு தனது துவக்கப்பணியாக, தம்மாம், அமீரகம், சிங்கப்பூர், சென்னை KCGC, இக்ராஃ கல்விச் சங்கம், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை, இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) மற்றும் கல்வி - வேலைவாய்ப்புத் துறைகள் சார்ந்த நகர்நலப் பணிகளை மேற்கொள்ளும் அமைப்பினருடன் தொடர்புகொண்டு, ஆலோசனை செய்து, அதனடிப்படையில் செயல்திட்டம் வகுக்க இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 2 - பாராட்டுத் தீர்மானங்கள்:
ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்ளும் காயலர்களுக்கு, புனித மக்காவில் வழிகாட்டும் அமைப்பு ஏற்படுத்திய ஜித்தா காயல் நற்பணி மன்றம்,
தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தலைவராக தேர்வு செய்யப்பட்ட டாக்டர் அஷ்ரஃப் அவர்கள்,
ஐக்கிய அரபு அமீரகம் - அபூதபீ நகரில், புதிதாகப் பூத்துள்ள அபூதபீ காயல் நல மன்றம்,
29.12.2011 அன்று மூன் டிவி சார்பில் கீழக்கரையில் நடத்தப்பட்ட மாநில அளவிலான மறைகுர்ஆன் மனனப் போட்டியில் முதற்பரிசை வென்ற, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் திருக்குர்ஆன் மனனப் பயிலக முன்னாள் மாணவர் ஹாஃபிழ் கே.எஸ்.முஃபீஸுர் ரஹ்மான் அவர்கள்,
Institute of Objective Studies (IOS) தொண்டு நிறுவனத்தின் வெள்ளிவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட சர்வதேச மாநாட்டில், மாற்றுத்திறனுடைய சிறாருக்கு சிறந்த சேவை புரிந்தமைக்கான விருதும், பாராட்டும் பெற்ற காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியின் நிறுவனர் வழக்கறிஞர் எச்.எம்.அஹ்மத் அவர்கள்
ஆகிய சாதனையாளர்களையும், அமைப்புகளையும் பாராட்டி, அவர்களின் நற்சேவைகள் தொடரவும், அதில் ஈடுபடும் அனைவரின் ஈருலக வாழ்வும் சிறக்கவும் இக்கூட்டம் வாழ்த்தி துஆ செய்கிறது.
தீர்மானம் 3 - இரங்கல் தீர்மானங்கள்:
அண்மையில் காலமான - நகர்நலனில் மிகவும் அக்கறை கொண்டிருந்த மூத்த பெருமக்களான ஹாஜி பி.மஹ்மூத் அவர்கள், ஷெய்கு அப்துல்லாஹ் ஆலிம் ஜுமானீ அவர்கள், ஹாஜி எம்.எல்.மூஸா நெய்னா அவர்கள் ஆகியோரின் மறைவுக்கு இக்கூட்டம் இரங்கலைத் தெரிவித்து, அவர்களின் மஃக்ஃபிரத்திற்காக (பாவப்பிழை பொறுப்பிற்காக) இறையோனிடம் துஆ இறைஞசுவதோடு, அவர்களின் பிரிவால் வாடும் அவர்கள்தம் குடும்பத்தார், உற்றார் - உறவினர் மற்றும் நகர்நல அக்கறை கொண்ட அனைவருக்கும், ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் 4 – DCW விரிவாக்கம் குறித்த CFFCயின் நடவடிக்கைக்கு ஆதரவு:
காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்டு இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையின் விரிவாக்கத் திட்டம் குறித்த Cancer Fact Finding Committee - CFFCயின் நடவடிக்கைகளுக்கு, மன்றத்தின் சார்பில் முழு ஒத்துழைப்பளிக்க தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 5 - விடைபெறும் நிர்வாகிகளுக்கு வழியனுப்பு:
எங்கள் அமைப்பின் நிர்வாகிகளான ஜனாப் L.M.I அப்துல் காதர் (துணைத்தலைவர் ) , ஜனாப் V.S.T ஷேக்னா லெப்பை ( செயலாளர் ) மற்றும் ஜனாப் S.I முஹம்மத் மொஹியதீன் (துணை செயலாளர் ) ஆகியோர் பணி மாற்றலாகி, வேறிடம் சென்றுள்ளனர். அவர்கள் பணி மென் மேலும் சிறக்க இக்கூட்டம் மனதார வாழ்த்துவதோடு, அமைப்பின் நம் மன்றத்தின் நற்பணிகளில் அவர்களின் தொடர்ந்த ஆலோசனைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறது.
தீர்மானம் 6 - இக்ராஃவின் பரிசுப்பட்டியலில் பங்கேற்பு:
ஆண்டுதோறும் இக்ராஃ கல்விச் சங்கம், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புடன் இணைந்து நடத்தும் “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை”” நிகழ்ச்சியின்போது சாதனை மாணவர்களுக்கு வழங்கப்படும் பரிசளிப்புப் பட்டியலில், மன்றத்தின் பங்களிப்பிலான பரிசுகள் குறித்து இக்கூட்டத்தில் இறுதி முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து, விரைவில் இக்ராஃ நிர்வாகத்திற்கு முறைப்படி தகவல் தெரிவிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
தீர்மானம் 7 - மண வாழ்த்து:
வரும் 29.01.2012 அன்று மணவாழ்வு காணவுள்ள மன்ற உறுப்பினர் ஜனாப் முஹம்மத் சுலைமான் அவர்களின் புதுமணவாழ்வு சிறக்க இக்கூட்டம் மனதார வாழ்த்துகிறது.
தீர்மானம் 8 - உலக காயல் நல மன்றங்களுக்கு வேண்டுகோள்:
உலக காயல் நல மன்றங்கள் தமது அமைப்பின் நிர்வாகிகளின் பெயர் பட்டியல், தொடர்பு எண்கள், உள்ளூர் பிரதிநிதி குறித்த தொடர்பு விபரங்கள் உள்ளிட்ட விபரங்களை bangalore@kayal.org என்ற மன்றத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பித் தர முறைப்படி மின்னஞ்சல் மூலம் கோரிக்கை வைப்பதென இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
செய்தி பரிமாற்றத்திற்காக அனைத்து மன்றங்களும் தங்கள் அமைப்புக்கு என்று தனியாக ************@kayal.org என்ற ஒரே மாதிரியான மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தினால், அந்தந்த மன்றங்களால் அனுப்பப்படும் செய்திகள் அதிகாரப்பூர்வமானவை என்பதை இலகுவாக அறிந்துகொள்ள வாய்ப்பாக அமையும். இதனைக் கருத்திற்கொண்டு, மன்றங்கள் தமது மின்னஞ்சல் முகவரிகளை அமைத்துக்கொள்ள முறைப்படி வேண்டுகோள் விடுப்பதெனவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சிறப்புப் பிரார்த்தனை:
பின்னர், சமூக சேவகர் ஜனாப் துளிர் ஹாஜி M.L ஷேகனா லெப்பை அவர்களின் உடல்நலனுக்காக, ஹாஃபிழ் அப்துல்லாஹ் முஜாஹித் சிறப்புப் பிரார்த்தனை இறைஞ்சினார். அனைவரும் இப்பிரார்த்தனையில் பங்கேற்றனர்.
நன்றியுரைக்குப் பின் துஆ, ஸலவாத்துடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில் மன்ற உறுப்பினர்கள் பலர் தம் மனைவி, மக்களுடன் கலந்துகொண்டனர்.
கூட்ட நிகழ்ச்சிகள் நிறைவுற்றதும் அவர்கள் தமக்குள் கலந்துரையாடி மகிழ்ச்சிகளைப் பரிமாறிக்கொண்டனர். கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே மறுபுறத்தில் பெண்கள் தனியாக அமர்ந்து கதைத்தனர். குழந்தைகள் துள்ளி விளையாடி மகிழ்ந்தனர்.
இவ்வாறு பெங்களூரு காயல் நல மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
கே.கே.எஸ் முஹம்மத் ஷாலிஹ்,
ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணைச்செயலாளர்,
காயல் நல மன்றம் – பெங்களூர்.
தொடர்பு எண்: +91 98450 05093. |