இந்தியாவின் 63ஆவது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. காயல்பட்டினம் மகாத்மா காந்தி ஞாபகார்த்த வளைவருகில், வழமை போல இவ்வாண்டும் அனைத்து சமுதாய மக்கள் குழுமம் சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க துணைத்தலைவரும், புதுப்பள்ளி தலைவருமான ஹாஜி எஸ்.எம்.உஸைர் விழாவிற்குத் தலைமை தாங்கினார். நகரப் பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர். ஜே.ஏ.லரீஃப் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, விழா ஒருங்கிணைப்பாளர் ஆர்.எஸ்.கோபால் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். நகர்நல ஆர்வலர் ஹாஜி ஏ.எஸ்.ஜமால் என்ற ஜமால் மாமா, முஹ்ஸின் மற்றும் பலர் உரையாற்றினர்.
இவ்விழாவில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, தேசிய கொடியேற்றி வைத்து, வாழ்த்துரை வழங்கினார்.
பின்னர், இவ்விழாவை முன்னிட்டு அண்மையில் காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்ட - நகரின் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, இன்று காலையில் ஐக்கிய விளையாட்டு சங்க வளாகத்தில் நடைபெற்ற குறுவேக மிதிவண்டிப் போட்டி (Slow cycle race) உள்ளிட்ட போட்டிகளில் வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நன்றியுரைக்குப் பின், நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
|