காயல்பட்டினம் நகராட்சி சேவைகளில் பொதுமக்களுக்குள்ள நியாயமான குறைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் அவற்றை சரிசெய்திடும் பொருட்டு, மாதந்தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டுமென கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதியன்று நடைபெற்ற காயல்பட்டினம் நகர்மன்றக் கூட்டத்தில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா முன்மொழிய தீர்மானமியற்றப்பட்டது.
அதனடிப்படையில், முதல் கூட்டம் 25.01.2012 அன்று (நேற்று) மதியம் 03.00 மணியளவில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா தலைமையில், நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது.
நகராட்சி வெளிவளாகத்தில் பெயர்பதிவு செய்யப்பட்டது. நகர்மன்ற உறுப்பினர் இ.எம்.சாமி, அலுவலர் அஜீத் குமார் ஆகியோர், குறைதீர்க்க வந்தோரின் பெயர்களைப் பதிவு செய்து, அனுமதிச் சீட்டு (டோக்கன்) வழங்கினர்.
நகர்மன்ற கூட்டரங்கில், ப்ளான் அப்ரூவல், பொதுப்பணி, சுகாதாரம், சொத்து வரி, குடிநீர் வினியோகம், தெருவிளக்கு ஆகிய துறைகளுக்கு தனித்தனி மேஜைகள் அமைக்கப்பட்டு, அந்தந்த துறைசார் அதிகாரிகளும், அலுவலர்களும் பொறுப்பளிக்கப்பட்டிருந்தனர்.
அனுமதிச் சீட்டு (டோக்கன்) பெற்று உள்ளே வந்த பொதுமக்களிடமிருந்து கூட்டரங்க நுழைவாயிலில் நகர்மன்றத் தலைவர் மனுக்களைப் பெற்று, குறைகளை விசாரித்தார்.
முன்னிலை வகித்த நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கண்ணையா, நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் ஆகியோர் அம்மனுக்களை துறைவாரியாகப் பிரித்தெடுத்து, அந்தந்த துறை அதிகாரிகளிடம் அவற்றை அனுப்பி வைத்தனர்.
பின்னர் பொதுமக்கள், தம் குறைகளை துறைசார் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களிடம் நேரடியாக முறையிட்டனர். குறைகளைக் கேட்டறிந்த அதிகாரிகள், குறைந்தபட்சம் இரண்டு தினங்களிலும், அதிகபட்சம் இரண்டு வாரங்களுக்குள்ளும் பெறப்பட்ட மனுக்களின்படி குறைகள் சரிசெய்யப்படும் என உறுதியளித்தனர்.
மாலை 05.00 மணியளவில் முகாம் நிறைவுற்றது. நகர்மன்ற உறுப்பினர்களான ஏ.லுக்மான், வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா, சாரா உம்மாள், கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, எம்.ஜஹாங்கீர், ஜெ.அந்தோணி, எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய், ஏ.ஹைரிய்யா, எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், ரெங்கநாதன் என்ற சுகு, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், ஆர்.பாக்கியஷீலா, எஸ்.ஏ.சாமு ஷிஹாப்தீன் ஆகியோர் முகாமில் பங்கேற்று துணைப்பணியாற்றினர்.
பின்னர், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா - முகாம் நிகழ்வுகள் குறித்து செய்தியாளர்களுக்கு பின்வருமாறு அறிக்கை சமர்ப்பித்தார்:-
பொதுமக்களிடமிருந்து மொத்தம் 63 மனுக்கள் பெறப்பட்டுள்ளன...
பெறப்பட்ட மனுக்களில், குடிநீர் வினியோகக் குறைபாடுகள் தொடர்பாக 19 கோரிக்கைகளும்,
மின் கம்பங்கள், தெரு விளக்குகள் தொடர்பாக 9 கோரிக்கைகளும்,
திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக 4 கோரிக்கைகளும்,
சாலை வசதி மற்றும் பராமரிப்பு தொடர்பாக 6 கோரிக்கைகளும்,
குடிநீர் வினியோகக் குழாய் வால்வு தொட்டி தொடர்பாக 3 கோரிக்கைகளும்,
சாலைகளில் வேகத்தடை அமைத்தல் தொடர்பாக 2 கோரிக்கைகளும் பெறப்பட்டுள்ளன...
கோரிக்கைகள் பெரும்பாலும் குடிநீர் வினியோகம் குறித்தும், சுகாதாரம் தொடர்பாகவுமே அமைந்திருந்தன...
பெற்ற கோரிக்கைகளை முறைப்படி பரிசீலித்து, அவற்றை குறைந்தபட்சம் 2 நாட்களிலும், அதிகபட்சம் இரண்டு வாரங்களுக்குள்ளும் நிறைவேற்றிக் கொடுக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது...
இவ்வாறு, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் அடுத்து பேசிய நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கண்ணையா தெரிவித்ததாவது:-
காயல்பட்டினம் நகராட்சியில் இரண்டாவது பைப்லைன் திட்டத்திற்காக மீளாய்வு செய்யப்பட்ட செலவு மதிப்பீடு (revised estimation) நகராட்சி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது... இன்னும் அலுவலக அனுமதி கிடைக்கவில்லை...
ரூபாய் 50 லட்சம் மதிப்பில், குப்பை சேகரிக்கும் நவீன வாகனம் வாங்க நகர்மன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு, அதற்கான அனுமதி அரசிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது...
நகரில் ப்ளாஸ்டிக் கலந்த தார் சாலைகள் ரூ.10.6 லட்சம் மதிப்பீட்டில், 1.045 கிலோமீட்டர் நீளத்தில், நகரின் மூன்று பகுதிகளில் புதிதாக அமைக்கப்படவுள்ளது...
இவ்வாறு நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கண்ணையா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இம்முகாமில் தங்களிடமிருந்து பெறப்பட்ட குறைகள் உடனுக்குடன் தீர்க்கப்படுமானால், பொதுமக்களாகிய தாங்கள் அனுதினமும் நகராட்சிக்கு வந்து அலைய வேண்டிய அவசியமிராது என்றும், குறைகள் உடனுக்குடன் தீர்க்கப்பட்டால் இம்முகாம் மிகுந்த பயனளிக்கக் கூடியது என்பதில் இருவேறு கருத்தில்லை என முகாமில் கலந்துகொண்ட பொதுமக்களில் சிலர் கருத்து தெரிவித்தனர். |