இந்தியாவின் 63ஆவது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. காயல்பட்டினம் மகுதூம் தெருவில் இயங்கி வரும் ரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளியில் இன்று காலையில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
அப்பள்ளியின் இயக்குனரும், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவருமான ஐ.ஆபிதா விழாவிற்குத் தலைமை தாங்கினார். ஆண்டுதோறும் இப்பள்ளியில் நடத்தப்படும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாவில், பள்ளி மழலை மாணவ-மாணவியரின் பெற்றோருள் ஒருவர் கொடியேற்றுவது வழமை. அந்த அடிப்படையில் இம்முறை காதிர் ஒலி ஸபூரா என்ற பெண்மணி தேசிய கொடியேற்றினார்.
காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான இ.எம்.சாமி, ஜே.அந்தோணி, கே.ஜமால் ஆகியோர் மழலையருக்கு தேசியக்கொடிகளை வழங்கினர். நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, உறுப்பினர் பத்ருல் ஹக் ஆகியோர் அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்தினர்.
பின்னர், அப்பள்ளியின் மழலையர் இணைந்து கொடி வாழ்த்துப்பாடல் பாடினர். அதனைத் தொடர்ந்து, நகர்நல ஆர்வலர் ஹாஜி ஏ.எஸ்.ஜமால் முஹம்மத் என்ற ஜமால் மாமா, காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான கே.ஜமால், இ.எம்.சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பள்ளி இயக்குனரும், நகர்மன்றத் தலைவருமான ஐ.ஆபிதா அனைவருக்கும் நன்றி தெரிவிக்க, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
விழாவில், காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன் ஆகியோரும், ஹாஜி எஸ்.எம்.கலீல், ஏ.எஸ்.புகாரீ உள்ளிட்ட பொதுநல ஆர்வலர்களும், பள்ளி மழலை மாணவ-மாணவியரின் பெற்றோரும் கலந்துகொண்டனர்.
விழா ஏற்பாடுகளை, பள்ளி ஆசிரியையருடன் இணைந்து, ஃபாஹிமா, மொகுதூம் ஃபாத்திமா மாலிக் மற்றும் பலர் செய்திருந்தனர். |