காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் ஆங்கிலத்துறை சார்பில், அத்துறைசார் தகவல்கள் அடங்கிய கண்காட்சி மற்றும் போட்டி, இம்மாதம் 23, 24 தேதிகளில், கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்டது.
கல்லூரியின் நிறுவனர் தலைவர் ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் இந்நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார். கல்லூரி முதவர் முனைவர் மெர்ஸி ஹென்றி முன்னிலை வகித்தார்.
Macbeth, Prothalamion, Merchant of Venice, Robinson Crusoe, Paradise Lost, Ode to West Wind உள்ளிட்ட பல்வேறு இலக்கிய தலைப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்ட அரிய காட்சிப் பொருட்கள் அத்துறை மாணவியரால் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
அத்துறையின் அனைத்து மாணவியர் மற்றும் அலுவலர்கள் இணைந்து இக்கண்காட்சியில் ஆர்வமுடன் பங்கேற்று, பொருட்களை காட்சிக்கு வைத்திருந்தனர். அவற்றுள், மூன்றாமாண்டு ஆங்கிலத்துறை மாணவியரால் வைக்கப்பட்டிருந்த Prothalamion என்ற தலைப்பிலான காட்சிப்பொருள் சிறந்ததாகத் தேர்வுசெய்யப்பட்டது.
ஆங்கிலத் துறையில் மாணவியர் பாடத்தில் கற்றதை விட கூடுதலாக தகவல்களை அறிந்துகொள்வதற்கும், அத்துறையில் அவர்களுக்குள் புதைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணர்வதற்குமே இக்கண்காட்சி மற்றும் போட்டிகள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கண்காட்சியை கல்லூரியின் அனைத்துத் துறைகளைச் சார்ந்த மாணவியர் மற்றும் பள்ளி மாணவியர் பார்வையிட்டனர்.
கண்காட்சி ஏற்பாடுகளை கல்லூரியின் ஆங்கில இலக்கியக் கழக செயலாளர் ஜே.கவ்சல்யா மற்றும் கல்லூரியின் ஆங்கிலத்துறை தலைவர் சி.ஷோலா பர்னாந்து ஆகியோர் செய்திருந்தனர். |