காயல்பட்டினம் நகராட்சி சேவைகளில் பொதுமக்களுக்குள்ள நியாயமான குறைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் அவற்றை சரிசெய்திடும் பொருட்டு, மாதந்தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டுமென கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதியன்று நடைபெற்ற காயல்பட்டினம் நகர்மன்றக் கூட்டத்தில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா முன்மொழிய தீர்மானமியற்றப்பட்டது.
அதனடிப்படையில், ஜன.25 அன்று நடத்தப்பட்ட மக்கள் குறைதீர் முகாமின்போது பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட குறைதீர் விண்ணப்பங்களில், ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டிய குறைகள் குறித்த ஆய்வுப் பணி நேற்று துவங்கியது.
நகரில் அண்மையில் அமைக்கப்பட்ட புதிய சிமெண்ட் சாலைகளின் தரத்தை சந்தேகித்தும் அம்முகாமின்போது பொதுமக்களால் மனு அளிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக, காயல்பட்டினம் சித்தன் தெரு மற்றும் நெய்னார் தெருக்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலைகளை நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா நேரில் பார்வையிட்டார். அவருடன், நகர்மன்ற ஆணையர் (பொறுப்பு) வெ.கண்ணையா, பணி மேற்பார்வையாளர் செல்வமணி, தொழில்நுட்ப உதவியாளர் செந்தில் குமார், சுகாதார துணை ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் வந்திருந்தனர்.
ஆய்வுப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கையில் அவ்விடத்திற்கு நேரில் வந்த - சிறிய குத்பா பள்ளி ஜமாஅத் சார்பில் அளித்தவர்கள், மக்கள் நலனைப் பற்றி சிறிதும் அக்கறை கொள்ளாமல், தான் பொருள் சம்பாதித்தால் போதும் என்ற ரீதியிலேயே இச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினர்.
சித்தன் தெருவிலும், நெய்னார் தெருவிலும் சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டு பல நாட்களுக்குப் பின்னரே ஓரக்கல் அமைக்கப்பட்டதாகவும், அதற்குப் பிறகு அச்சாலையை இன்று வரை தரை மட்டத்துடன் சமப்படுத்தாமல் காலந்தாழ்த்தி வருவதால், ஏராளமானோர் கீழே விழுந்து எலும்பு முறிவுகளைச் சந்திப்பதாகவும் தெரிவித்த அவர்கள், எல்லோரையும் பரலோகம் அனுப்பிய பின்னர்தான் இச்சாலைகள் சரிசெய்யப்படுமா என்று கேள்வியெழுப்பினர்.
சிமெண்ட் சாலைகள் அமைக்க நிர்ணயிக்கப்பட்ட அளவில் முறையாக கலவைகள் பயன்படுத்தப்படவில்லை என்று தெரிவித்த அவர்கள், அடுத்து ஒரு பருவமழையை சந்தித்தால், இச்சாலைகள் எல்லோரும் பார்க்கும் வகையில் பல்லிளிக்கும் என்றும் தெரிவித்தனர்.
ஒப்பந்தக்காரரிடம் வெறுமனே ஒப்பந்தத்தை வழங்கிவிட்டு, சாலையமைப்புப் பணிகள் எதையுமே நகராட்சி அதிகாரிகள் முழுமையாக நேரில் நின்று பார்வையிடவில்லை என அப்போது அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
பின்னர், நெய்னார் தெருவில் புதிதாக அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலையின் ஓரத்தில் பதிக்கப்பட்ட கற்கள் மீது பொதுமக்களில் ஒருவர் குறைந்த அழுத்தத்துடன் கால் வைத்துக் காண்பிக்க, அது வெறுமனே அடுக்கி வைக்கப்பட்ட அட்டைப்பெட்டிகள் போல் பெயர்ந்து வந்தது.
அதனைத் தொடர்ந்து, அக்கற்களில் ஒன்றைக் கையில் எடுத்து அவர்கள் நசுக்க, அது பொடிப்பொடியாகப் பெயர்ந்து, வெறும் மணலாக கீழே விழுந்தது.
இதுதான் சாலை மற்றும் சாலையோரப் பணிகளின் தரம் என்று அப்போது அவர்கள் நகர்மன்றத் தலைவர் மற்றும் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஒப்பந்தக்காரரிடம் விளக்கம் கேட்குமாறு நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் விசாரிக்கப்பட்டபோது, கலவைகள் அனைத்தும் சரியான அளவிலேயே போடப்பட்டதாகவும், போதிய பணியாட்கள் இல்லாத காரணத்தால், சிமெண்ட் சாலையோரங்களை தரையுடன் சமப்படுத்த காலதாமதமாகிவிட்டதாகவும் தெரிவித்ததாகத் தெரிகிறது.
அவர்களை எச்சரித்துப் பேசிய அதிகாரிகள், எஞ்சிய பணிகளை குறைவின்றி விரைந்து முடித்துத் தருமாறும், பகுதி மக்கள் பெரும் கொந்தளிப்பில் இருப்பதாகவும், பணிகளில் குறைவேற்பட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்றம் தெரிவித்தனர்.
இந்நிகழ்வின்போது, அப்பகுதி பொதுமக்களான பி.எம்.ஏ.முஹ்யித்தீன், கல்ஃப் ட்ராவல்ஸ் செய்யித், அபுசாபு ஷாஹுல் ஹமீத், பிலால் மற்றும் பலர் உடனிருந்தனர். |