மும்பையில் வரும் பிப்ரவரி 04, 05 தேதிகளில் சர்வதேச கராத்தே போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இலங்கை, சிங்கப்பூர்,நேபால், பூடான் ஆகிய நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். காயல்பட்டினத்திலிருந்து 7 மாணவர்கள் இப்போட்டியில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இம்மாணவர்களுக்கு திறமையிருந்தும், பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களாக இருப்பதால், போட்டியில் கலந்துகொள்ள எதிர்கொள்ள வேண்டிய செலவினங்களுக்கு உதவிகளை எதிர்பார்ப்பதாகவும், மும்பை செல்ல ரயில் பயணச்சீட்டு மட்டும் முன்பதிவு செய்துள்ள நிலையில், போட்டி நுழைவுக் கட்டணமான - ஒரு போட்டியாளருக்கு ரூ.1,600 தொகை, மும்பையில் 4 நாட்கள் தங்க ஏற்பாடு, உணவு மற்றும் இதர செலவினங்களுக்கு அனுசரணை எதிர்பார்ப்பதாக இம்மாணவர்களின் பயிற்சியாளரான சென்செய் ஏ.இர்ஃபான் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், இம்மாணவர்கள் தங்குவதற்கும், அவர்களுக்கான உணவுக்கும் பொறுப்பேற்பதாக மும்பைவாழ் காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வம் தெரிவித்துள்ளனர். தாங்கள் வசிக்கும் பகுதிக்கு வரும் தாயக மாணவர்களுக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய ஆவலோடு காத்திருப்பதாக, மும்பைவாழ் காயல் மாணவர்கள் குழுமத்தின் சார்பாக, மவ்லவீ ஹாஃபிழ் ஏ.டபிள்யு.அப்துல் காதிர் புகாரீ தெரிவித்துள்ளார்.
கராத்தே போட்டியில் கலந்துகொள்வதற்காக இதுவரை இரண்டு மாணவர்களுக்கு மட்டுமே அனுசரணை கிடைக்கப்பெற்றிருப்பதாக, அவர்களின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. |