காயல்பட்டினம் நகர்மன்றத்தின் ஜனவரி மாதத்திற்கான மாதாந்திர கூட்டத்தில், நகர்நலனுக்கான பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதோடு, முன்னாள் உறுப்பினர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
காயல்பட்டினம் நகர்மன்றத்தின் மாதாந்திர கூட்டம் 31.01.2012 செவ்வாய்க்கிழமை (நேற்று) காலை 11.00 மணிக்கு, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா தலைமையிலும், துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன், ஆணையர் (பொறுப்பு) வெ.கண்ணையா ஆகியோர் முன்னிலையிலும், நகர்மன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது.
கோரிக்கைகள்:
இக்கூட்டத்தில், நகரின் பொதுவான தேவைகளை தலைவரும், வார்டுகளுக்கான தனித்தேவைகளை உறுப்பினர்களும் தீர்மான முன்வடிவாக மன்றத்தில் முன்வைத்தனர்.
கடையக்குடிக்கு புதிய சாலை...
கோமான் தெருவிலிருந்து கோஸ்மரை தர்ஹா வரை புதிய சாலை...
அருணாச்சலபுரம் மயானக் கூறை...
எரியாத தெருவிளக்குகளை சரிசெய்தல்...
கோமான் மேலத்தெருவில் நிலவும் குடிநீர் வினியோகப் பிரச்சினையை சரிசெய்தல்...
தேவைக்கேற்ப குடிநீரை முழுமையாகப் பெற்றிட கோமான் தெருவில் போர்வெல் அமைத்தல்...
புதிதாக அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலையிலுள்ள குறைகளை ஒப்பந்தக்காரர் மூலம் சரிசெய்தல்... செய்ய மறுத்தால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, இனி அவரை ஒப்பந்தம் பெற தகுதியற்றவராக அறிவித்தல்...
கழிப்பறை கட்டிக்கொடுக்கும் திட்டத்தின்கீழ் கோமான் தெருக்களையும் இணைத்தல்...
நகராட்சியில் பணி வெற்றிடங்களை நிரப்பல்...
ஆகிய கோரிக்கைகளை, 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் முன்வைத்தார்.
06ஆவது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் மூன்று நாட்களுக்கொருமுறையேனும் குடிநீர் வினியோகம்...
நகராட்சிப் பகுதிகளில் சுகாதாரக் கேடாகவும், பாதுகாப்பற்ற நிலையிலும் இருக்கும் குடிநீர் வினியோக வால்வு தொட்டிகளுக்கு மேல் மூடி அமைத்து பராமரித்தல்...
துஷ்டராயர் (ஆஸாத்) தெருவில் புதிய தார் சாலை அமைத்தல்...
சித்தன் தெரு - ஆஸாத் தெரு குறுக்குச் சாலையை புதிய தார் அல்லது சிமெண்ட் சாலையாக அமைத்தல்...
அம்பலமரைக்கார் தெரு சிமெண்ட் சாலையில் படிந்துள்ள வெற்று மணலை அகற்றல்...
ஆகிய கோரிக்கைகளை, 06ஆவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முகைதீன் முன்வைத்தார்.
2011ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவமழையின்போது தாழ்வான பகுதிகளில் தேங்கிய நீரை அப்புறப்பத்த நகர்மன்றத் தலைவர், ஆணையர், பொறியாளர், பொதுப்பணி மேற்பார்வையாளர் மேற்பார்வையில் நகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட நீரகற்று நடவடிக்கைக்காக செலவழிக்கப்பட்ட ரூ.23,764 தொகைக்கு மன்ற அனுமதியும், அதில் முன்பணமாகப் பெறப்பட்ட ரூ.20,000 தொகை போக எஞ்சிய தொகையான ரூ.3,764 தொகையை ஒதுக்கீடு செய்ய மன்ற அனுமதியும், நகராட்சி நிர்வாகத்தால் கோரப்பட்டிருந்தது.
முத்தாரம்மன் கோயில் தெருவிலிருந்து சேதுராஜா தெரு செல்லும் சிமெண்ட் சாலையில் இரண்டிடங்களில் வேகத்தடை அமைத்தல்...
அச்சாலையில் இருக்கும் குடிநீர் குழாயை வேறிடத்தில் மாற்றியமைத்தல்...
முத்தாரம்மன் கோயில் தெரு சிமெண்ட் சாலை, குலாம் சாகிப் தம்பி தோட்டம் தார் சாலை ஆகியவற்றிலுள்ள பழுதுகளை சரிசெய்தல்...
ஆகிய கோரிக்கைகளை 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி முன்வைத்தார்.
பயனாளி ஒருவருக்கு வழங்கப்பட்ட குடிநீர் கட்டண ஒப்புகைச் சீட்டில் தொகையை தவறுதலாக மாற்றிப் பதிவுசெய்து அளித்ததால் அவருக்கு ஏற்பட்ட இழப்புத் தொகையை வழங்க மன்ற அனுமதி நகராட்சி நிர்வாகத்தால் கோரப்பட்டது.
04ஆவது வார்டுக்குட்பட்ட சாலைகளில் படிந்துள்ள மணலை அகற்றல்...
குறுக்கத் தெரு, அஹ்மத் நெய்னார் பள்ளி ஆகிய இடங்களில் புதிதாக வேகத்தடை அமைத்தல்...
பயன்படுத்தப்படாதிருக்கும் மகுதூம்பள்ளி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இயக்குதல்...
தெருக்களில் சுற்றித் திரியும் நாய்கள் மற்றும் மாடுகளை அப்புறப்படுத்தல்... அவற்றை பாதுகாக்காத உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தல்...
ஆகிய கோரிக்கைகளை 04ஆவது வார்டு உறுப்பினர் கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா முன்வைத்தார்.
சிவன்கோயில் தெரு மஸ்ஜித் ரஹ்மான் பள்ளி அருகிலுள்ள குழல் விளக்கை சோடியம் விளக்காக மாற்றியமைத்தல்...
வடக்கு உச்சினி மாகாளியம்மன் கோயில் தெருவில் தண்ணீர் தொட்டி அமைந்துள்ள தெருவில் புதிய சாலை அமைத்தல்...
சீதக்காதி நகர் - இரத்தினபுரி சாலையில் புதிய குடியிருப்புகள் பகுதியிலுள்ள மின் கம்பத்தில் சோடியம் விளக்கு அமைத்தல்...
அக்பர்ஷா முதல் தெருவில் தாழ்நிலையிலுள்ள வால்வுத் தொட்டியை உயர்த்தி, குடிநீர் வினியோகக் குறையை சரிசெய்தல்...
மங்கள விநாயகர் தெருவில் ஒழுகும் குடிநீர் வால்வுத்தொட்டியை பழுது நீக்கல்...
மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியைச் சுற்றி சுற்றுச்சுவர் அமைத்தல்... அத்தொட்டியருகிலுள்ள வால்வு தொட்டியின் சுகாதாரக் கேட்டைப் போக்கி, பழுது நீக்கல்...
15ஆவது வார்டுக்குட்பட்ட 10 இடங்களில் குப்பை தொட்டிகள் அமைத்தல்...
ஆகிய கோரிக்கைகளை 15ஆவது வார்டு உறுப்பினர் கே.ஜமால் முன்வைத்தார்.
09ஆவது வார்டில் சுத்தமான குடிநீர் வினியோகம்...
மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சுத்தம் செய்து, போர்க்கால அடிப்படையில் வேலியமைத்தல்...
அடிக்கடி பழுதாகும் மின் விளக்குகள், டைமர் கருவிகளை துரிதமாக சரிசெய்யும் பொருட்டு, மின்வாரியத்துடன் முறைப்படி பேசி பிரச்சினையின்றி நடவடிக்கைகள் எடுத்தல்...
பொதுப்பாதைகளில் குவியும் குப்பைகளை உடனுக்குடன் சரிசெய்தல்...
தெருநாய்களை கட்டுப்படுத்தல்...
ஆகிய கோரிக்கைகளை 09ஆவது வார்டு உறுப்பினர் ஹைரிய்யா முன்வைத்தார்.
நகராட்சி வளாகத்தில் ஆடுகள் அறுக்கப்படுவதை நிறுத்தல்...
பெரிய சதுக்கை முதல் கொடிமர சிறுநெய்னார் பள்ளி வரையிலுள்ள குடிநீர் வினியோகப் பிரச்சினையை சரிசெய்ய 350 மீட்டர் நீளத்தில் பிவிசி குழாய் பதித்தல்...
சதுக்கை சந்திப்பிலிருந்து கிழக்கே செல்லும் - அடிக்கடி மழை நீர் தேங்கும் தாழ்நிலையிலுள்ள சாலையை உயர்த்தியமைத்தல்...
02ஆவது வார்டுக்குட்பட்ட குடிநீர் வினியோக வால்வு தொட்டிகளுக்கு மேல்மூடி அமைத்தல்...
அம்பல மரைக்கார் தெருவில் பழுதடைந்துள்ள குடிநீர் வால்வு தொட்டியை சரிசெய்தல்...
பள்ளிக்கூடங்கள் இயங்கும் பகுதிகளிலும், ஆட்டோ நிறுத்தங்களிலும் வேகத்தடை அமைத்தல்...
ஆகிய கோரிக்கைகளை 02ஆவது வார்டு உறுப்பினர் வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா முன்வைத்தார்.
மங்களவாடியில் குடிநீர் குழாய் விரிவாக்கப் பணிக்கு பெறப்பட்ட ஒப்பந்தப் புள்ளிகளில் குறைந்த தொகையில் கோரப்பட்ட ஒப்பந்தத்திற்கு மன்ற அனுமதி கோரி நகராட்சி நிர்வாகத்தால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
சிங்கித்துறை மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் செல்லும் பிரதான குழாயிலுள்ள உடைப்பை சரிசெய்தல்...
அப்பகுதியில் குடிநீர் சரியாக வராமலிருக்கும் இடங்களிலுள்ள வினியோகக் குழாய்களை தாழ்நிலையில் பதித்தல்...
கீழநெய்னார் தெரு புதிய சாலையில் இரண்டிடங்களில் வேகத்தடை அமைத்தல்...
சிங்கித்துறை முகப்பிலுள்ள கீழநெய்னார் தெரு சாலையின் பழுதை சரிசெய்தல்...
மழைநீரகற்றும் பணியின்போது உடைந்த கீழநெய்னார் தெரு குடிநீர் வினியோகக் குழாயை சரிசெய்தல்...
ஆகிய கோரிக்கைகளை 07ஆவது வார்டு உறுப்பினர் ஜே.அந்தோணி முன்வைத்தார்.
கோமான்தெரு, அருணாச்சலபுரம், கொம்புத்துறை செல்லும் பிரதான சாலையில் மழைநீர் அகற்றத்திற்காகத் தோண்டப்பட்ட பாதைகளை மூடி சாலையை சரிசெய்தல்...
இக்கோரிக்கையை 03ஆவது வார்டு உறுப்பினர் பி.எம்.எஸ்.சாரா உம்மாள் முன்வைத்தார்.
நகராட்சி அலுவலக கணிப்பொறி துறையின் பொறியியல் பிரிவிற்கு இன்டர்நெட் இணைப்பிற்காக தேவைப்படும் ஜங்ஷன் பாக்ஸ் வாங்க ரூ.850 மதிப்புத் தொகைக்கு மன்ற அனுமதி நகராட்சி நிர்வாகத்தால் கோரப்பட்டது.
நகராட்சி பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் ப்ரிண்ட்டருக்கான இரண்டு டோனர்களை மறுநிரப்பு செய்ய ரூ.1,200 தொகைக்கு மன்ற அனுமதி நகராட்சி நிர்வாகத்தால் கோரப்பட்டது.
நகராட்சி சமூக அமைப்பாளர் பொறுப்பு வகித்த ஜான்சிராணியின் பயணச் செலவினங்களுக்கு பயணப்படி வழங்க மன்ற அனுமதி நகராட்சியால் கோரப்பட்டது.
நகராட்சி கணனி பிரிவில் பழுதடைந்துள்ள யு.பி.எஸ். பழுது நீக்கம் செய்த வகைக்கு ரூ.9,000 தொகை வழங்க மன்ற அனுமதி நகராட்சியால் கோரப்பட்டது.
நகராட்சி சுகாதாரப் பணியாளர்களுக்கு சீருடை வழங்குவதற்கான உத்தேச செலவினத்திற்கு மன்ற அனுமதி நகராட்சியால் கோரப்பட்டது.
தைக்கா தெரு, புதுக்கடைத் தெருவில் பழுதடைந்துள்ள சாலைகள், தைக்கா தெருவிற்கு முன்புறமுள்ள் கான்க்ரீட் சாலைகளை புதிய கான்க்ரீட் சாலையாக அமைத்தல்...
புதுப்பள்ளியருகில் மழைநீர் தேங்காவண்ணம் உயர்த்தப்பட்ட புதிய சாலையமைத்து, அதன் ஓரத்தில் மழைநீர் வடிகால் அமைத்தல்...
புதுப்பள்ளி மையவாடியை ஒட்டியுள்ள ஓடையில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றல்...
பொது நடைபாதையில் 3 மின்கம்பங்களில் குழல் விளக்குகள் அமைத்தல்...
மருத்துவர் தெரு, மேலப்பள்ளி தெருவில் புதிய தார் சாலை அமைத்தல்...
மருத்துவர் தெருவில் குடிநீர் பொதுக்குழாய் அமைத்தல்...
16ஆவது வார்டு பகுதியில் சாக்கடை கலந்து வரும் குடிநீரைத் தவிர்த்து நல்ல நீர் வினியோகித்தல்...
குடிநீர் வராத இணைப்புகளுக்கு சீரான குடிநீர் வினியோகம்...
தைக்கா தெரு வால்வு தொட்டிக்கு மேல் மூடி அமைத்தல்...
மருத்துவர் தெருவில் வாகனப் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள சம்புத்தொட்டியை போக்குவரத்திற்கேற்றபடி அமைத்தல்...
நகராட்சி பணி வெற்றிடங்களை நிரப்ப தீர்மானம் நிறைவேற்றி உயரதிகாரிகளுக்கு அனுப்பல்...
புதிய பணியிடங்களை தோற்றுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளல்...
ஆகிய கோரிக்கைகளை 16ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.ஏ.சாமு ஷிஹாப்தீன் முன்வைத்தார்.
கூலக்கடை பஜாரிலுள்ள பவுசியா சூப்பர் மார்க்கெட் பகுதியில் நடைபாதையில் இடையூறாக உள்ள பொருட்களை அகற்றல்... மூன்று மற்றும் நாற்சக்கர வாகனங்கள் அவ்வழியே செல்லாதிருக்க, சாலையின் இருபுறத்திலும் தடுப்புக் கல் அமைத்தல்...
ஹாஜியப்பா பள்ளியையொட்டி நிற்கும் ஆட்டோக்களை அவ்விடத்திலிருந்து அகற்றல்...
மின் விளக்கில்லா கம்பங்களில் புதிய மின் விளக்குகள் அமைத்தல்...
பேருந்து நிலையத்தில் பயணியர் வசதிக்காக புதிய குடிநீர் தொட்டி அமைத்தல்...
எல்.எஃப்.ரோடு - ஜெய்லானி நகர் முதல் ரோட்டில் தென்வடலாக புதிய தார் சாலை அமைத்தல்...
ஆகிய கோரிக்கைகளை 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் முன்வைத்தார்.
சுலைமான் நகரிலிருந்து தேங்காங் பண்டக சாலை நோக்கிச் செல்லும் (அல்அமீன் ஆங்கிலப்பள்ளி அமைந்துள்ள) பகுதியில் புதிய தார் சாலை அமைத்தல்...
இக்கோரிக்கையை 08ஆவது வார்டு உறுப்பினர் எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா முன்வைத்தார்.
மறுசுழற்சி செய்யத்தக்க ப்ளாஸ்டிக் கழிவு நிர்வாகம் மற்றும் பயன்பாடு, ப்ளாஸ்டிக் தயாரிப்பு - விற்பனை - பொதுமக்களின் ப்ளாஸ்டிக் பயன்பாடு ஆகியவை குறித்து மத்திய அரசின் விரிவான வரையறையறிக்கைப் படி செயல்பாட்டைக் கொணர மன்ற அனுமதி நகராட்சியால் கோரப்பட்டது.
காயல்பட்டினம் நகராட்சி சிறப்பு சாலைத்திட்டம் 2010-11இன் கீழ், நகராட்சியின் 13 சாலைகளை ரூ.200 லட்சம் செலவில் அமைக்க, நகராட்சி நிர்வாக ஆணையரின் நிர்வாக அனுமதி பெற்று ஒப்பந்தமளிக்கப்பட்டது. அதில், இதுவரை முடிக்கப்படாத புதுக்கடைத் தெரு ப்ரிண்ஸ் சாலை உள்ளிட்ட இரண்டு சாலைகளில், பழைய சிமெண்ட் சாலையை அகற்றி புதிய சாலை அமைக்க தற்போதைய ஒப்பந்தத்தில் வழிவகை செய்யப்படாததால், இவ்விரு பணிகளையும் ரத்து செய்து, ஏற்கனவே முடிக்கப்பட்டுள்ள பணிகளுக்கு பணி முடிவறிக்கை மற்றும் பயனீட்டு சான்றை சென்னையிலுள்ள நகராட்சி நிர்வாக ஆணையருக்கு அனுப்பவும் மன்ற அனுமதி நகராட்சி நிர்வாகத்தால் கோரப்பட்டது.
பெரிய நெசவுத் தெருவில் அமைக்கப்பட்டுள்ள புதிய குடிநீர் வினியோகக் குழாயை பழைய குழாய் அமைந்துள்ள மட்டத்தில் மாற்றியமைக்க உத்தேச மதிப்பீடான ரூ.11,000 தொகைக்கு மன்ற அனுமதி நகராட்சி நிர்வாகத்தால் கோரப்பட்டது.
காயல்பட்டினம் கடற்கரை ஓரங்களில் வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்றி, சுத்தம் செய்து, மணற்பரப்பை பெண்கள் பாதுகாப்பு கருதி, ஆண்கள் - பெண்கள் - குடும்பம் - விளையாட்டு ஆகியவற்றுக்காக நான்கு பகுதிகளாக பிரித்துத் தரும்படி பொதுநல அமைப்புகள் மூலம் பெறப்பட்ட கோரிக்கைகள் குறித்து முடிவு செய்ய நகர்மன்றத் தலைவர் தீர்மான முன்வடிவு அளித்திருந்தார்.
குத்துக்கல் தெருவில் புதிய தார் சாலை அமைத்தல்...
காட்டுத் தைக்கா தெரு அன்னை ஸ்டோர் முதல் முஹ்யித்தீன் பள்ளி வரை புதிய தார் சாலை அமைத்தல்...
ப்ரின்ஸ் வீதியில் புதிய தார் சாலை அமைத்தல்...
காட்டுத்தைக்கா தெருவில் இரண்டு மின் கம்பங்களுக்கு மின் விளக்கு அமைத்தல்...
மகுதூம் பள்ளி குடிநீர்த்தேக்கத் தொட்டியை செயல்படுத்தல்...
ஆகிய கோரிக்கைகளை 17ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஏ.அஜ்வாத் முன்வைத்தார்.
நகராட்சி பயன்பாட்டிலுள்ள அனைத்து ப்ரிண்டர்களுக்கும் டோனர் மறுநிரப்பு செய்யவும், புதிய டோனர் வாங்கவும் ரூ.60,000 உத்தேச மதிப்பீட்டுத் தொகைக்கு மன்ற அனுமதி நகராட்சி நிர்வாகத்தால் கோரப்பட்டது.
நகராட்சியின் பழுதடைந்த ஜெராக்ஸ் கருவியை சரிசெய்ய உத்தேச மதிப்பீடான ரூ.10,000 தொகைக்கு மன்ற அனுமதி நகராட்சியால் கோரப்பட்டது.
இரண்டாம் நிலை நகராட்சியான காயல்பட்டினம் நகராட்சிக்குத் தேவையான புதிய பணியிடங்களைத் தோற்றுவித்து, அனைத்து பணியிடங்களையும் நிரப்ப சென்னையிலுள்ள நகராட்சி நிர்வாக ஆணையருக்கு பிரேரனை அனுப்ப மன்ற அனுமதி நகராட்சியால் கோரப்பட்டது.
நகராட்சிப் பகுதியில், பழுதான வால்வு தொட்டிகளை சீரமைத்தல், புதிய வால்வு தொட்டிகளை அமைத்தல்...
முக்கிய இடங்களில் வேகத்தடை அமைத்தல்...
தபால் நிலையமருகிலுள்ள பழுதான பயணியர் நிழற்குடையை இடித்தகற்றல்...
சிவன்கோயில் தெரு மயான சாலையில் பாலம் அமைத்தல்...
கே.எம்.டி. மருத்துவமனை எதிரிலுள்ள மழைநீர் வடிகாலின் இருபுறத்திலும் தடுப்புச் சுவரமைத்தல்...
பேருந்து நிலைய வளாகத்திலமைந்துள்ள சுகாதார வளாகத்தை மேம்படுத்தல்...
குடிநீர் வினியோகக் குழாய்கள், பிரதான குழாய்களிலுள்ள பழுதுகளை சரிசெய்தல்...
நகராட்சி குடிநீர் பிரிவிற்குத் தேவையான வால்வுகளை வாங்கல்...
ஆகிய பணிகளுக்காக, ரூ.21.53 லட்சம் உத்தேச மதிப்பீட்டுத் தொகைக்கு மன்ற அனுமதி நகராட்சி நிர்வாகத்தால் கோரப்பட்டது.
பாஸ் நகர், நியூ காலனி, எல்.ஆர்.நகர் பகுதிகளில் சாலை வசதியில்லா இடங்களில் புதிய தார் சாலை அமைத்தல்...
தெரு நாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தல்...
சாலைகளில் சுற்றித்திரியும் ஆடு - மாடுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தல்...
எல்.ஆர்.நகர் பகுதியில் புதிதாக 4 இன்ச் அளவில் குடிநீர் வினியோகக் குழாய் அமைத்தல்...
ஆகிய கோரிக்கைகளை 14ஆவது வார்டு உறுப்பினர் பாக்கியஷீலா முன்வைத்தார்.
நகராட்சிப் பகுதியிலுள்ள மேல்மூடியில்லாத மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு மேல்மூடி அமைக்க மன்ற அனுமதி நகராட்சி நிர்வாகத்தால் கோரப்பட்டது.
மேற்கண்டவாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
கூட்டத்துளிகள்...
இரங்கல்:
அண்மையில் காலமான காயல்பட்டினம் முன்னாள் தேர்வு நிலை பேரூராட்சி உறுப்பினர் நெய்னா முஹம்மத் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், கூட்டத்தின் துவக்கமாக அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
வெளிநடப்பு:
தான் இதுவரை அளித்துள்ள கோரிக்கைகள் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படாததாகக் கூறி, 03ஆவது வார்டு உறுப்பினர் பி.எம்.எஸ்.சாரா உம்மாள் கூட்ட துவக்கத்திலேயே வெளிநடப்பு செய்தார்.
கடையக்குடி மக்கள் முறையீடு:
தமது பகுதியின் குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் எதுவும் நீண்ட காலமாக நிறைவேற்றப்படுவதில்லை என்று கூறி, அப்பகுதியைச் சார்ந்த பெண்கள் கூட்டம் நடந்தபோது குழுவாக வந்து முறையிட்டனர்.
இதுபோன்ற முறையீடுகளைத் தெரிவிப்பதற்காகவே, மக்கள் கூட்டமைப்புகளுடன் மாதாந்திர கலந்தாலோசனைக் கூட்டம், மக்கள் குறைதீர் மாதாந்திர கூட்டம் நடத்தப்படுவதாகவும், அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தியே இதுபோன்ற முறையீடுகளைச் செய்யுமாறும் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
ஊடகங்களுக்கு அனுமதி:
மன்றக் கூட்டங்களில் ஊடகங்களை அனுமதிப்பதால் தேவையற்ற பிரச்சினைகள் வருவதாகவும், எனவே அவர்களை அனுமதிக்கக் கூடாதெனவும் நகர்மன்ற துணைத்தலைவரும், 11ஆவது வார்டு உறுப்பினருமான எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் தெரிவித்தார். அதனை 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் கடுமையாக ஆட்சேபித்தார். இதனால் கூட்டம் சிறிது நேரம் காரசாரமான விவாதக் களமாக மாறியது.
நகர்மன்றத்தில் செய்தி சேகரிக்க வரும் ஊடகங்களை, அரசு சட்ட விதிகளின்படி தடுக்க இயலாது என நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா பின்னர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, ஊடகங்களிலிருந்து வந்த செய்தியாளர்களின் அடையாள ஆவணங்களை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) வெ.கண்ணையா சரிபார்த்து, அதனடிப்படையில் அவர்கள் கூட்ட அரங்கில் செய்தி சேகரிக்க அனுமதியளித்தார்.
தவணை முறையில் குடிநீர் கட்டணம் செலுத்தல்:
நீண்ட காலம் செலுத்தப்படாமல் நிலுவையிலுள்ள குடிநீர் கட்டணங்களை பயனாளிகள் தவணை முறையில் செலுத்த வாய்ப்பேற்படுத்தினால், அவர்கள் தமது நிலுவைக் கட்டணங்களை செலுத்த வாய்ப்புகள் வசதியாக இருக்குமென 06ஆவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முகைதீன் என்ற மம்மி ஹாஜியார் தெரிவிக்க, அது ஏற்கப்பட்டது.
தெரு நாய்களைக் கட்டுப்படுத்தல்:
தெரு நாய்களைக் கட்டுப்படுத்த அவற்றுக்கு அறுவை சிகிச்சை செய்து அப்புறப்படுத்த ஆவண செய்யப்பட்டு வருவதாக சுகாதார ஆய்வாளர் பொன்வேல்ராஜ் தெரிவித்தார்.
ஒரு நாய்க்கு அறுவை சிசிக்சை செய்ய ரூ.450 செலவாகும் என அப்போது நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார். “நகர்மன்ற உறுப்பினர்கள் மாதாந்திர கூட்டத்தில் கலந்துகொள்ளவே ரூ.500தான் தரப்படுகிறது... நாய்க்கு அறுவை சிகிச்சை செய்ய 450 ரூபாயா?” என்று 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் கேட்க, கூட்டரங்கே சிரிப்பலையில் மூழ்கியது.
ஒரு வார்டில் பிற உறுப்பினர் தலையிடல்:
தனது வார்டு விஷயத்தில் வேறு வார்டுகளின் உறுப்பினர்கள் தலையிடுவதை தான் வன்மையாகக் கண்டிப்பதாக 15ஆவது வார்டு உறுப்பினர் கே.ஜமால் தெரிவித்தார். நகர்நலன் கருதி யாரும் எந்த வார்டையும் பார்வையிடுவதில் தவறில்லை என, 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் அவரது கருத்தை மறுதலித்தார். இதனால் அவ்விருவரிடையே சிறிது நேரம் காரசாரமாக விவாதம் நடைபெற்றது.
துப்புரவுப் பணியாளர்களுக்கு நன்றி:
இதுவரை தான் முன்வைத்த சுகாதாரம் தொடர்பான கோரிக்கைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் பணியாற்றிய துப்புரவுப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக 09ஆவது வார்டு உறுப்பினர் அ.ஹைரிய்யா தெரிவித்தார்.
வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள மக்களைக் கணக்கெடுத்தல்:
நகராட்சிப் பகுதியில் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள மக்களை துல்லியமாகக் கணக்கெடுத்து, முகாமின்போது அளிக்க ஆயத்தமாக இருக்குமாறு அனைத்து வார்டு உறுப்பினர்களையும் நகர்மன்றத் தலைவர் கேட்டுக்கொண்டார்.
நகர்மன்றத் தலைவர் - உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுத்தல்:
நகராட்சி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படும் புதிய நடவடிக்கைகள், முடிவுகள் குறித்து நகர்மன்றத் தலைவரிடம் எல்லாக் காலங்களிலும், உறுப்பினர்களிடம் தேவை அடிப்படையிலும் கலந்தாலோசித்து, அவர்களின் ஒப்புதலுடனேயே செய்ய வேண்டுமென நகராட்சி அதிகாரிகளிடம் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
‘சிங்கித்துறை‘, ‘கொம்புத்துறை‘ :
நகராட்சியின் முதல் கூட்டத்தில் கண்டித்த பின்பும், இன்றளவும் கற்புடையார் பள்ளி வட்டத்தை ‘சிங்கித்துறை‘ என்றும், கடையக்குடியை ‘கொம்புத்துறை‘ என்றும் - அரசுப் பதிவுக்கு மாற்றமாக நகராட்சி கூட்டப் பொருளில் குறிப்பிடுவது குறித்து 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் சந்தேகம் எழுப்பினார்.
இனி வருங்காலங்களில் அது நிச்சயம் சரிசெய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆளுக்கேற்றாற்போல் நடவடிக்கை வேண்டாம்...
“கணனி தொடர்பாக இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத்தால் வைக்கப்பட்ட தீர்மான முன்வடிவில், கணனி பழுதுபார்க்க ஏற்கனவே வழங்கப்பட்ட தொகைக்கு மன்ற அனுமதி கோரப்பட்டுள்ளது...
அதே நேரத்தில், கடந்த மாதம் ஒரு பழுதை சரிசெய்ய எனது முயற்சியில் ஒருவரை அழைத்து வந்து பழுதும் சரிசெய்யப்பட்ட பின்பும், அவருக்குத் தர வேண்டிய தொகையை - கூட்டத்தில் தீர்மானம் போட்டுதான் அளிக்க முடியும் என்று கூறி மாதக்கணக்கில் தாமதிக்கப்பட்டது... இது என்ன பாரபட்சம்?” என்று 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் கேள்வியெழுப்பியதோடு, “இவ்வாறு செய்வதால்தான் ஊரில் தகுதியானவர்கள் இருந்தும் - திருநெல்வேலியிலிருந்தும், தூத்துக்குடியிலிருந்துதம் ஆள் வரவழைக்கப்பட்டு பழுது நீக்கப்படுகிறது... அதற்காக காட்டப்படும் செலவுத் தொகைகளை நாம் அப்படியே நம்ப வேண்டிய நிலையுள்ளது... செய்யப்படும் பணிக்கு எந்த உத்தரவாதமோ, மறுபரிசீலனையோ இல்லை...” என்று தெரிவித்து, பாரபட்சமற்ற முறையில் வெளிப்படையாக நிர்வாகம் செய்யுமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.
ஆள் எங்கே...?
“நகராட்சி துப்புரவுப் பணியாளர் பொறுப்பிலுள்ள ராமசாமி என்பவர் பணிக்கே வராமல், தன் சார்பாக ஒருவரை பணி செய்ய அனுப்பி, மாத ஊதியத்தை மட்டும் தவறாமல் பெற்று வருகிறாரே...? ஏன் இந்த நிலை? அவருக்குப் பகரமாக அவரே ஒருவரை பணிக்கு அனுப்பி வருகிறார்... நகராட்சி அதிகாரிகளும் அதனைக் கண்டுகொள்வதில்லையே...?
பகரமாக வரும் பணியாளர் பணியிலிருக்கும்போது ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், அதன் விளைவுகளை நகராட்சி நிர்வாகம் எவ்வாறு சந்திக்கப் போகிறது...?” எனறு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் கேள்வியெழுப்பினார்.
பேருந்து நிலை பயணியர் தரிப்பிடம் பகுதி பிரிப்பு:
பேருந்து நிலையத்திலுள்ள பயணியர் தரிப்பிடத்தை, ஆண்கள் - பெண்களுக்கென தனித்தனியே பிரித்தமைக்கும் பொருட்டு, அதன் நடுவில் தடுப்புச்சுவர் கட்ட ஒப்பதலளிக்குமாறு நகர்மன்றத் தலைவர் கேட்க, கூட்டம் அதற்கு இசைவளித்தது.
கடற்கரை பயனாளிகள் சங்கத்தினர் கருத்து:
இக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கடற்கரை பராமரிப்புப் பணிகள் குறித்து கூட்டத்தில் கருத்து தெரிவிக்க, காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்க துணைத்தலைவர் எம்.ஜே.செய்யித் இப்றாஹீம், செயலாளர் ஹாஜி எல்.எம்.இ.கைலானீ ஆகியோர் கோர, அவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது.
காயல்பட்டினம் கடற்கரையின் தற்போதைய சுகாதாரமற்ற - பாதுகாப்பற்ற நிலைகள் குறித்து சுருக்கி விளக்கிய அவர்கள், போர்க்கால அடிப்படையில் பராமரிப்புப் பணிகளை செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து தெரிவித்ததுடன், வார்டு உறுப்பினர்கள் தங்கள் பிரச்சினைகளை விட இதற்கு அவசரம் கருதி முன்னுரிமை அளிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
அதற்கு, நகர்மன்றத் தலைவர் - துணைத்தலைவர் – அனைத்து உறுப்பினர்களும் ஒன்றுபட்டு இசைவளித்தனர். அதனைத் தொடர்ந்து, இரண்டு தினங்களில் பணிகள் துவக்கப்படும் என ஆணையர் (பொறுப்பு) வெ.கண்ணையா தெரிவித்தார்.
இரண்டாம் நிலை நகராட்சி (?!)
“நம் நகராட்சியை எப்போது இரண்டாம் நிலை நகராட்சியாக்கப் போகிறீர்கள்...?” என்று 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் கேட்க, “அது ஏற்கனவே ஆகிவிட்டதே...?” என ஆணையர் விடையளிக்க, “நடைமுறையில் ஆகிவிட்டது... ஆனால் நகராட்சி அலுவலக பெயர்ப்பலகையில் இன்னும் ஆகவில்லையே...?” என்று கேட்டார். இதனால் அரங்கம் சிரிப்பொலியில் மூழ்கியது.
நூறாவது நாள்:
“பிப்ரவரி 02ஆம் தேதியன்று - நம் நகராட்சி பொறுப்பேற்று நூறாவது நாள்... அதனை முன்னிட்டு, நம் நகரை பசுமை காயலாக மாற்ற நகர் முழுக்க மரம் நடும் பொருட்டு மரம் நடுவிழா நடத்தப்படவுள்ளது...
மாவட்ட ஆட்சியர் திரு.ஆஷிஷ் குமார் இவ்விழாவில் கலந்துகொண்டு மரம் நடுகிறார்... அனைவரும் கலந்துகொள்ள அன்போடு அழைப்பு விடுக்கிறேன்... என நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரிவித்தார்.
சிறுபான்மையின பெண்களுக்கு சிறுதொழில் வாய்ப்பு:
சிறுபான்மையினருக்கு சிறுதொழில் செய்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 25 கிறிஸ்துவ பெண்கள், 25 முஸ்லிம் பெண்களை இனங்கண்டு, அவர்களுக்கு சணல் பை தயாரிக்க பயிற்சியளிக்கப்படவுள்ளதாகவும் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா கூட்டத்தில் தெரிவித்தார். |