காயல்பட்டினம் எல்.எஃப். வீதி, லக்ஷ்மிபுரம் வழியே செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
எல்.எஃப். வீதியில் சுமார் பதினைந்து நாட்களாக இதே நிலை நீடிப்பதாகவும், பலமுறை நகராட்சி குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துனரிடம் (ஃபிட்டர்) முறையிட்டும் இன்றளவும் அது சரிசெய்யப்படவில்லை என்றும், சமூக ஆர்வலர் ஆர்.எஸ்.கோபால் தெரிவித்தார்.
எல்.எஃப். வீதி குடிநீர் வினியோகக் குழாயில் உடைப்பேற்பட்டு தண்ணீர் வழிந்தோடும் இடத்தில் நீளமான தடியை உட்செலுத்தி வெளியே எடுத்துக் காண்பித்தபோது அது சுமார் 3 அடி ஆழமிருப்பது தெரியவந்தது.
பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களின் போக்குவரத்திற்கான இப்பாதையில், ஒதுங்குவதற்காக இருசக்கர வாகன ஓட்டியோ, நாற்சக்கர வாகன ஓட்டியோ அல்லது நடந்து செல்லும் ஒருவரோ இதன் மீது கால் வைத்தால் அவர்களின் நிலை என்ன என்று அவர் கேள்வியெழுப்பினார்.
இதுகுறித்து, நகராட்சி குடிநீர் குழாய் வினியோகப் பொருத்துனர் நிஸார் தெரிவித்ததாவது:-
கடந்த நகராட்சியின்போது இதுபோன்ற உடைப்புகளை சரிசெய்த வகை மற்றும் பொருட்கள் வாங்கிய வகைக்காக சுமார் இரண்டு லட்சம் ரூபாய் கணக்கு காண்பித்தோம். அப்போதைய நகர்மன்றத் தலைவர், தனக்கு அப்பணிகள் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை என்று கூறி கைச்சான்றிட மறுத்துவிட்டார்... எஞ்சிய 17 உறுப்பினர்களும் அச்செலவு கணக்கு உண்மைதான் என்று சொன்ன பிறகும் அவர் கையெழுத்திடாததால் அப்பணம் பெறப்படாமலேயே உள்ளது...
இந்தத் தொகை போக, தற்போது புதிய நகராட்சி பொறுப்பேற்பதற்கு முன்பு செப்டம்பர் மாதத்திலிருந்து இன்று வரை செய்யப்பட்ட பணிகளுக்கு பல ஆயிரக்கணக்கான ரூபாய் செலவுப்பணம் நகராட்சி தரவேண்டியுள்ளது...
உடனுக்குடன் பணத்தைத் தந்தால்தானே கூலிப்பணியாளர்களைக் கொண்டு வேலைகளைச் செய்ய முடியும்? பலமுறை இதுபோன்ற பணிகளுக்கு - பின்னர் வாங்கிக்கொள்ளலாம் என்று கருதி என் சொந்தக் காசைக் கொடுத்திருக்கிறேன்... எனக்குத் தெரிந்தவர்களிடம் பெற்றுக்கொடுத்திருக்கிறேன்...
பொதுமக்கள், ஊடகங்களுக்கு ஊரிலுள்ள குறைகள் மட்டுமே கண்ணுக்குத் தெரிய வாய்ப்புள்ளது... எங்கள் பிரச்சினைகளையும் கேட்டு எழுதுங்கள்... அல்லது அதற்குரியவர்களிடம் தெரிவித்து, குறைகளைத் தீர்த்துத் தாருங்கள்... என்றார். எல்.எஃப். வீதியிலுள்ள இந்த உடைப்பை அன்று காலையிலேயே சரிசெய்வதாகவும் அவர் தெரிவித்தார்.
அதனடிப்படையில் அன்று காலையில் உடைப்பை சரிசெய்யும் பணி துவங்கியது. நண்பகலில் அவ்விடத்திற்கு வந்த நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, பணிகளைப் பார்வையிட்டுச் சென்றார். நகர்மன்ற உறுப்பினர் எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய் அப்போது உடனிருந்தார்.
காயல்பட்டினம் லக்ஷ்மிபுரம் சாலையிலும் இதுபோன்று உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் பல நாட்களாக வழிந்தோடுவதாக அப்பகுதியின் நகர்மன்ற உறுப்பினர் பாக்கியஷீலா, நகர்மன்றத் தலைவரிடம் முறையிட்டதன் அடிப்படையில் அவ்விடமும் பார்வையிடப்பட்டது.
|