திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பிரிந்து, ‘தூத்துக்குடி மாவட்டம்‘ எனற பெயரில் இம்மாவட்டம் செயல்படத் துவங்கி 25 ஆண்டுகள் நிறைவுறுவதையொட்டி, வெள்ளி விழா கொண்டாட மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்த வெள்ளிவிழாவை முன்னிலைப்படுத்தும் முழக்கம் (Slogan) மற்றும் இலச்சினை (அடையாளச் சின்னம் - Logo) வரவேற்கப்படுவதாகவும், தேர்வு செய்யப்படுவனவற்றுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தூத்துக்குடி மாவட்டம் கடந்த 1986ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 20ஆம் நாள் உதயமாகியது.
கடந்த 2011 அக்டோபர் 19ஆம் தேதியன்று இம்மாவட்டம் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு, நடப்பாண்டை வெள்ளி விழா ஆண்டாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட வெள்ளி விழா ஆண்டை சிறப்புற கொண்டாடிட, பொதுநல ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கொண்ட குழு அமைத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.
வெள்ளி விழா ஆண்டைக் குறிப்பிடும் வகையில், பள்ளி - கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்களிடமிருந்து சிறப்பு அடையாளச் சின்னம் (Logo) வடிவமைத்து அனுப்பிடவும், அவற்றில் சிறப்பான லோகோ ஒன்றைத் தெரிவு செய்து, அதனை வெள்ளி விழா ஆண்டு சின்னமாக அறிவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, தூத்துக்குடி மாவட்ட வெள்ளி விழா ஆண்டைக் குறிக்கும் வகையில், பள்ளி - கல்லூரி மாணவ-மாணவியர் மற்றும் பொதுமக்களிடம், தாங்கள் வடிவமைக்கும் சிறப்பு அடையாளச் சின்னத்தை papd.tntut@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிடவும், அதனை உறுதி செய்து,
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் (வளர்ச்சிப் பிரிவு),
2ஆவது தளம்,
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம்,
கோரம்பள்ளம், தூத்துக்குடி
அல்லது
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்,
தூத்துக்குடி
ஆகிய முகவரிக்கு அனுப்பிடவும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |