காயல்பட்டினம் நகராட்சியில், ஆளில்லா பணியிடங்களுக்குத் தேவையான பணியாளர்களை துரிதமாக நியமிக்கவும், இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு தேவைப்படும் கூடுதல் பணியாளர்களை நியமிக்கக் கோரியும், நகராட்சி நிர்வாக ஆணையர் சந்திரகாந்த் காம்ப்ளேயிடம், காயல்பட்டினம் நகராட்சியின் 17ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத் கோரிக்கை வைத்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
எங்களது ஊர் 1886ஆம் ஆண்டு கிராம பஞ்சாயத்தாக துவங்கப்பட்டு, 1962இல் நகர பஞ்சாயத்தாக உயர்த்தப்பட்டு, கடந்த 2004இல் மூன்றாம் நிலை நகராட்சியாகவும், தற்போது இரண்டாம் நிலை நகராட்சியாகவும் தரமுயர்த்தப்பட்டுள்ளது.
மூன்றாம நிலை நகராட்சியாக தரமுயர்த்தப்பட்ட காலங்களில் எங்களது நகராட்சியில்
3 இளநிலை உதவியாளர்கள்,
4 வருவாய் உதவியாளர்கள்,
1 பதிவறை எழுத்தர்,
2 சுகாதார மேற்பார்வையாளர்கள்,
33 சுகாதாரப் பணியாளர்கள்
1 வாகன ஓட்டுனர் இருந்திருக்க வேண்டும்.
ஆனால், தற்போது
2 இளநிலை உதவியாளர்களும்,
1 வருவாய் உதவியாளரும் மட்டுமே உள்ளனர்.
பதிவறை எழுத்தர் பணிக்கு ஆளில்லை.
5 சுகாதாரப் பணியாளர்கள்,
1 வாகன ஓட்டுனர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன.
மூன்றாம் நிலை நகராட்சியில் மொத்தம் 44 பணியாளர்கள் இருக்க வேண்டும். ஆனால் எங்களது நகராட்சியில் 12 பணியாளர்கள் குறைவாகவே இருந்தனர்.
தற்போது, இரண்டாம் நிலை நகராட்சியாக தரமுயர்த்தப்பட்டு, நகராட்சி அந்தஸ்தையும் அடைந்துள்ளது. இன்னும் அதிகமான பணியாளர்கள் எங்களது நகராட்சிக்குத் தேவை. எனவே, அப்பணியிடங்களில் பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
இந்நிலையில், இதுவரை பணியாற்றி வந்த தலைமை எழுத்தரும் வேறு ஊருக்கு மாற்றலாகிச் சென்றுவிட்டார். ஆள் பற்றாக்குறை மேலும் அதிகரித்தவண்ணமே உள்ளது.
எனவே, தாங்கள் தயவுகூர்ந்து துரித நடவடிக்கை எடுத்து, தேவையான பணியாளர்களை நியமிக்குமாறு, எங்கள் நகராட்சித் தலைவர் ஐ.ஆபிதா, துணைத்தலைவர் மும்பை முகைதீன் ஆகியோர் சார்பிலும், நகராட்சியின் அனைத்து உறுப்பினர்கள் சார்பிலும், எங்கள் ஊர் மக்கள் சார்பிலும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு, காயல்பட்டினம் நகராட்சி 17ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத் கோரியுள்ளார். |