இந்தியாவின் 63ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்ற - அப்பள்ளியின் முன்னாள் தலைவர் எல்.கனி நினைவு க்ரிக்கெட் காட்சிப் போட்டி, 26.01.2012 அன்று காலை 10.30 மணியளவில், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் நடைபெற்றது.
எல்.கே.மேனிலைப்பள்ளியின் துணைத்தலைவரும், ஐக்கிய விளையாட்டு சங்க துணைத்தலைவருமான ஹாஜி எஸ்.எம்.உஸைர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவருக்கு ஆட்ட வீரர்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர். எல்.கே.மேனிலைப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் வேலாயுதம் உடன் சென்றார்.
எல்.கே.மேனிலைப்பள்ளி ஆசிரியர்கள் ரூபி, டைமண்ட் என இரு அணிகளாக வீரர்கள் பிரிந்து விளையாடினர். பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா முதல் பந்தை அடித்து போட்டியைத் துவக்கி வைத்தார்.
ரூபி அணியினர் நாணய சுழற்சியில் வென்று துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தனர். பள்ளி மாணவர்கள் சிலர் மதிப்பீட்டாளர்களாகப் பணியாற்றி, ஓட்ட எண்ணிக்கையைப் பதிவு செய்தனர்.
நிர்ணயிக்கப்பட்ட 12 ஓவர்களில் அவர்கள் 95 ஓட்டங்களைப் பெற்றனர். தமிழாசிரியர் முஹம்மத் இஸ்மாஈல் 35 ஓட்டங்களும், அரபி ஆசிரியர் மவ்லவீ ஜுபைர் அலீ பாக்கவீ 30 ஓட்டங்களும் பெற்று இறுதி வரை ஆட்டமிழக்காமலிருந்தனர். டைமண்ட் அணியின் அஜ்மல்கான் சிறப்பாகப் பந்து வீசி, 3 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்தார்.
93 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் டைமண்ட் அணியினர் துடுப்பெடுத்தாடினர். துவக்கத்தில் வீரர்கள் ஆட்டமிழந்தவண்ணம் இருந்தனர். ஆனால், அணித்தலைவர் அஜ்மல்கான் மற்றும் ஓவிய ஆசிரியர் மணிகண்டன் ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டத்தால், கடைசி ஓவரின் கடைசிப் பந்தில் டைமண்ட் அணி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
அணித்தலைவர் அஜ்மல்கான் 45 ஓட்டங்களும், ஓவிய ஆசிரியர் மணிகண்டன் 29 ஓட்டங்களும் பெற்றனர். ஆட்ட நாயகனாக அஜ்மல்கான் தேர்வு செய்யப்பட்டார். ஆசிரியர் சக்திவேல் இப்போட்டியின் நடுவராகப் பணியாற்றினார்.
கற்றுத் தந்த ஆசிரியர்கள் களத்திலிருந்து துடுப்பெடுத்தாடியதை, திரளான மாணவர்கள் ஆவலுடன் ரசித்தனர்.
வெற்றிபெற்ற அணிக்கு எல்.கனி நினைவுக் கோப்பையும், சிறப்புப் பரிசுகளும், வரும் பிப்ரவரி மாதம் 02ஆம் தேதி நடைபெறும் பள்ளி விளையாட்டு விழாவின்போது வழங்கப்படவுள்ளது.
தகவல்:
அஹ்மத் மீராத்தம்பி,
ஆசிரியர்,
எல்.கே.மேனிலைப்பள்ளி, காயல்பட்டினம். |