சிங்கப்பூரிலுள்ள கலைநயமிக்க கடற்கரைப் பூங்காவில் சிங்கை காயல் நல மன்றத்தின் பொதுக்குழு குடும்ப சங்கமம் நடைபெற்றது. மார்க்க அறிஞர் மவ்லவீ எஸ்.எஸ்.ஹைதர் அலீ மிஸ்பாஹீ சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
இறையருளால் எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் (KWAS) பொதுக்குழுக் கூட்டம் மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சி, 28.01.2012 சனிக்கிழமை மாலை 05.30 மணிக்கு, சிங்கை காயலர்கள் பலரால் Dream World - கனவுலகம் என்றழைக்கப்படும் சிங்கப்பூர் Labrador Parkஇல் நடைபெற்றது.
உறுப்பினர்கள் வருகை:
17.30 மணி முதல் மன்ற உறுப்பினர்கள் தம் குடும்பத்தினருடன் நிகழ்விடத்திற்கு வருகைதந்தவண்ணம் இருந்தனர்.
பிரார்த்தனையுடன் துவங்கிய குடும்ப சங்கமம்:
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் உஸ்மானிய்யா அரபிக்கல்லூரியின் முதல்வரும், நாடறிந்த நாவலருமான மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எஸ்.ஹைதர் அலீ மிஸ்பாஹீ அவர்கள் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, இறைப்பிரார்த்தனையாம் இனிய துஆவுடன் இன்பம் பொங்கும் குடும்ப சங்கம நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில், சிங்கை ஜாமிஆ சூலியா பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ, டன்லப் பள்ளி என்றழைக்கப்படும் மஸ்ஜித் அப்துல் கஃபூர் பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.உமர் ரிழ்வானுல்லாஹ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இனிய மாலைப்பொழுதில், இயற்கைக் காட்சிகள் நிறைந்த இன்பமூட்டும் கடற்கரையையும், அதன் மறுபுறத்தில் தெரியும் இந்தோனேஷிய நாட்டின் எல்லைப் புறத்தையும் மன்ற உறுப்பினர்கள் ஒருபுறம் கண்டு ரசிக்க, அங்குள்ள விளையாட்டுத் திடலில் குட்டீஸ் விளையாடி மகிழ, பூங்காவின் தனியிடத்தில் மகளிர் ஒன்றுகூடி - நீண்ட நாட்களுக்குப் பிறகான தமது சந்திப்பை மனமகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தி, நகர்நல நடப்புகள் குறித்து கலந்துரையாடினர்.
பொதுக்குழுக் கூட்டம்:
18.45 மணிக்கு மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் முறைப்படி துவங்கியது. மன்றத் தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். இறைமறை குர்ஆனின் இனிய வசனங்களுடன் ஹாஃபிழ் எம்.எம்.அஹ்மத் துவக்கி வைத்தார்.
புது வரவுகள் அறிமுகம்:
வேலைவாய்ப்பு தேடி சிங்கப்பூர் வருகை தந்துள்ள சகோதரர் கே.எம்.எஸ்.தைக்கா ஸாஹிப், ஸஊத் ஆகியோரை பொதுக்குழு மனமகிழ்வுடன் வரவேற்றதோடு, அவர்களின் தகுதிக்கேற்ற நல்ல வேலைவாய்ப்புகள் கிடைத்திட வாழ்த்தியது.
செயலர் அறிக்கை:
மன்றத்தின் அண்மைச் செயல்பாடுகள், முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்து மன்றச் செயலாளர் மொகுதூம் முஹம்மத் விளக்கிப் பேசியதோடு, தமது காலாண்டுக்கான சந்தா தொகைகளை மன்ற உறுப்பினர்கள் குறித்த காலத்தில் செலுத்தி ஒத்துழைக்க கேட்டுக்கொண்டார்.
பொருளர் அறிக்கை:
மன்றத்தின் இன்றளவிலான வரவு-செலவு கணக்கறிக்கையை மன்றப் பொருளாளர் கே.எம்.டி.ஷேக்னா லெப்பை சமர்ப்பிக்க, கூட்டம் அதை ஒருமனதாக அங்கீகரித்தது.
பின்னர், அண்மையில் விடுமுறையில் தான் தாயகம் சென்றுவந்தபோது, மன்றத்தின் சார்பில் செய்யப்பட்ட செயல்திட்டங்கள் குறித்து கூட்டத்தில் அவர் விளக்கிப் பேசினார். மன்ற நடவடிக்கைகளில் - உள்ளூர் பிரதிநிதி கே.எம்.டி.சுலைமான் தன்னார்வத்துடன் செயலாற்றி வருவதாகவும், இக்கூட்டத்தைப் பயன்படுத்தி அவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் அப்போது தெரிவித்தார்.
ஒருநாள் ஊதியம் - ஓராண்டிற்கான பங்களிப்பு...
பின்னர், மன்றத்தின் நகர்நலப் பணிகளுக்கான நிதியாதாரத்தைப் பெருக்கும் நோக்குடன் மன்றத்தின் சார்பில் கடந்த செயற்குழுவில் அறிமுகப்படுத்தப்பட்ட தீர்மான முன்வடிவான “ஒருநாள் ஊதியம் - ஓராண்டிற்கான பங்களிப்பு” என்ற செயல்திட்டம் குறித்து மன்ற செயற்குழு இப்பொதுக்குழுக் கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டம் குறித்த விபரங்கள், இதனால் விளையப்போகும் நன்மைகள் குறித்து, மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் விளக்கிப் பேசினார். இது ஒரு விருப்ப அடிப்படையிலான செயல்திட்டம் மட்டுமே என்றும், விரும்பும் உறுப்பினர்கள் இதில் பங்கேற்கலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, இத்திட்டத்தின் கீழ் - நகர்நலப் பணிகளுக்காக தமது ஒருநாள் ஊதியத்தை நன்கொடையளிக்க விரும்புவோர், 02.03.2012 வெள்ளிக்கிழமை தினத்தின் தமது ஊதியத்தை, மார்ச் 31ஆம் தேதியன்று (இன்ஷாஅல்லாஹ்) நடைபெறும் மன்ற பொதுக்குழுவின்போது தமது பங்களிப்பாக வழங்கி ஒத்துழைக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.
மருத்துவ உதவி:
பின்னர், மருத்துவ சிகிச்சைக்கு உதவி கோரி பெறப்பட்ட மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, அவ்வகைக்காக ரூ.35,000 நிதியொதுக்கீடு செய்யப்பட்டது.
கூட்ட நிறைவு:
விவாதிக்க வேறம்சங்கள் எதுவுமில்லா நிலையில், மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
தொழுகை மற்றும் இரவுணவு:
பின்னர் மஃரிப் தொழுகை கூட்டாக (ஜமாஅத்துடன்) நிறைவேற்றப்பட்டது. தொழுகையைத் தொடர்ந்து, அனைத்து உறுப்பினர்களுக்கும் மட்டன் மற்றும் சிக்கன் பிரியாணி உணவு வழங்கி விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
இருப்பிடம் திரும்பல்:
இக்கூட்டத்தில் மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். மாறாத - மறக்கவியலாத நினைவுகளுடன் மன்ற உறுப்பினர்கள் 21.00 மணியளவில் தமதிருப்பிடம் திரும்பினர்.
இவ்வாறு, சிங்கப்பூர் காயல் நல மன்ற செயலாளர் மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். |