காயல்பட்டினத்தில் தற்போது திருச்செந்தூர் சாலை, கே.டி.எம். தெரு, பிரதான வீதி, ஹாஜியப்பா தைக்கா தெரு வழியாக பேருந்து நிலையத்தைத் தொட்டு பேருந்து போக்குவரத்து நடைமுறையில் உள்ளது.
வாகனப் பெருக்கம் காரணமாக நாளுக்கு நாள் இப்பாதையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாககிக் கொண்டே சென்றது. இதனால் நகரில் ஒருவழிப்பாதையை நடைமுறைப்படுத்த பல தரப்பிலும் வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், நகரில் ஒருவழிப்பாதையை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் கறித்து ஆராய்வதற்காக அவ்வப்போது போக்குவரத்து மற்றும் காவல்துறை அதிகாரிகள் வந்து பாதைகளை ஆய்ந்தறிந்து சென்றவண்ணமிருந்தனர்.
இறுதியாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் காயல்பட்டினத்திற்கு நேரில் வந்து, ஒருவழிப்பாதைக்கு பரிசீலிக்கப்படும் இடங்களனைத்தையும், துறைசார் அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டார்.
அடுத்த சில தினங்களில், காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெரு பாதை வழியாக ஒருவழிப்பாதையை நடைமுறைப்படுத்தவும், பேருந்து போக்குவரத்து பாதைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அவர் உத்தரவிட்டார்.
அதனடிப்படையில், நேற்று (02.02.2012) இரவில், காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) வெ.கண்ணையா, பணி மேற்பார்வையாளர் செல்வமணி, சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ் மற்றும் அலுவலர்கள், காயல்பட்டினம் கூலக்கடை பஜாருக்குச் சென்று, சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களைச் சந்தித்து அவ்வாக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிட உத்தரவிட்டனர்.
அதுபோல, பெரிய நெசவுத் தெருவில் ஆங்காங்கே கட்டிடப் பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த செங்கல், மணல் உள்ளிட்ட பொருட்களை விரைந்து அப்புறப்படுத்துமாறு தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று காலை 12.00 மணியளவில் காயல்பட்டினம் திருச்செந்தூர் சாலையிலிருந்து தாயிம்பள்ளி வழியே திரும்பி, பெரிய நெசவுத் தெரு, கூலக்கடை பஜார் வழியாக ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்தப்பட்டது.
ஆர்.டி.ஓ. பொற்கொடி, போக்குவரத்து கோட்ட மேற்பார்வையாளர் கண்ணபிரான், கிளை மேலாளர் பாஸ்கரன், முதுநிலை ஆய்வாளர் உலகநாதன், ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் டி.பார்த்திபன் ஆகியோர் இந்த ஒருவழிப்பாதையை முன்னின்று நடைமுறைப்படுத்தினர்.
திருச்செந்தூர் சாலையிலிருந்து வந்த பேருந்துகளை, தாயிம்பள்ளி முனையில் நின்றவாறு அவர்கள் பெரிய நெசவுத் தெரு வழியே திருப்பிவிட்டனர்.
அதனைத் தொடர்ந்து, போக்குவரத்து பணியாளர்களான எம்.ஆறுமுகம், ஐ.எம்.பிள்ளை, மாடசாமி ஆகியோர் இன்று முழுக்க அவ்விடத்தில் நின்றவாறு, ஒருவழிப்பாதை நடைமுறைக்கு வந்த தகவலை பேருந்து ஓட்டுநர்களிடம் தெரிவித்து, அவர்களை பெரிய நெசவுத் தெரு வழியே திருப்பி விட்டனர்.
காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான எம்.ஜஹாங்கீர், ஏ.கே.முஹம்மத் முகைதீன், அ.ஹைரிய்யா, எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன், முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் எம்.எச்.அப்துல் வாஹித், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட நிர்வாகி லக்கி மக்கீ, தேமுதிக நகர துணைச் செயலாளர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன் மற்றும் பலர் அப்போது உடனிருந்தனர்.
இது ஒருபுறமிருக்க, பெரிய நெசவுத் தெருவில், போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருந்த மரக்கிளைகளை அகற்றும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது.
ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் டி.பார்த்திபன், காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) வெ.கண்ணையா, சுகாதார ஆய்வாளர் பொன்வேல்ராஜ் ஆகியோர் அவ்விடத்தில் முகாமிட்டு பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர். |