எல்.கே.மேனிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில், கடந்த கல்வியாண்டில் நடைபெற்ற தேர்வுகளில் சிறப்பிடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு கல்விப் பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் ஆண்டு விழா 03.02.2012 வெள்ளிக்கிழமை மாலை 05.00 மணிக்கு, பள்ளி தலைவர் டாக்டர் எம்.எஸ்.அஷ்ரஃப் தலைமையிலும், பள்ளியின் துணைத்தலைவர் ஹாஜி எஸ்.எம்.உஸைர், துணைச் செயலாளர் ஹாஜி எஸ்.எம்.ஸதக்கத்துல்லாஹ் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
பள்ளி ஆசிரியர் அஹ்மத் ஏ.ஜே.முஸ்தஃபா நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மாணவர் ஹாஃபிழ் கே.எஸ்.முஃபீஸுர்ரஹ்மான் கிராஅத் ஓதி விழாவைத் துவக்கி வைத்தார். பள்ளி தாளாளர் டாக்டர் எஸ்.எல்.முஹம்மத் லெப்பை அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா ஆண்டறிக்கை வாசித்தார்.
அடுத்து, விழா தலைவர் டாக்டர் எம்.எஸ்.அஷ்ரஃப் தலைமையுரையாற்றினார். அவரைத் தொடர்ந்து, இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - தூத்துக்குடி சுங்க இலாகா ஆணையர் சி.இராஜேந்திரன் சிறப்புரையாற்றினார்.
பின்னர், கடந்த கல்வியாண்டில் நடைபெற்ற ஆண்டிறுதித் தேர்வில், வகுப்பு வாரியாகவும், பள்ளியளவிலும் சிறப்பிடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினரும், பள்ளி நிர்வாகிகளும், நகரப் பிரமுகர்களும் பரிசுகளை வழங்கினர்.
கடந்த கல்வியாண்டில், பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடம் பெற்று - தற்போது மருத்துவக் கல்வி பயின்று வரும் மாணவர் ஏ.எச்.அமானுல்லாஹ், அண்மையில் மூன் டிவியில் நடத்தப்பட்ட மாநில அளவிலான திருக்குர்ஆன் மனனப் போட்டியில் முதலிடம் வென்ற இப்பள்ளி மாணவர் ஹாஃபிழ் கே.எஸ்.முஃபீஸுர்ரஹ்மான் ஆகியோருக்கு இவ்விழாவில் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினருக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
பள்ளியின் தலைவர் டாக்டர் அஷ்ரஃப், அண்மையில் தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைப் பாராட்டி, சிறப்பு விருந்தினர் அவருக்கு சால்வை அணிவித்தார்.
நிறைவாக, பள்ளியின் முதுகலை ஆசிரியர் எம்.டேவிட் செல்லப்பா நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
பின்னர் கலை நிகழ்ச்சிகள் துவங்கின. பள்ளி மாணவர்கள் பங்கேற்ற தஃப்ஸ் நிகழ்ச்சி, கிராமிய நடனம், களியாட்டம், இன்னிசை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நிறைவாக, “மக்கள் மனதைப் பெரிதும் கவர்ந்தது பழைய திரைப்படப் பாடல்களா? புதிய திரைப்படப் பாடல்களா” எனும் தலைப்பில், பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்ற பட்டிமன்றம் நடைபெற்றது.
இவ்விழாவில், பள்ளியின் அனைத்து வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், நிர்வாகிகள், பெற்றோர் மற்றும் நகரின் பல பகுதிகளைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
|