“உங்களுக்குக் கிடைத்துள்ள பொதுநல ஆர்வமிக்க உங்கள் நகர்மன்றத் தலைவரை, ஊர் நலனுக்காக நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள்” என, நேற்று நடைபெற்ற ‘பசுமைக் காயல்‘ துவக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
நிகழ்முறை:
காயல்பட்டினம் நகர் முழுக்க மரங்களை நட்டு, நகரைப் பசுமையடையச் செய்யும் நோக்குடன் காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா வடிவமைப்பில் உருவான ‘பசுமைக் காயல்‘ திட்ட துவக்கம் - மரக்கன்றுகள் நடும் விழா, 05.02.2012 அன்று (நேற்று) மாலை 06.30 மணியளவில் காயல்பட்டினம் தைக்கா தெரு, ஸாஹிப் அப்பா தைக்கா கொடிமர வளாகத்தில் நடைபெற்றது.
ஆட்சியருக்கு வரவேற்பு:
விழா நிகழ்ச்சிகளை ஜே.ஏ.லரீஃப் நெறிப்படுத்தினார். மாணவர் எம்.பி.ஹிஷாம் இறைமறை வசனத்துடன் விழா நிகழ்ச்சிகள் துவங்கின. தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன், நகர்மன்ற உறுப்பினர்கள் சார்பில் எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன், கே.ஜமால் ஆகியோர் மாவட்ட ஆட்சியருக்கு சால்வை அணிவித்தனர்.
மரம் நடும் விழா:
பின்னர், தைக்கா தெருவிலுள்ள ஓரிடத்தில், மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் மரம் நட்டு, நீரூற்றினார்.
மற்றோர் இடத்தில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா மரம் நட்டு நீரூற்றினார்.
பிறிதோர் இடத்தில், நகர்மன்ற உறுப்பினர் தைக்கா சாமு ஷிஹாபுத்தீன் மரம் நட்டு நீரூற்றினார்.
மழலையர் பாடல்:
பின்னர், மரம் வளர்ப்பதன் அவசியத்தை உணர்த்தும் பாடலொன்றை, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதாவின் ரஃப்யாஸ் ரோஸரி பள்ளியைச் சார்ந்த மழலையர் பாடினர். அவர்களை மாவட்ட ஆட்சியர் அழைத்துப் பாராட்டினார்.
பின்னர், இந்நிகழ்ச்சியில் முன்னிலை வகித்த புதுப்பள்ளி ஜமாஅத் தலைவர் ஹாஜி எஸ்.எம்.உஸைர் வாழ்த்துரை வழங்கினார். அவரைத் தொடர்ந்து, நகர்மன்ற உறுப்பினர்கள் சார்பில் 09ஆம் வார்டு உறுப்பினர் அ.ஹைரிய்யா உரையாற்றினார்.
நகர்மன்றத் தலைவர் உரை:
பின்னர், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ‘பசுமைக் காயல்‘ திட்ட விளக்கவுரையாற்றினார். அவரது உரை பின்வருமாறு:-
எல்லாப்புகழும் இறைவனுக்கே! வல்லோன் அவனே துணை நமக்கே!!
காயல்பட்டினம் நகராட்சியின், ‘பசுமைக் காயல்‘ திட்டத்தின் முதற்கட்ட மரம் நடும் விழாவிற்கு வருகை தருமாறு நாங்கள் கேட்டுக்கொண்டவுடனேயே, மிகுந்த மகிழ்ச்சியுடன் இசைவு தெரிவித்து, அதனடிப்படையில், பல்வேறு அலுவல்களுக்கு இடையிலும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருக்கும் உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்களே...
நகரைப் பசுமையாக்க முனையும் ‘பசுமைக் காயல்‘ எனும் திட்டத்தை நகர் முழுக்க சிறப்பாக செயல்படுத்தி, நமது காயல்பட்டினத்தை பசுஞ்சோலையாக்கிடுவதற்கு ஊக்கமுடன் செயல்புரிந்திட எனக்கு உறுதுணையாக என்றும் இருக்கும் எனதன்பின் நகராட்சி உறுப்பினர்களே...
முதற்கட்ட மரம் நடும் விழா இப்பகுதியில் சிறப்புற நடந்தேற ஒத்துழைப்பளித்த பெரியோர்களே... எனதருமை சகோதர-சகோதரிகளே... உங்கள் அனைவரையும் அகமுவந்து வரவேற்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.
பசுமைபணி செய்யும் காயலர்களுக்கு பாராட்டு:
Global Warming எனப்படும் புவி வெப்பமயமாதல் மற்றும் சுற்றுச்சூழல் மாசடைவதற்கு பெரிதும் காரணமாக இருப்பது மரங்கள் அழிக்கப்படுவதே என்பதையுணர்ந்துள்ள பசுமை ஆர்வலர்கள், மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து உலகெங்கும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டத் துவங்கியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, நமதூரிலும் கே.வி.ஏ.டி.புகாரி ஹாஜி அறக்கட்டளை, கோமான் நற்பணி மன்றம் மற்றும் தனி நபராக சகோதரர் எம்.எம்.உவைஸ் காக்கா உள்ளிட்டோர் நமதூரைப் பசுமையாக்கிட சுய ஆர்வத்துடன் செயல்பட்டு மரங்களை நட்டு, வளர்த்து வருவதை இந்நேரத்தில் நான் மனதாரப் பாராட்டி மகிழ்கிறேன்.
இன்னும் பல தனிநபர்களும், பொதுநல அமைப்புகளும் மரங்களை நட்டு, வளர்த்து, பராமரிக்க ஆயத்தமாக உள்ளதை எண்ணி அவர்களை வாழ்த்துவதோடு, அவர்களின் இந்த பசுமைப் பயணத்திற்கு நம் நகராட்சி என்றும் துணை நிற்கும் என இந்த நல்ல நேரத்தில் நான் நம் நகர்மன்றத்தினர் அனைவரின் சார்பிலும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
2,000 மரங்கள்...
பசுமைக் காயல் திட்டத்தின் கீழ் நம் நகர் முழுவதும் மரங்களை நட திட்டமிட்டுள்ளோம். தினமும் ஒரு மரமாவது நட வேண்டும் என்ற கணக்கில், இறையருளால் குறைந்தபட்சம் 2000 மரங்களையாவது நடுவதற்கு நாடியுள்ளோம். இத்திட்டம் முழு வெற்றிபெற, பொதுமக்களாகிய உங்கள் யாவரின் ஒத்துழைப்புதான் மிகவும் அவசியமாகும்.
பிள்ளைகளுக்கு நாம் வழங்கும் சிறந்த சொத்து...
நம் பிள்ளைகளுக்கு நாம் விட்டுச்செல்லும் மிக மிகச் சிறந்த சொத்து, பாதுகாக்கப்பட்ட இந்த பூமிதான். அதற்கு ஒரு சேதமும் ஏற்படாமல், வரும் தலைமுறையின் கரங்களில் ஒப்படைக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் நம் அனைவருக்கும் உள்ளது.
இதனைக் கருத்திற்கொண்டு, தங்கள் வீடுகளின் முன்பு மரங்களை நட்டு வளர்க்க பொதுமக்களாகிய நீங்கள் யாவரும் ஆர்வத்துடன் முன்வர வேண்டும். அம்மரங்களுக்கு நீரூற்றிப் பராமரிக்க உங்கள் குழந்தைகளை ஊக்கப்படுத்த வேண்டும்.
ஹூம்... குழந்தைகளைப் பார்க்கவே நேரமில்லை... இதிலே மரங்களை நட்டுவதாவது, வளர்ப்பதாவது... என்ற மனப்போக்கு நம்மில் சிலரிடம் காணப்படுகிறது. மரங்களுக்காக நம் செலவழிக்கும் நேரமும் நம் குழந்தைகளுக்காக நாம் சேமிக்கும் இயற்கை செல்வத்திற்காக செலவழிக்கும் நேரம்தான் என்பதை நாம் மனதிற்கொள்ள வேண்டும். நம் அடுத்த தலைமுறைக்கு, ஆழ வேரூன்றி - கிளைகள் பரவிப் படர்ந்து நிழல் தரும் மரங்களை விட சிறந்த பரிசாக வேறு எதைத் தந்துவிட முடியும்?
முன்வாருங்கள்!
பசுமைக் காயல் திட்டத்தின் கீழ் தம் இல்லங்களுக்கு முன் மரம் நட்டு பராமரிக்க விரும்பும் பொதுமக்களுக்காக ஒரு படிவம் ஆயத்தமாக உள்ளது. நீங்கள் அப்படிவத்தை நம் நகராட்சி அலுவலகத்தில் பெற்று, அதனைப் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். அப்படிவத்தில், நீங்கள் மரத்தை தினமும் நீரூற்றி நன்கு பராமரிப்பதற்கான உறுதிமொழியும், உங்கள் பெயர் - முகவரியும் மட்டுமே கேட்கப்பட்டிருக்கும். விருப்ப்முள்ளோர் அப்படிவத்தைப் பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை உங்கள் வார்டு உறுப்பினர்களிடம் ஒப்படைத்தால், உங்கள் பொறுப்பில் வேலியுடன் மரம் தரப்படும்.
ஆட்சியருக்கு நன்றி:
ஒரு திட்டம் சிறந்த வெற்றியைக் கண்டிட, தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் தருகின்ற ஆக்கமும், ஊக்கமுமே காரணமாக அமைந்திட முடியும். அந்த வகையில், நமது இந்த பசுமைக் காயல் திட்டத்தின் முதல் முயற்சிக்கு முழுமுதல் ஆதரவை மனமுவந்தளித்துள்ளார்கள்.
நமது மாவட்டத்தின் சுற்றுச்சூழலைப் பாதுகாத்திடும் பொருட்டு, மறுசுழற்சி செய்யவியலாத ப்ளாஸ்டிக் பொருட்களை ஒழிக்கும் முயற்சியில் அவர்களின் செயல்பாடு மிகவும் சிறப்பிற்குரியது. நமதூரிலும் இத்திட்டம் - அனைவரின் ஒத்துழைப்போடும் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதுபோல, இந்த பசுமைக் காயல் திட்டத்திற்கும் மாவட்ட ஆட்சியராகிய தங்களின் மேலான ஆலோசனையும், ஆதரவும் என்றும் எங்களுக்குத் தேவை என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த அடிப்படையில், தங்களின் அன்பான வருகைக்கு மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நிலையான நன்மை தரும் தர்மம்:
காலங்காலத்திற்கும் நன்மை தரக்கூடிய ‘ஸதக்கத்துன் ஜாரியா‘ எனும் நிலையான நற்கூலியைத் தரும் தர்ம காரியமான இந்த மரம் நடும் திட்டமானது,
அன்னை நம் நாட்டையே...
அழகாய் உவப்பதே...
ஈமானைச் சார்ந்ததே...
என்றோதிய அண்ணல் நபிகளாரின் அருள்மொழிக்கேற்ப சிறப்போடு துவங்கப்பட்டுள்ளது.
எல்லாம்வல்ல இறைவன், இத்திட்டத்தை மென்மேலும் சிறப்பாக்கித் தந்திட நாம் யாவரும் பிரார்த்திப்போம்... ஒன்றிணைந்து செயல்படுவோம்... வெற்றி பெறுவோம்... நன்றி.
இவ்வாறு, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா உரையாற்றினார்.
மாவட்ட ஆட்சியர் உரை:
பின்னர், மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் உரையாற்றினார். அவரது உரைச்சுருக்கம் பின்வருமாறு:-
வியத்தகு ஊரமைப்பு:
இந்த ஊர் அமைப்பை நான் வியந்து ரசிக்கிறேன்... நான் இங்கு ஆட்சியராகப் பொறுப்பேற்ற துவக்கத்தில், இந்த ஊருக்கு வந்தபோது, தெருவோரங்களில் சாக்கடை எதுவும் இல்லாததைக் கண்ணுற்று, உங்கள் நகர்மன்றத் தலைவரிடம் அதுகுறித்து விசாரித்தேன்... “எங்கள் ஊரின் அனைத்து வீடுகளிலும் செப்டிக் டேங்க் உள்ளது... அதன்மூலம் கழிவுநீர் மறுசுழற்சியாகி, இந்த ஊரின் நீர் மட்டம் குறையாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார். அதைக்கேட்டு நான் மிகவும் வியப்புற்றேன்.
பாதாள சாக்கடைத் திட்டத்திற்கிணையானது...
நிலத்தடி நீர்மட்டத்தைப் பாதுகாக்கத்தான் நம் மாநில அரசு பாதாள சாக்கடைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது... ஆனால் உங்கள் ஊரில் அதற்கிணையான ஒரு செயல்திட்டத்தை நீங்கள் முன்பே செய்து வருவது உண்மையில் மகிழ்ச்சியளிக்கிறது.
இந்த ஊரில் பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்களாக இருக்கிறீர்கள்... உங்கள் பகுதிகளை நீங்கள் சுத்தமாக வைத்திருக்கிறீர்கள் என்பதைக் காண எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்...
எந்த ஒரு திட்டம் வெற்றிபெற வேண்டுமானாலும், ஆட்சியாளர்களுடன் மக்களும் ஒத்துழைத்தால்தான் அது சாத்தியமாகும். அந்த வகையில், பசுமைக் காயல் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள நகர்மன்றத் தலைவர் உள்ளிட்ட இந்த நகராட்சிக்கு நீங்கள் முழு ஒத்துழைப்பளித்து, இந்த ஊரை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல கேட்டுக்கொள்கிறேன்.
அலட்சியம் கூடாது...
இன்று மரங்களை நட்டுவிட்டோம்... ஊடகங்களில் செய்தி வெளியிட்டோம்... ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்தோம்... என்று நின்றுவிடால், இம்மரங்களை குறைந்தபட்சம் ஒரு ஏழு, எட்டு அடி உயரத்திற்கு வளரும் வரையாவது தண்ணீர் ஊற்றி பராமரிக்கத் தவறினால், இன்று மகிழ்ச்சியோடு நட்டப்படும் இந்த மரங்கள் நாளை பட்டுப்போனால், இன்று நம்மைப் பார்த்து ரசித்த அனைவரும் நாளை நம்மைக் கேவலமாகப் பேசுவார்கள் என்பதை நாம் மறவாமல் கவனத்திற்கொள்ள வேண்டும்.
ஒரு தெருவுக்கு மிகக்குறைந்தபட்சம் ஒரு மரமாவது வளர்க்கப்பட வேண்டும்.
போக்குவரத்திற்கு இடைஞ்சலின்றி...
மரங்களை வளர்க்கையில், போக்குவரத்திற்கு இடைஞ்சலின்றி தெருவின் ஒரே பக்கத்திலோ, அல்லது இரு பக்கங்களிலும் குறுக்கும் நெடுக்குமாகவோ (zig zag) நட்டு வளர்த்தால் அது முழுப்பலன் தரும். பள்ளிக்கூடங்கள் இருக்கும் பகுதிகளையொட்டி அதிகளவில் மரங்களை நட்டலாம்.
தன்னிறைவுத் திட்டத்தில் பங்குபெறுங்கள்!
அடுத்து, நமது மாநில அரசு தன்னிறைவுத் திட்டத்தை - Self Sufficiency Scheme அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பொதுமக்கள் ஒரு பங்கு நிதியளித்தால், அரசு இரண்டு பங்கு நிதியளிக்கும். அதைக் கொண்டு நலத்திட்டப் பணிகளை மேற்கொள்ளலாம் என்ற நியதி உள்ளது.
இந்த ஊர் மக்கள் பல இடங்களிலும் பரந்து விரிந்து வாழ்ந்து வருபவர்கள்... உங்கள் ஊரில் அழகான கடற்கரை உள்ளது... சுற்றுலாத் துறை மூலமாக நாங்கள் நல்ல பல திட்டங்களைச் செய்து தர காத்திருக்கிறோம்... உங்கள் ஊரை சிங்கப்பூர் போல, ஹாங்காங் போல மாற்ற சிந்தியுங்கள்... அதற்காக நீங்கள் முன்வந்து பங்களியுங்கள்... அரசுடன் இணைந்து இந்த ஊரை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லுங்கள் என உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். இத்திட்டத்திற்கான மாதிரி வடிவத்தை இம்மாத இறுதிக்குள் தந்தால்தான் செயல்படுத்த முடியும் என்பதை உங்கள் கவனத்திற்கு அறியத் தருகிறேன்.
ஆர்வமிக்க நகர்மன்றத் தலைவர்:
உங்கள் குழந்தைகளை நன்கு படிக்க வையுங்கள்... பொதுநல சிந்தனைகளோடு வளருங்கள்... உங்கள் ஊருக்கு அமைந்துள்ள இந்த நகர்மன்றத் தலைவர் அவர்கள் பொதுநலனில் மிகவும் அக்கறையுடையவர்களாக இருப்பதைப் பார்த்து நான் மகிழ்ச்சியடைகிறேன். ஊர் நலப் பணிகளுக்கு இவரை நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
அழகாகப் பேசுகின்றனர்...
பொதுவாக, பல ஊர்களில் நிகழ்ச்சிகளில் நான் கலந்துகொள்ளும்போது, அங்குள்ள சேர்மனுக்கோ, உறுப்பினர்களுக்கோ - அதிகாரிகளை வைத்துக்கொண்டு என்ன பேசுவது, எப்படிப் பேசுவது, எப்படி கோரிக்கைகளை முன்வைப்பது என்பதே தெரியாத நிலை உள்ளது. ஆனால், இன்று இங்கே பேசிய உங்கள் நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர் இருவரும் பெண்களாக இருந்தும், இந்த ஊர் நலன் குறித்த கனவுகள் அவர்களின் பேச்சில் கோரிக்கைகளாக வெளிப்படுத்தியதைப் பார்த்து மகிழ்கிறேன்... அவர்களை நான் பாராட்டுகிறேன்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் உரையாற்றினார்.
நிறைவாக, புதுப்பள்ளி ஜமாஅத் பொருளாளர் எம்.எஸ்.ஸதக்கத்துல்லாஹ் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது. இவ்விழாவில், ஏ.லுக்மான், கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, எம்.ஜஹாங்கீர், ஜே.அந்தோணி, எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய், அ.ஹைரிய்யா, எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், ரெங்கநாதன் என்ற சுகு, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், பாக்கியஷீலா, ஏ.ஏ.அஜ்வாத், இ.எம்.சாமி ஆகிய நகர்மன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். நகரின் பல பகுதிகளைச் சார்ந்த ஆண்களும், பெண்களும் தனித்தனி பகுதிகளில் இருந்தவாறு கலந்துகொண்டனர்.
இடைநிகழ்வுகள்:
இவ்விழாவில், நகருக்குத் தேவையான பல அம்சங்களை கோரிக்கை மனுவாக, மாவட்ட ஆட்சியரிடம் பலரும் வழங்கினர்.
விழாவின் இடையில், ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா (ஐக்கியப் பேரவை செயற்குழு உறுப்பினர்) மாவட்ட ஆட்சியருக்கு சால்வை அணிவித்ததும், காயல்பட்டினத்தில் அண்மையில் ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்தப்பட்டதற்கு நன்றி தெரிவித்து - தாயிம்பள்ளி ஜமாஅத் சார்பில் அதன் செயலாளர் ஹாஜி எம்.அஹ்மத் மாவட்ட ஆட்சியருக்கு சால்வை அணிவிக்க - கவிஞர் ஏ.ஆர்.தாஹா நன்றி தெரிவித்ததும், நகரின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கக் கோரி - நகரப் பிரமுகர் லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன் பேசியதும் குறிப்படத்தக்கது.
சிற்றுண்டியுபசரிப்பு:
நிகழ்ச்சிகள் நிறைவுற்ற பின்னர், நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும், அப்பகுதியைச் சார்ந்த பிரமுகர் ஹாஜி ஐ.ஷாஜஹான் சிற்றுண்டி வழங்கி உபசரித்தார்.
|