கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கெதிராக இம்மாதம் 11ஆம் தேதியன்று “கூடங்குளம் அணு உலை முற்றுகை பேரணி” நடத்தப்படவுள்ளதாகவும், அதற்கு ஆதரவு கோரியும், இன்றிரவு 07.30. மணியளவில் காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகில், சிவப்பு நிற டி-சர்ட் அணிந்திருந்த சிலர், மெகாஃபோன் ஒலிபெருக்கிக் கருவி துணையுடன் பரப்புரை செய்தனர். முற்றுகைப் பேரணி குறித்த விபரங்களடங்கிய - மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பில் வெளியிடப்பட்ட பிரசுரத்தையும் அவர்கள் பொதுமக்களுக்கு வினியோகித்துள்ளனர்.
பின்னர் அவர்கள் பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள வணிக நிறுவனங்களிலிருந்தோரிடம் நன்கொடை வசூலிக்க முனைந்தபோது, ஒருவரும் நிதியளிக்கவில்லை என தெரிகிறது.
நல்ல விஷயத்திற்கு ஆதரவளிக்க தயங்குவதேனென அவர்கள் கேட்க, “மக்கள் வரிப்பணம் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை முடக்கி, அரசு தொழிற்சாலையை உருவாக்கும் வரை நீங்களெல்லாம் எங்கே சென்றீர்கள்...? இப்போது எல்லாம் நிறைவுற்று, அணு மின் நிலையம் துவங்கவுள்ள இந்த நேரத்தில் திடீரென உங்களுக்கு ஞானோதயம் ஏற்பட்டது ஏன்?” என்பன போன்ற கேள்விகளை பரப்புரையாளர்களிடம் வணிக நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் கேட்டதாகவும், இதனால் விவாதம் தீவிரமடைந்து விவகாரம் முற்றும் நிலை உருவானதையடுத்து, காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு மற்றும் சிலர், விவகாரம் பெரிதாகாதிருக்கும் பொருட்டு பரப்புரையாளர்களை திரும்பிப் போகுமாறு கூறியதாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்த ஆறுமுகநேரி காவல்துறை துணை ஆய்வாளர் வைகுண்டம் உடனடியாக காயல்பட்டினம் பேருந்து நிலையத்திற்கு வந்து, பரப்புரையாளர்களை திருப்பியனுப்பவே, விவகாரம் முடிவுக்கு வந்தது. |