காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணியின் சார்பில் ஈக்கியப்பா தைக்கா வளாகத்திலுள்ள அதன் விளையாட்டு மைதானத்தில் டென்னிஸ் விளையாட்டுக்காக, மைதானம் அமைக்க ஆலோசிக்கப்பட்டு, அதனடிப்படையில் கட்டமைப்புகள் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வகைக்காக பெறப்பட்ட நிதியுதவியைக் கொண்டு, இதுவரை சுமார் பத்தாயிரம் ரூபாய் செலவில் டென்னிஸ் மைதானம் வண்ணமிகு அலங்காரத்துடன் அமைக்கப்பட்டு வருகிறது.
பெறப்படும் பொருளாதாரத்தின் அடிப்படையில் இன்னும் இம்மைதானத்தை மெருகேற்றத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார், இளைஞர் ஐக்கிய முன்னணியின் செயலர் ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர்.
ஓடியாடி விளையாடும் பருவத்திலுள்ள நகரின் பல பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் இம்மைதானத்தில் பூப்பந்து, கைப்பந்து, டென்னிஸ் விளையாட்டுக்களை விளையாடி வருகின்றனர். தினமும் மாலை 05.00 மணியளவில் துவங்கும் விளையாட்டு மஃரிப் வேளையுடன் முடிவடைகிறது.
விடுமுறைக் காலங்களில் பகல் நேரங்களிலும் இங்கு மாணவர்கள் விளையாடி வருகின்றனர். இம்மைதானத்தில் எந்தவொரு விளையாட்டிலும் எந்தப் பகுதியைச் சார்ந்தவர்களும் கலந்துகொண்டு விளையாடலாம் என்றும், அவ்வாறு வருவோர் அந்தந்த விளையாட்டிற்கான உபகரணங்களை அவசியம் கொண்டு வருமாறும் இளைஞர் ஐக்கிய முன்னணி செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார். |