போலியோ எனும் இளம்பிள்ளைவாத நோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்காக நாடெங்கிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சைக்கிளில் பயணம் மேற்கொண்டு வருகிறார் பிஹார் மாநிலம் பாட்னா நகரைச் சேர்ந்த - 36 வயதான அரவிந்த் குமார் மிஸ்ரா.
பி.ஏ. பொருளியல் பட்டதாரியான இவர், திருமணமாகாதவர். பிறவியிலேயே மாற்றுத் இளம்பிள்ளைவாதத்தால் பாதிக்கப்பட்ட இவர், இளம்பிள்ளைவாத நோய் குறித்து நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வூட்ட வேண்டும் என்ற நோக்கில், கடந்த 07.11.2008 அன்று ஒரிஸ்ஸா மாநிலம் பூரி நகரில் தன் பயணத்தைத் துவக்கிய அவர், கடந்த மூன்றாண்டுகளில் முழு ஒரிஸ்ஸா மாநிலத்தையும் சுற்றி முடித்துவிட்டு, சட்டீஸ்கர், ஆந்திர பிரதேசம், பாண்டிச்சேரி மாநிலங்களில் பயணத்தை முடித்துவிட்டு, தற்போது தமிழகத்தில் பயணமேற்கொண்டு வருகிறார்.
இன்று காலை 11.00 மணியளவில் காயல்பட்டினத்தை வந்தடைந்த அவரை, காயல்பட்டினம் அரிமா சங்க நிர்வாகிகள் வரவேற்று, துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு, பயிலும் மாற்றுத் திறன் மிக்க குழந்தைகளிடம் பேசிய அவர், அக்குழந்தைகளை அன்போடும், அரவணைப்போடும் நடத்துமாறும், அதற்கு மிகுந்த பொறுமை அவசியம் என்றும் தெரிவித்தார். இந்தி மொழியில் அவர் தெரிவித்த கருத்துக்களை காயல்பட்டினம் நகர அரிமா சங்க தலைவர் ஹாஜி எஸ்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா தமிழாக்கம் செய்தார்.
பின்னர், அங்குள்ள இளஞ்சிறாருக்கு வழங்கப்படும் பயிற்சிகளை அவர் கண்ணீர் மல்க பார்வையிட்டார்.
நிறைவில், நகர அரிமா சங்கம் சார்பில் அவருக்கு சால்வை அணிவிக்கப்பட்டு, அவரது பயணத்தின் நோக்கத்தை ஊக்கப்படுத்தும் வகையில் ரூபாய் இரண்டாயிரம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், அரிமா சங்க நகர பொருளாளர் ஜுவெல் ஜங்ஷன் அப்துர்ரஹ்மான், அதன் உறுப்பினர் வி.எம்.எஸ்.அமீன், ஜே.ஏ.லரீஃப், காக்கும் கரங்கள் நற்பணி மன்ற தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன், மஹ்ழரா மற்றும் ஹாமிதிய்யா பேராசிரியர் ஹாஃபிழ் சொளுக்கு தவ்ஹீத், சிங்கப்பூர் காயல் நல மன்ற உறுப்பினர் ஹாஃபிழ் செய்யித் அஹ்மத் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர், மதியம் 002.30 மணியளவில் காயல்பட்டினம் நகராட்சிக்கு வந்த அவரை, நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்புலக்ஷ்மி ஆகியோரும், நகர்மன்ற உறுப்பினர்களான எம்.ஜஹாங்கீர், ரெங்கநாதன் என்ற சுகு, இ.எம்.சாமி ஆகியோரும் வரவேற்றனர். பின்னர் நகர்மன்ற உறுப்பினர்களின் சார்பிலும் அவருக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
தனது மூன்றாண்டு பயணம் குறித்து நம்மிடம் கருத்து தெரிவித்த அரவிந்த் குமார் மிஸ்ரா, தனது இளம்பிராயத்தின்போது இளம்பிள்ளைவாதம் குறித்து போதிய விழிப்புணர்வோ, மருத்துவ வசதிகளோ இந்தளவுக்கு இல்லை என்றும், இன்று நாடெங்கிலும் போலியோவை ஒழிக்க இந்திய அரசு எடுத்துவரும் முயற்சியில் பெரும் வெற்றி கண்டு வரும் நிலையில், அதனால் பாதிக்கப்பட்ட தானும் மக்களுக்கு பரப்புரை செய்தாலென்ன என்ற எண்ணத்தால் துவக்கப்பட்டதே தனது பயணம் என்றார். சென்ற இடங்களில் ஆங்காங்கேயுள்ள அரிமா சங்கத்தினர், ரோட்டரி சங்கத்தினர் உள்ளிட்ட பொதுநல அமைப்பினரும், பொதுமக்களும் நல்ல முறையில் வரவேற்றதாகவும், தனது பரப்புரைப் பயணத்தைப் பாராட்டியதாகவும் தெரிவித்ததுடன், இதுவரை தான் சென்று வந்த இடங்களில், தமிழ்நாட்டில் தனக்குக் கிடைத்த வரவேற்பை நினைத்து பெரிதும் மகிழ்வதாகத் தெரிவித்தார்.
பிறக்கும் குழந்தைகளுக்கு மறவாமல் இளம்பிள்ளைவாத தடுப்பு - போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும் என்று கூறிய அவர், அவ்வாறு கொடுக்கத் தவறினால் அவர்களின் நிலை இவ்வாறுதான் இருக்கும் என தனது இயலாநிலையிலுள்ள கால்களைச் சுட்டிக்காட்டி தெரிவித்தார்.
பொதுநல ஆர்வலர்களான ரஃபீ, உமர் ஒலி, காக்கும் கரங்கள் நற்பணி மன்ற துணைத்தலைவர் ஷேக் முஹம்மத் மற்றும் பலர் இந்நிகழ்வுகளில் உடனிருந்தனர். |