காயல்பட்டினத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஒருவழிப்பாதையை வரவேற்றும், அண்மையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரால் துவக்கி வைக்கப்பட்ட - காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதாவின் ‘பசுமைக் காயல்‘ திட்டத்திற்கு ஆதரவளித்தும், காயல்பட்டினம் நகர அரிமா சங்க கூட்டத்தில் தீர்மானங்களியற்றப்பட்டுள்ளதுடன், மருத்துவ உதவியாக 2 லட்சம் ரூபாய் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, நகர அரிமா சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
காயல்பட்டினம் அரிமா சங்கத்தின் சாதாரண கூட்டம் 07.02.2012 அன்று இரவு 08:30 மணியளவில், காயல்பட்டினம் பிரதான வீதியிலமைந்துள்ள செய்யித் ஆலிம் கட்டிடத்தில், அரிமா தலைவர் ஹாஜி எஸ்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா தலைமையில் நடைபெற்றது.
உறுப்பினர் கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின்னர், கீழ்க்காணும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன:-
தீர்மானம் 01 - புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்பு:
புற்றுநோய் குறித்து விழிப்புணர்வூட்டும் வகையில், 12-02-2012 ஞாயிற்றுக்கிழமையன்று (இன்று) சென்னையிலிருந்து கல்லூரி மாணவர்கள் பேரணியாக வந்து, காயல்பட்டினம் துளிர் பள்ளியில் நிகழ்ச்சி நடத்தவுளள்னர். அவர்களை அரிமா சங்கம் காயல்பட்டினம் கிளை சார்பாக வரவேற்று, நடைபெறும் விழாவில் கலந்து சிறப்பிப்பது என முடிவெடுக்கப்பட்டது.
தீர்மானம் 02 - உயிர் காக்கும் திட்டம்:
நமதூர் பள்ளி மாணவ-மாணவியர் நமது அரிமா சங்கத்தின் "உயிர் காக்கும்" திட்டத்திற்கு சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்து நிதி சேகரித்து தந்தனர். அதற்கு ஒத்துழைப்பு கொடுத்த பள்ளி நிர்வாகம், தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய-ஆசிரியையர், மாணவ-மாணவியரை கவுரவிப்பதென தீாமானிக்கப்பட்டது.
தீர்மானம் 03 - பசுமைக் காயல் திட்டத்திற்கு ஒத்துழைப்பு:
பசுமைக் காயல் திட்டத்தின் துவக்க விழா நடைபெற்றபோது வருகை தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு அரிமா சங்கம் சார்பில் சால்வை அணிவிக்கப்பட்டது, மேலும் அத்திட்டத்திற்கான ஒத்துழைப்பை வழங்குவது என முடிவெடுக்கப்பட்டது.
தீர்மானம் 04 - ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்தப்பட்டமைக்கு நன்றி:
நகர மக்களின் 40 ஆண்டு கால எதிர்பார்ப்பாக விளங்கிய ஒருவழிப்பாதை திட்டத்தை செயல்படுத்தித் தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் நம் காயல்பட்டின நகர்மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்களையும், ஒத்துழைப்பு வழங்கிய ஜமாஅத் மக்களையும் வாழ்த்தி நன்றி கூறுவதுடன், நன்றி நவிலல் கடிதங்களை அனைவருக்கும் அனுப்ப தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 05 - ஒருவழிப்பாதையில் வழிகாட்டுப் பலகைகள்:
நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஒருவழிப்பாதையை ஒழுங்குபடுத்திடவும், வாகன ஓட்டிகளுக்கு வழிகாட்டிடவும், வழிகாட்டு விளம்பரப் பலகைகளை தேவையான இடங்களில் அமைப்பது என முடிவெடுக்கப்பட்டது.
இந்த வழிகாட்டுப் பலகைகளை அரிமா சங்கம் மூலம் அமைக்க ஜுவெல் ஜங்ஷன் நிறுவனத்தார், புரவலர் லேண்ட்மார்க் ராவன்னா அபுல்ஹஸன் ஹாஜி, ஆர்.பி.எஸ்.டிராவல்ஸ் உரிமையாளர் ஹாஜி ஆர்.பி.எஸ்.சம்சுத்தீன் ஆகியோர் ஒப்புதல் அளித்துள்ளமைக்கு இக்கூட்டம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 06 - தொடர்வண்டி நேரப்பட்டியல் தகவல் பலகை:
காயல்பட்டினம் அரிமா சங்கம் மூலமாக புதிய இரயில்வே நேரம் குறித்த தகவல் பலகை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
தீர்மானம் 07 - துணை மின் நிலைய வளாகத்தில் விளம்பரப் பலகை:
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் துணையோடு, நகரில் புதிதாக அமையவிருக்கும் துணை மின் நிலையம் பகுதியில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டுவதைத் தடுக்கும் விளம்பர பலகையை நம் அரிமா சங்கம் மூலம் அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.
தீர்மானம் 08 - ஆளுநர் பார்வை நேரம்:
அரிமா சங்க ஆளுனர் பார்வை நேரம் அனுசரிப்பது என முடிவு செய்யப்பட்டது.
தீர்மானம் 09 - குடியரசு தின விழாவில் பங்கேற்றோருக்கு பாராட்டு:
நம் அரிமா சங்கம் மூலம் காயல்பட்டினம் மாகாத்மா காந்தி ஞாபகார்த்த வளைவில் வைத்து நடைபெற்ற குடியரசுதின கொண்டாட்ட நிகழ்வுகளில் கலந்துகொண்ட அரிமா சங்க உறுப்பினர்களை பாராட்டி தீர்மானமியற்றப்பட்டது.
தீர்மானம் 10 - மருத்துவ உதவியாக ரூ.2 லட்சம்:
நகரில் மொத்தம் 26 நபர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்யப்பட்டது. அதற்காக செலவிடப்பட்ட சுமார் ரூ.2 லட்சம் தொகைக்கு இக்கூட்டம் ஒப்புதலளிக்கிறது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இவ்வாறு, காயல்பட்டினம் அரிமா சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.ஜஹாங்கீர் மூலமாக,
ஆசிரியர் லயன் மு.அப்துல் ரசாக்,
காயல்பட்டினம்.
படம்:
வீனஸ் ஸ்டூடியோ,
எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, காயல்பட்டினம். |