செய்தி எண் (ID #) 8008 | | |
திங்கள், பிப்ரவரி 13, 2012 |
பெரிய நெசவுத் தெரு வழியே ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தெரு மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம்! நூற்றுக்கணக்கானோர் கைது!! |
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 9486 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (45) <> கருத்து பதிவு செய்ய |
|
காயல்பட்டினத்தில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு, பல கட்ட ஆய்வுகளுக்குப் பின், மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி, பெரிய நெசவுத் தெரு வழியாக ஒருவழிப்பாதை அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தங்கள் தெரு வழியே பேருந்து போக்குவரத்து நடைமுறைப்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அத்தெருவைச் சார்ந்த நெசவு ஜமாஅத் சார்பில் தாயிம்பள்ளி திருப்பத்திலுள்ள மூப்பனார் ஓடை சாலை, பெரிய நெசவுத் தெரு முழுக்க கருப்புக்கொடி ஏற்றப்பட்டிருந்தது. காலை 09.30 மணியளவில், பெரிய நெசவுத் தெருவில் அப்பகுதியைச் சார்ந்த நானூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஏராளமான பெண்கள் உட்பட ஹாபில் அமீர் ஜமாஅத்தினை சார்ந்த திரளான பொதுமக்கள் அச்சாலையில் அமர்ந்து, பெரிய நெசவுத் தெரு வழியே ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்தப்பட்டதை எதிர்த்து, எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தம் கைகளில் ஏந்தியவாறு முழக்கமிட்டனர். தம் வகுப்புகளுக்கு விடுமுறை எடுத்துவிட்டு பள்ளி மாணவ-மாணவியர் பலரும் இவ்வார்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர். பெண்கள் தம் கைக்குழந்தைகளுடன் நடுவீதியில் அமர்ந்திருந்தனர்.
உடனடியாக, திருச்செந்தூர் டி.எஸ்.பி. ஞானசேகரன், திருச்செந்தூர் காவல்துறை ஆய்வாளர் இசக்கி, ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் டி.பார்த்திபன், ஆத்தூர் காவல்துறை ஆய்வாளர் அமல்ராஜ், துணை ஆய்வாளர்களான ஸ்வாமிதாஸ், வைகுண்டம், ராஜகுமாரி, வருவாய் ஆய்வாளர் ஜோஸப், காயல்பட்டினம் கிராம நிர்வாக அதிகாரி செல்வலிங்கம் ஆகியோர் நிகழ்விடத்திற்கு விரைந்து வந்தனர்.
அப்போது ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்ட நெசவு ஜமாஅத் பொதுமக்களிடம் பேசிய டி.எஸ்.பி. ஞானசேகரன், ஆர்ப்பாட்டத்திற்கு முறைப்படி காவல்துறை அனுமதி பெறவில்லை என்றும், போக்குவரத்திற்கு இடைஞ்சல் செய்யாமல் உடனடியாகக் கலைந்து செல்லுமாறும் தெரிவித்தார்.
கலைய மறுத்த நெசவு ஜமாஅத் பொதுமக்கள், ஏற்கனவே பணியிலிருந்த பல அதிகாரிகள் தெரிவித்த வழிமுறைகளைக் கண்டுகொள்ளாமல் தம் பகுதியில் ஒருவழிப்பாதையை நடைமுறைப்படுத்தியதைக் கண்டிப்பதாகத் தெரிவித்தனர்.
அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள், பெண்கள், சிறுவர்-சிறுமியர் என நூற்றுக்கணக்கான பொதுமக்களை காவல்துறையினர் கைது செய்து, நான்கு வேன்களில் ஏற்றிச் சென்று, ஆறுமுகநேரி ரத்னா திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் பேருந்து போக்குவரத்து சிறிது நேரம் காயல்பட்டினம் வழியே வராமல் அடைக்கலபுரம் வழியாக திருப்பி விடப்பட்டதாகத் தெரிகிறது. ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பெரிய நெசவுத் தெருவில் நிறுவப்பட்டிருந்த கருப்புக்கொடிகள், விரிக்கப்பட்டிருந்த பாய்கள், போடப்பட்டிருந்த நாற்காலிகளை காவல்துறையினர் அப்புறப்படுத்தி பாதையை சரிசெய்ததையடுத்து, காலை 10.15 மணியளவில் மீண்டும் அத்தெரு வழியே ஒருவழிப்பாதை அடிப்படையில் போக்குவரத்து தொடர்ந்தது.
செய்தியில் கூடுதலாக ஒரு தகவல் இணைக்கப்பட்டுள்ளது. (13.02.2012 @ 17:05hrs)
[செய்தி திருத்தப்பட்டது @ 8:30pm/14.2.2012] |