அனைத்து சமய மக்களுடனும் அன்புற பழகியவர் பாளையம் இப்றாஹீம் என, புதுப்பள்ளியில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் நகரப் பிரமுகர்கள் புகழ்ந்துரைத்தனர்.
பொது நல ஆர்வலரும், காயல்பட்டினம் மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க ஸபையின் செயலாளரும், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் தந்தையுமான பாளையம் முஹம்மத் இப்ராஹீம், 14.02.2012 அன்று (நேற்று) மாலை 05.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 66.
அன்னாரின் ஜனாஸா, இன்று காலை 10.30 மணியளவில் காயல்பட்டினம் மஸ்ஜித் அல்ஜதீத் - புதுப்பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நல்லடக்க நிகழ்வுகள் நிறைவுற்ற பின்னர், புதுப்பள்ளிவாசல் வெளிப்பள்ளி வளாகத்தில், அப்பள்ளி நிர்வாகத்தின் சார்பிலும், பள்ளி வளாகத்திலியங்கிவரும் மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபை நிர்வாகத்தின் சார்பிலும் இரங்கல் கூட்டம், எஸ்.இ.காழீ அலாவுத்தீன் ஆலிம் தலைமையில், காலை 11.15 மணியளவில் நடத்தப்பட்டது.
புதுப்பள்ளி பொருளாளர் எம்.எஸ்.ஸதக்கத்துல்லாஹ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். துவக்கமாக, புதுப்பள்ளி நிர்வாகத்தின் சார்பில், அப்பள்ளியின் தலைவரும், எல்.கே.மேனிலைப்பள்ளி, ஐக்கிய விளையாட்டு சங்கம் ஆகிய நிறுவனங்களின் துணைத்தலைவருமான ஹாஜி எஸ்.எம்.உஸைர் உரையாற்றினார்.
மாணவ சிறாருக்கு மார்க்கக் கல்வியைப் புகட்டி, நேர்வழியில் அவர்களை வழிநடத்துவதற்காக, சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபை பல ஆண்டுகளாக செயல்படாமல் தொய்வுற்றிருந்த நிலையில், கடந்த முப்பதாண்டுகளுக்கு முன்பு மீண்டும் அந்நிறுவனத்தை எடுத்து நடத்தி, அதற்கு உயிரூட்டியவர் என் அன்புச் சகோதரர் பாளையம் இப்றாஹீம் அவர்கள்...
இந்த நிறுவனத்தின் மூலம் ஏறத்தாழ 500 மாணவர்களுக்கும் மேல் மார்க்க ஒழுக்கக் கல்வியைப் பயின்றுள்ளனர்... இந்த மத்ரஸா நீடிக்கும் காலமெல்லாம் பாளையம் இப்றாஹீம் நம் நெஞ்சில் வாழ்ந்துகொண்டேயிருப்பார்...
இவ்வாறு ஹாஜி எஸ்.எம்.உஸைர் தனதுரையில் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து, மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபையின் ஆசிரியர் குழுமத்தின் சார்பில் அதன் முதல்வர் மவ்லவீ மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ உரையாற்றினார்.
மரணித்தவரின் நல்ல செயற்களை நினைவுகூருங்கள்... ஏனெனில் அதற்கு மலக்குமார் ஆமீன் கூறுகின்றனர் என்பது ஏந்தல் நபிகளாரின் இனிய மொழி.
மறைந்த பாளையம் இப்றாஹீம் காக்கா அவர்களைப் பொருத்த வரை, தான் ஒரு முஸ்லிமாக இருந்தாலும், அனைத்து சமுதாய மக்களுடனும் நெருங்கிப் பழகி, நற்பெயர் பெற்றவர்.... சில நேரங்களில் இரு சமூகத்தவரிடையே சலசலப்புகள் ஏற்படுகையில் நேரடியாக நின்று அவற்றை தனக்கேயுரிய நளினமான போக்கால் தீர்த்து வைத்தவர்...
அவர் செய்யும் காரியம் - பார்ப்போருக்கு வெளித்தோற்றத்தில் விவகாரமானதாகவே தெரியும்... ஆனால் அதனால் விளையும் பலன்கள் காலம் கடந்தே அவர்களின் கண்களுக்குத் தெரிய வரும்... அதற்கிடைப்பட்ட காலத்தில், எந்த விமர்சனம் வந்தாலும் அதை சட்டை செய்யாமல் காரியமே கண்ணாகக் கருதி செயல்படுவார்...
சமூக சேவை செய்வோராக இருந்தாலும் - ஒருவர் பொருளாதாரத்தில் நலிவுற்றிருந்தால் அவரை சமுதாயம் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே வைத்திருக்கும்... இது எல்லா இடங்களிலும் வழமை... ஆனால், சமூக சேவையில் ஆர்வமுள்ள - அதே நேரத்தில் பொருளாதாரத்தில் மிகவும் நலிவுற்று - முகவரியற்றவராக இருந்த பலரை, இந்த மழ்ஹருல் ஆபிதீன் மீலாத் விழா மேடையில் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொள்ளச் செய்து, அவர்களை மேடையேற்றி அழகு பார்த்தவர் அவர்...
இவ்வாறு, மவ்லவீ மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ உரையாற்றினார். அடுத்து, ஹாஜி கிதுரு முஹ்யித்தீன் உரையாற்றினார்.
கீழக்கரை அவ்க்கார் ஆலிம் என்ற அப்துல் காதிர் ஆலிமும், அவர்களைத் தொடர்ந்து முஹம்மத் லெப்பை ஆலிமும், அவர்களைத் தொடர்ந்து நடுவுளப்பா அவர்கள், சின்ன ஆலிம் ஆகியோர் காலங்காலமாக இந்த புதுப்பள்ளியை கட்டியும், புதுப்பித்தும் பராமரித்தும் வந்துள்ளனர். அவர்களின் பாரம்பரியத்தில் வந்தவர்கள்தான் மறைந்த பாளையம் இப்றாஹீம் காக்கா அவர்கள்...
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு சமயத்தில் தன் தோழராம் அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம், “உம் வீட்டில் யாரைத் துணைக்கு வைத்துவிட்டு வந்தீர்?” என்று வினவியபோது, “அல்லாஹ்வையும், அவன் தூதரையும்” என்றுரைத்தார்களே...? அந்த வழியில் தன் இல்வாழ்வை அமைத்துக்கொண்டு வாழ்ந்தவர்தான் இவர்கள்...
அவர்களின் வழிகாட்டுதலின்படி வாழ்ந்து வரும் அவர்களது அன்பு மகளார் இன்று நம் நகர்மன்றத்தின் தலைவராக இருக்கிறார்கள்... அவர்களுக்கு இந்நேரத்தில் ஓர் அன்பான வேண்டுகோளை முன்வைக்க விரும்புகிறேன்...
சகோதரியே... இன்னும் ஐந்தாண்டுகளுக்கு இந்த ஊரின் தலைமை உங்களிடம்தான் இருக்கப் போகிறது... உங்கள் தந்தை எவ்வாறு மக்கள் சேவையில் - எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல் வாழ்ந்தார்களோ, அந்த வழியில் நம் நகர்மன்றத்தை வழிநடத்தி, நமதூரை கல்வி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் தலைசிறந்த நிலைக்குக் கொண்டு வர முயற்சி செய்யுங்கள்... அந்த நன்மை உங்கள் தந்தைக்கு ஸதக்கத்துன் ஜாரியாவாக சேரட்டும்!
மக்களும் பழையவற்றைப் பேசிக்கொண்டிராமல், அவருக்குத் துணையாக நின்று நகர்நலனுக்காக ஒன்றுபட்டு பாடுபட வேண்டும்...
இவ்வாறு ஹாஜி கிதுரு முஹ்யித்தீன் பேசினார். அவரைத் தொடர்ந்து, காயல்பட்டினம் - ஆறுமுகநேரி (கே.ஏ.) மேனிலைப்பள்ளியின் ஓய்வுபெற்ற ஆசிரியர் குமரகுரு உரையாற்றினார்.
மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்து காட்டியவர்... தன் சமுதாயத்தின் மீது மிகுந்த பிடிப்புடன் வாழ்ந்த அவர், பிற சமுதாய மக்களையும் என்றும் மதித்து வாழ்ந்தவர்...
சிறந்த நாட்டுப்பற்றாளர்... இந்திய சுதந்திர தினம், குடியரசு தினங்களை தன் இல்லத்து விழாவாகக் கொண்டாடி, அந்நிகழ்வுகளில் பல்சமயங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்க ஏற்பாடுகள் செய்தவர்...
அவரது இழப்பு, அவர் குடும்பத்திற்கு மட்டுமின்றி, நல்லிணக்கம் விரும்பும் அனைவருக்குமே பேரிழப்பாகும்...
இவ்வாறு ஆசிரியர் குமரகுரு உரையாற்றினார்.
நிறைவாக, ஹாஃபிழ் முஹம்மத் லெப்பை துஆவுடன் இரங்கல் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ், புதுப்பள்ளி ஜமாஅத் நிர்வாகிகள், நகரப் பிரமுகர்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
நிறைவில், மறைந்த பாளையம் இப்றாஹீம் அவர்களின் குடும்பத்தினருக்கு பொதுமக்கள் பொறுமை கூறி, முஸாஃபஹா எனும் கைலாகு செய்துகொண்டனர். |