பயன்படுத்தப்பட்ட - நன்னிலையிலுள்ள ஆடைகளை சேகரித்து, தேவைப்படும் பயனாளிகளுக்கு வழங்க சிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழு தீர்மானித்துள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் அதன் செயலர் மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
நிகழ்முறை:
எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம், 10.02.2012 அன்று 20.00 மணிக்கு, மன்றத் தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான் தலைமையில், மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. ஹாஃபிழ் எம்.எம்.அஹ்மத் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
சிறப்பழைப்பாளர் பாராட்டு:
இக்கூட்டத்தில், காயல்பட்டினத்தைச் சார்ந்த பிரமுகர் ஹாஜி சாளை முஹம்மத் அப்துல் காதிர் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்டு, மன்றத்தின் பல்வேறு நகர்நலப் பணிகளுக்கான செயல்திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார். பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள மக்களுக்கு பல்வேறு செயல்திட்டங்களை - குறிப்பாக, ஆதரவற்றோருக்கு அத்தியாவசிய சமையல் பொருளுதவி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருவதற்காக மன்றத்தைப் பாராட்டினார்.
சென்ற கூட்ட நிகழ்வுகள்:
அடுத்து, கடந்த கூட்ட நிகழ்வுகளை மன்றச் செயலாளர் மொகுதூம் முஹம்மத் வாசித்து, அவை செயல்படுத்தப்பட்டமை குறித்து விளக்கினார்.
வரவு செலவு கணக்கறிக்கை:
அவரைத் தொடர்ந்து, கூட்டம் நடைபெற்ற தேதி வரையிலான மன்றத்தின் வரவு-செலவு கணக்கறிக்கையை, மன்றப் பொருளாளர் கே.எம்.டி.ஷேக்னா லெப்பை சமர்ப்பிக்க கூட்டம் அதை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது. மன்ற உறுப்பினர்கள் தமது காலாண்டு சந்தாத் தொகையை குறித்த காலத்தில் செலுத்தி ஒத்துழைக்குமாறு அப்போது அவர் கேட்டுக்கொண்டார்.
நகர்நலப் பணிகள் குறித்த விளக்கம்:
பின்னர், அண்மையில் மன்ற அங்கத்தினர் பலர் தாயகம் சென்றிருக்கையில், மன்றத்தால் மேற்கொள்ளப்பட்ட வீடு புனரமைப்பு உள்ளிட்ட நலத்திட்டப் பணிகள் குறித்து, மன்ற உறுப்பினர் வி.என்.எஸ்.முஹ்ஸின் தம்பி விளக்கிப் பேசினார்.
புதியவர் அறிமுகம்:
அடுத்து, சிங்கப்பூருக்கு புது வரவான எம்.எஸ்.ஷாஹுல் ஹமீத் இக்கூட்டத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன், அவருக்குத் தகுந்த வேலைவாய்ப்பு கிட்டிட மன்ற அங்கத்தினர் அவருடன் ஒத்துழைத்துதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
விசாரணைக் குழு:
அடுத்து, பல்வேறு தேவைகளை முன்வைத்து, காயல்பட்டினத்திலுள்ள ஏழை - எளியோரிடமிருந்து மன்றத்தால் பெறப்படும் மனுக்களைப் பரிசீலித்து அறிக்கை சமர்ப்பிக்கும் பொறுப்பு, செயற்குழு உறுப்பினர்களான பி.எஸ்.எம்.அப்துல் காதிர், அப்துல்லாஹ் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் குறித்த விசாரணை அறிக்கையை, வரும் ஏப்ரல் மாத செயற்குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்க அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
மருத்துவ உதவி:
வயிற்றில் புற்றுநோய் கண்டு பாதிக்கப்பட்டுள்ள நோயாளி ஒருவருக்காக மன்றத்தின் சார்பில் ரூபாய் 15,000 உடனடி நிதியுதவி வழங்க தீர்மானிக்கப்பட்டது.
பயன்படுத்தப்பட்ட நல்லாடை சேகரிப்பு:
மன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாரிடமிருந்து, அவர்கள் பயன்படுத்திய - நன்னிலையிலுள்ள ஆடைகளை சேகரித்து, அவற்றை காயல்பட்டினத்திற்கனுப்பி, அங்குள்ள தேவையுடைய மக்களுக்கு அவற்றை வினியோகிக்க இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
வருடாந்திர பொதுக்குழு:
மன்றத்தின் அடுத்த வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தை, 31.03.2012 அன்று, சிங்கப்பூர் Fairy Point Chalet - Aloha Changi என்ற இடத்தில் குடும்ப சங்கம நிகழ்ச்சியாக நடத்தவும், அதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திட தீர்மானிக்கப்பட்டது. இப்பொதுக்குழு நிகழ்முறையில், மன்ற உறுப்பினர்கள், அவர்களின் குழந்தைகள், மகளிருக்கு தனித்தனி பரிசுப்போட்டிகள் நடத்தப்படவுள்ளதாகவும், மன்ற உறுப்பினர்கள் தவறாமல் குறித்த காலத்தில் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள வருமாறும் செயற்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
கூட்ட நிறைவு:
விவாதிக்க வேறம்சங்கள் எதுவுமில்லா நிலையில், 21.15 மணிக்கு, ஹாஜி சாளை முஹம்மத் அப்துல் காதிர் அவர்களின் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
சிற்றுண்டியுபசரிப்பு:
கூட்டத்தில், மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்களும், சிறப்பழைப்பாளர்களும் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும், மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் கைவண்ணத்தில், செயலாளர் மொகுதூம் முஹம்மத் இல்லத்தரசியின் தயாரிப்பில் கறிகஞ்சியும், கடியுணவும் பரிமாறப்பட்டது.
இவ்வாறு, சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயலாளர் மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 14:01/17.02.2012] |