திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயில் (தனி) சட்டப்பேரவை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சி.கருப்பசாமி கடந்தாண்டு அக்டோபர் மாதம் 22ஆம் தேதி காலமானதையடுத்து, அத்தொகுதியில் வரும் மார்ச் 18ஆம் இடைத்தேர்தல் நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இடைத்தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் 16.02.2012 (நேற்று) முதல் நடைமுறைக்கு வந்துள்ளதையடுத்து, தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு விழாக்கள் மற்றும் மக்கள் குறைதீர் வாராந்திர கூட்டங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
இந்திய தேர்தல் ஆணையத்தால், சங்கரன்கோயில் சட்டமன்றத் தொகுதிக்கு 2012ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் நாள் இடைத்தேர்தல் நடைபெறுமென அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இடைத்தேர்தல் நடைபெறவுள்ள சட்டமன்றத் தொகுதியின் பகுதிகளை உள்ளடக்கிய மாவட்டம் முழுமைக்கும் தேர்தல் நடத்தை விதிகளை நடைமுறைப்படுத்திடுமாறு தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம் இளையரசனேந்தல் குறுவட்டத்தின் 12 வருவாய் கிராமங்கள் சங்கரன்கோயில் சட்டமன்றத் தொகுதியில் உள்ளதால், தூத்துக்குடி மாவட்டத்திலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மாவட்டம் முழுவதும் 16.02.2012 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
எனவே, கோவில்பட்டி வட்டம் இளையரசனேந்தல் குறுவட்டத்திற்குட்பட்ட 12 வருவாய் கிராமங்கள் முழுவதிலும் இந்திய தேர்தல் ஆணையத்தால் வகுக்கப்பட்ட தேர்தல் நடத்தை விதி மற்றும் நன்னடத்தை விதிகளை (Model Code of Conduct) முழுமையாகப் பின்பற்றி நடத்திடவும், நேர்மையான மற்றும் அமைதியான முறையில் இடைத்தேர்தலை நடத்தி முடித்திட அனைத்து அரசியல் கட்சியினரும், பொதுமக்கள் அனைவரும் தங்களது ஒத்துழைப்பினை நல்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், தேர்தல் நடத்தை விதிகள் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நடைமுறைக்கு வந்ததையடுத்து 16.02.2012 (பிற்பகல்) முதல் அனைத்து அரசு விழாக்களும் ரத்து செய்யப்படுகின்றன.
26.02.2012 அன்று நடைபெறவிருந்த - தூத்துக்குடி மாவட்ட வெள்ளி விழா கொண்டாட்ட துவக்க விழாவும் ஒத்தி வைக்கப்படுகிறது.
மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம் மற்றும் மனுநீதி நாட்கள் ஆகியவை, இந்திய தேர்தல் ஆணையத்தின் மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகின்றன.
இவ்வாறு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |