பொது நல ஆர்வலரும், காயல்பட்டினம் மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க ஸபையின் செயலாளரும், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் தந்தையுமான பாளையம் முஹம்மத் இப்ராஹீம், 14.02.2012 அன்று (நேற்று) மாலை 05.00 மணியளவில் காலமானார். அன்னாரின் ஜனாஸா, இன்று காலை 10.30 மணியளவில் காயல்பட்டினம் மஸ்ஜித் அல்ஜதீத் - புதுப்பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, சிங்கப்பூர் காயல் நல மன்றம் சார்பில், அதன் செயலர் மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
சிறந்த சமூக சேவகரான ஜனாப் பாளையம் இப்ராஹீம் அவர்களின் மறைவுச் செய்தியறிந்து மிகவும் வருந்தினோம். அவர்களின் தன்னலமற்ற சேவை அளப்பரியது.
எம் மன்றத்தின் ஏராளமான உறுப்பினர்கள் மார்க்க ஒழுக்கக் கல்வி பயின்ற பயிற்சிப் பாசறையான மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபை - தொய்வுற்றிருந்த நிலையில், அதற்கு உயிரூட்டி, முன்னின்று நடத்தி, நமதூரின் நூற்றுக்கணக்கான மாணவர்கள் மார்க்கக் கல்வி கற்று, ஒழுக்கப் பாதையில் செவ்வனே செயல்பட முக்கிய காரணமாக அமைந்திட்ட ஜனாப் பாளையம் இப்றாஹீம் அவர்களின் மறைவு உண்மையில் நம் நகருக்கும், எம் மன்ற அங்கத்தினருக்கும் பேரிழப்பு என்றே கருதுகிறோம்.
மர்ஹூம் அவர்களுக்கு வல்ல அல்லாஹ் "ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ்" எனும் மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக... ஆமீன். அவர்களின் பிரிவால் வாடும் அன்னாரின் குடும்பத்தாருக்கு வல்ல அல்லாஹ் "ஸப்ரன் ஜமீலா " எனும் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக. ஆமீன்.
இவ்வாறு அந்த சிங்கப்பூர் காயல் நல மன்ற செயலர் மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |