முதலமைச்சர் உத்தரவால் ரூ.130 கோடி மதிப்புள்ள வக்ஃபு சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எ.முகம்மது ஜான் கூறியுள்ளார். இது குறித்து தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் முதன்மை செயல் அலுவலர் அப்துல் ராசிக் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு.எ.முகம்மது ஜான் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு வக்ஃப் வாரிய கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 15.2.2012 அன்று வக்ஃப் வாரிய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலர் திரு.கோ.சந்தானம் அவர்கள் முன்னிலை வகித்தார். முன்னதாக வக்ஃப் வாரிய முதன்மைச் செயல் அலுவலர் திரு.ப.அப்துல் ராசிக் அனைவரையும் வரவேற்றார்.
ஆய்வின் போது அமைச்சர் அவர்கள் உரையில், கடந்த ஜனவரி மாத ஆய்வுக் கூட்டத்தில் களப்பணியாளர்களுக்கு வழங்கிய அறிவுரைகளின்படி செயல்பட்டு ஜனவரி மாதம் பெறப்பட்ட வக்ஃப் வாரிய சகாயத் தொகை இதுவரை இல்லாத அளவிற்கு ரூ.40 இலட்சமாக உயர்ந்துள்ளதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த நிதியாண்டில் ஜனவரி 2011 வரை பெறப்பட்ட சகாயத் தொகை ரூ.2.37 கோடியாகும். நடப்பாண்டில் ஜனவரி 2012 வரை பெறப்பட்ட சகாயத் தொகை ரூ.2.67 கோடியாகும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.30 இலட்சம் அதிகமாக சகாயத் தொகை பெறப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது. இனி வரும் காலங்களிலும் இப்பணி தொய்வில்லாது தொடர்ந்து இலக்கினை அடைய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
மாண்புமிகு முதல்வர் அவர்களின் உத்தரவின்படி வக்ஃபுச் சொத்துக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டதன் காரணமாக கோவையில் யாகூப் திவான் ஹைருத் இன்ஷாவலி அவுலியா தர்கா வக்ஃபுக்குச் சொந்தமான ரூ.5 கோடி பெறுமானமுள்ள 48 சென்ட் பரப்புள்ள சொத்து ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
சென்னையில் திருவல்லிக்கேணி நவாப் கைருன்னிசா பேகம் சாஹிபா மற்றும் பப்பு மஸ்தான் தர்கா வக்ஃபிற்குச் சொந்தமான சுமார் ரூ.105 கோடி மதிப்பிலான 35 கிரவுண்டு நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.
மேலும் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், சிறுவாடி ப்ள்ளிவாசல் வக்ஃபுக்குச் சொந்தமான, முறைகேடாக விற்பனை செய்யப்பட்ட ரூ.20 கோடி மதிப்புள்ள 10.85 ஏக்கர் பரப்புள்ள சொத்துக்கள் நீதிமன்ற நடவடிக்கைக்குப் பின் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறாக சுமார் 130 கோடி ரூபாய் பெறுமான வக்ஃபுச் சொத்துக்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
இந்த சொத்துக்கள் அனைத்தும் மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்களின் உத்தரவின் பேரிலேயே மீட்கப்பட்டுள்ளது. எனவே மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள் சிறுபான்மையினரின் பாதுகாவலர் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்.
வக்ஃப் சொத்துக்களை மீட்க உறுதுணையாக இருந்த மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவிப்பதோடு இதற்காக
நடவடிக்கை மேற்கொண்ட அலுவலர்களையும் பாராட்டுகிறேன். தொடர்ந்து இப்பணியில் தனி கவனம் செலுத்தி ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வக்ஃபு சொத்துக்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், வக்ஃப் வாரியத்தில் இது நாள் வரை பதிவு செய்யப்படாத வக்ஃபுகளை பதிவு செய்ய உடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், புதியதாக துவங்கப்பட்டிருக்கும் பள்ளிவாசல்களையும் வாரியத்தில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கவும், வாரியத்தால் அங்கீகரிக்கப்படாத வக்ஃபின் நிர்வாகக்குழுக்களின் பட்டியல் எடுத்து வாரியத்தின் பார்வைக்குச் சமர்ப்பிக்கவும், நிர்வாகக்குழு வாரியத்தின் அங்கீகாரம் பெறும் வகையிலும்
செயல்பட வேண்டும். முறைகேடாக விற்கப்பட்ட வக்ஃப் சொத்தினை மீட்க உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வக்ஃபுச் சொத்துக்கள் - அவை வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்யப்பட்டாலும் பதிவு செய்யப்படவில்லை என்றாலும் அவை வக்ஃபுச் சொத்துக்களே. எனவே வக்ஃபுச் சொத்துக்கள் எந்த காலத்தில் முறைகேடாக விற்கப்பட்டிருந்தாலும் அவை மீட்கப்படும்.
வக்ஃப் வாரியத்தின் அனுமதியின்றி பரிவர்த்தனை செய்யப்படும் வக்ஃப் சொத்துக்களை சம்பந்தப்பட்ட சார்பதிவாளர்கள் பத்திரப்பதிவு மேற்கொள்ளக்கூடாது என உத்திரவிடப்பட்டுள்ளது. எனவே, யாராவது வக்ஃபுச் சொத்துக்களை விற்கவோ, பரிவர்த்தனை செய்ய முற்பட்டால் அந்த ஆவணங்களைச் சம்பந்தப்பட்ட சார்பதிவாளர்கள் வக்ஃப் வாரியத்தினுடைய தடையின்மைச் சான்று இல்லாமல் பதிவு செய்ய வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதை மீண்டும் சார்பதிவாளர்களுக்கு வலியுறுத்தி தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களின் உத்தரவின்படி உலமாக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 11,171 சைக்கிள்களில் இதுவரை 9,236
சைக்கிள்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 1,935 சைக்கிள்களை இம்மாத இறுதிக்குள் வினியோகம் செய்ய வேண்டும்.
மேலும், வக்ஃப் சொத்தினை அபிவிருத்தி செய்யும் திட்டங்கள் இருப்பின் அதனை பெற்று வாரியத்தில் சமர்ப்பிக்க வேண்டும். வக்ஃப் சொத்துக்களுக்கு புதிய வாடகையினை நிர்ணயம் செய்து வக்ஃபின் வருமானத்தை பெருக்க வேண்டும். வக்ஃபின் கணக்குகளை ஆய்வு செய்து, வாரியத்திற்கு முறையான கணக்குகளை சமர்ப்பிக்க அறிவுறுத்த வேண்டும்.
கடலூர் மாவட்டத்தில் ‘தானே’ புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு வக்ஃப் வாரிய ஊழியர்கள் சார்பாக ஒரு நாள் ஊதியத்தை அளித்தமைக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு முதலமைச்சரின் சீரிய தலைமையில் அமைந்துள்ள இந்த அரசு சிறுபான்மையினர்களின் நலன்களை பாதுகாப்பதற்கும், வக்ஃப் சொத்துக்களை பாதுகாப்பதற்கும் முன்னுரிமை வழங்கி வருகிறது. எனவே சிறுபான்மையினரின் பாதுகாவலராக விளங்கும் இந்த அரசின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் நீங்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றி வக்ஃப் வாரியத்தின் சிறப்பான செயல்பாட்டினை உறுதி
செய்வதோடு இந்த அரசுக்கு நற்பெயரை ஈட்டித் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை,
தலைமைச் செயலகம், சென்னை.
|