பொது நல ஆர்வலரும், காயல்பட்டினம் மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க ஸபையின் செயலாளரும், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் தந்தையுமான பாளையம் முஹம்மத் இப்ராஹீம், 14.02.2012 அன்று (நேற்று) மாலை 05.00 மணியளவில் காலமானார். அன்னாரின் ஜனாஸா, இன்று காலை 10.30 மணியளவில் காயல்பட்டினம் மஸ்ஜித் அல்ஜதீத் - புதுப்பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, கத்தர் காயல் நல மன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
சிறந்த சமூக சேவகரான ஜனாப் பாளையம் இப்ராஹீம் அவர்களின் மறைவுச் செய்தியறிந்து மிகவும் வருந்தினோம். அவர்களின் தன்னலமற்ற சேவை அளப்பரியது.
எங்களின் மன்றப் பணிகளில் - குறிப்பாக, சிவன்கோயில் தெருவில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய (அப்போதைய) துவக்கப்பள்ளிக்கு செய்யப்பட்ட நலத்திட்ட உதவிகள், கே.ஏ.மேனிலைபள்ளியில் நடைபெற்ற பேச்சுப்போட்டிக்கு எம் மன்றத்துடன் இணைந்து பணியாற்றி, பரிசுகளை பெற்று வழங்கிய அவர்களின் சேவைகளை நாங்கள் நேரடியாக அறிந்தவர்கள்.
அந்த வகையில், அவர்களின் பிரிவை பேரிழப்பாகவே எம் மன்றம் கருதுகிறது. அன்னாரின் மறைவுக்கு எம் மன்றத்தின் உறுப்பினர்கள் அனைவரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றனர்.
மர்ஹூம் அவர்களுக்கு வல்ல அல்லாஹ் "ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ்" எனும் மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக... ஆமீன். அவர்களின் பிரிவால் வாடும் அன்னாரின் குடும்பத்தாருக்கு வல்ல அல்லாஹ் "ஸப்ரன் ஜமீலா " எனும் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக. ஆமீன்.
இவ்வாறு அந்த கத்தர் காயல் நல மன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.N.முஹம்மத் யூனுஸ்,
துணைத்தலைவர்,
காயல் நல மன்றம்,
தோஹா, கத்தர். |