காயல்பட்டினம் நகர்மன்றம் மூலம் அறிவிக்கப்படும் டெண்டர்களில் - நகர்மன்றத்தில் பதிவு செய்துள்ள ஒப்பந்தகாரர்கள் (Registered Contractors) -
பங்கேற்பது வழமை. நகர்மன்ற பணிகளின் மதிப்பு அடிப்படையில் - தகுதியான ஒப்பந்தகாரர்கள் - டெண்டரில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.
தற்போது - காயல்பட்டினம் நகர்மன்றத்தில், Class 1 முதல் Class 4 வரையிலான பணிகளை செய்ய - 4 ஒப்பந்தகாரர்கள் பதிவுசெய்துள்ளனர்.
அவர்கள் -
(1) டி. தலவாணிமுத்து
(2) ஏ. அலக்ஸாண்டர்
(3) எஸ். ரம்போலா
(4) எஸ். சுதர்சன்
Class 5 மதிப்பு பணிகளை செய்ய 6 ஒப்பந்தகாரர்கள் பதிவுசெய்துள்ளனர்.
(1) டி. தங்கப்பூ
(2) எப். முனவர்ரா
(3) எஸ். குமரேசன்
(4) ஏ. முருகன்
(5) ஜெய சூரியா Construction (ஜே.முருகேசன்)
(6) எஸ்.பால்ராஜ்
பொதுவாக - போட்டிகள் இருக்கும் இடத்தில, தரமும் சிறந்ததாக இருக்கும் எனக்கூறப்படுவது உண்டு. காயல்பட்டினம் நகர்மன்றத்தினை
பொறுத்தவரை 10 ஒப்பந்தகாரர்கள் பதிவு செய்திருந்தாலும், அங்கு நிறைவேற்றப்படும் பணிகள் குறித்து -
-- குறைவான தரம்,
-- காலம் தாழ்ந்து பணிகள் நிறைவு செய்யப்படுவது,
-- டெண்டர்களை எடுக்க பதிவுசெய்துள்ள ஒப்பந்தகாரர்கள் ஆர்வம் காட்டுவதில்லை
என சில அதிருப்திகள் அவ்வப்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
உதாரணமாக - தாயிம்பள்ளி அருகே பேரூந்து நிறுத்தம் (Bus Shelter) அமைக்க - 2 லட்ச ரூபாய் மதிப்பிலான டெண்டர் - கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்
இதுவரை 6 முறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்
நகர்மன்றத்தில் பதிவு செய்துள்ள எந்த ஒப்பந்தக்காரரும் - அதனை எடுக்க - முன்வரவில்லை. 4
மாதத்தில் (கடந்த டிசம்பர் மாதத்திற்குள்) முடிக்கப்பட்டிருக்க வேண்டிய அப்பணி - இதுவரை துவக்கப்படவே இல்லை.
சமீப காலத்தில் - காயல்பட்டினம் நகர்மன்றம் மூலமாக நிறைவேற்றப்பட்ட பெரிய திட்டம் - சிறப்பு சாலைகள் திட்டம் கீழ் சிமெண்ட் சாலை அமைப்பது. சுமார் 2 கோடி மதிப்பிலான இத்திட்டத்தின் கீழ் - நகரின் 13 பகுதிகளில் 5.6 கிலோமீட்டர் நீளத்திற்கும், 3 - 4 மீட்டர்
அகலத்திற்கும், சிமெண்ட் சாலை அமைக்கப்படவேண்டும். இதற்கான ஒப்புதல் தீர்மானம் - காயல்பட்டினம் நகர்மன்றம் மூலம்
அக்டோபர் 20, 2010 அன்று நிறைவேற்றப்பட்டது.
மேலே குறிப்பிடப்பட்ட 13 பகுதிகள் இரு பாகங்களாக பிரிக்கப்பட்டு நவம்பர் 1 (2010) அன்று டெண்டர் விடப்பட்டது. முதல் 7 பகுதிகள் - பாகம்
1 (PACKAGE 1) என்றும், அடுத்த 6 பகுதிகள் பாகம் 2 (PACKAGE 2) என்றும் பிரிக்கப்பட்டன.
பாகம் 1 (PACKAGE 1)
1) கீழநெய்னார் தெரு
2) சித்தன் தெரு முதல் நெய்னார் தெரு வரை (வழி-சிறுபள்ளி)
3) விசாலாட்சிஅம்மன் கோவில் தெரு எதிர் (தெற்கு பகுதி)
4) காயிதே மில்லத் நகர் மெயின் ரோடு
5) மேலநெசவுத் தெரு முதல் வாணியகுடி தெரு வரை
6) பிரின்ஸ் தெரு
7) பைபாஸ் தெரு முதல் சிவன் கோவில் தெரு வரை (வழி அரசு மருத்துவமனை)
பாகம் 2 (PACKAGE 2)
1) இரத்தினாபுரி கிழக்கு தெரு தொலைபேசி நிலையத்திலிருந்து
2) சதுக்கை தெரு முதல் வடக்கு முத்தாரம்மன் கோவில் தெரு வரை (வழி ஜலாலியா மஹால்)
3) புதுக்கடை தெரு
4) வடக்கு முத்தாரம்மன் கோவில் தெரு முதல் கோமான்புதூர் வரை
5) சீதக்காதி நகர்
6) அலியார் தெரு
நவம்பர் 2010 இல் விடப்பட்ட டெண்டரில் - பாகம் 1 திட்டத்திற்கு, இரண்டு ஒப்பந்தகாரர்கள், ஒப்பந்த புள்ளியினை வழங்கியிருந்தனர். அவர்கள்
டி.தலவாணிமுத்து மற்றும் எஸ்.ரம்போலா. இதில் தலவாணிமுத்துவின் ஒப்பந்தப்புள்ளி - காயல்பட்டினம் நகர்மன்றத்தில் நவம்பர் 19, 2010 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எண் 793 மூலம் கீழ்க்காணும் காரணங்களுக்காக
நிராகரிக்கப்பட்டது.
(1) திரு சு.தலவாணிமுத்து என்பவர் ஒப்பந்தகாரர் வகுப்பு-4 என்பதற்கான சான்றிதழை நாளது தேதிக்கு புதுப்பிக்கவில்லை
(2) தணிக்கை சான்றிதழ்களை கடந்த ஐந்து வருடங்களுக்கு (2006-07 - 2009-10) முழுமையாக சமர்ப்பிக்கவில்லை
(3) சான்றிதழ் அனைத்துக்கும் முழுமையாக நோட்டரி பப்ளிக்-ன் சான்றொப்பம் பெறப்படவில்லை
(4) அன்னாரிடம் உள்ள தளவாட கருவிகள் மற்றும் சாமான்கள் விபரத்திற்கு முழுமையாக சான்றொப்பம் செய்து தரப்படவில்லை
வந்த இரண்டு ஒப்பந்தபுள்ளிகளில் ஒன்று நிராகரிக்கப்பட்டதால் எஞ்சியிருந்த ஒப்பந்தகாரர் எஸ்.ரம்போலா - பாகம் 1 (PACKAGE 1) ஒப்பந்தத்தை வென்றார்.
பாகம் 2 (PACKAGE 2) திட்டத்திற்கு, இரண்டு ஒப்பந்தகாரர்கள், ஒப்பந்த புள்ளியினை வழங்கியிருந்தனர். அவர்கள் தூத்துக்குடி குருஸ்புரத்தினை சார்ந்த
எஸ்.ரம்போலா மற்றும் அதே குருஸ்புரத்தினை சார்ந்த எஸ். சுதர்சன் ஆகியோர். இதில் குறைந்த தொகையினை குறிப்பிட்டிருந்த எஸ். ரம்போலா
டெண்டரினை வென்றார்.
பணிகள் துவக்கப்பட்ட மூன்று மாதங்களில் 3 இல் 1 பங்கு வேலை முடிக்கப்படவேண்டும் என்றும், மீதி (3 இல் 2 பங்கு) பணிகள் ஆறு
மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்பதும் நிபந்தனை. இவ்விரு காலக்கெடுவினையும் தாண்டினால் - எஞ்சியிலுள்ள பணியின் மதிப்பில்
அபராதமாக 0.1% விதிக்கப்பட வேண்டும்.
மேலும் 6 மாத கெடு முடிந்து 45 நாட்களுக்கு பிறகும் பணி முடியவில்லை என்றால் ஒப்பந்தம் இரத்து
செய்யப்பட்டு, வைப்பு தொகை கையெகப்படுத்தப்பட்டு, ஒப்பந்ததாரர் - வருங்கால டெண்டர்களில் பங்கேற்க்கா வண்ணம் ஒதுக்கப்படவேண்டும்
(Black List). இதுவும் நிபந்தனை. சிமெண்ட் சாலை பணி அதன் காலக்கெடுவான 6 மாதங்களை தாண்டி, பல மாதங்களாக முழுமையடையாமல்
உள்ளது.
ஒப்பந்தகாரர் கையெழுத்திட்ட சிறப்பு சாலைகள் திட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதி ...
இந்த சிமெண்ட் சாலைப்பணி குறித்த முழு ஒப்பந்த விபரங்களை காண இங்கு அழுத்தவும்.
காயல்பட்டினம் நகர்மன்றத்தில் புதிதாக ஒப்பந்தகாரர்கள் பதிவு செய்வது மிகவும் அவசியம். தகுதியான ஒப்பந்தகாரர்கள், நியாயமான
போட்டியில் வெல்லும் டெண்டர் மூலம் தான் - பணிகள் சிறப்பான முறையில் நிறைவேற்றப்பட முடியும்.
காயல்பட்டினத்தில் பல அனுபவமுள்ள பொறியாளர்கள் உள்ளனர். அவர்கள் - தங்களை, நகர்மன்றத்தில் பதிவு செய்துக்கொள்ள (Registered
Contractors) ஆர்வம் காட்டுவதில்லை. இதற்கு முக்கிய காரணம் - டெண்டர் பெறவும், டெண்டர் பெற்றப்பிறகும் - பலருக்கு லஞ்சம்
கொடுக்கவேண்டியிருக்கும் என்ற அச்சம்.
இது நியாயமான அச்சம் என்றாலும் - புதிதாக பதவியேற்றுள்ள நகர்மன்றம், வெளிப்படையான
நிர்வாகத்தினை தருவதற்கு உறுதி அளித்துள்ள சூழலில், தகுதியான பொறியாளர்கள் தங்களை பதிவு செய்து கொண்டு, காயல்பட்டினத்தில் - லஞ்சமற்ற , காலத்தில் நிறைவு பெரும், தரமான, நகர்மன்றப் பணிகள் மூலம் புதிய சகாப்தத்தினை துவக்கலாம். |