மத்திய அரசினால் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் சிவில் சர்விசஸ் தேர்வுகள் - இவ்வாண்டு மே 20 அன்று துவங்குகின்றன. துவக்கமாக
அன்றைய தினம் நுழைவு தேர்வு (Preliminary Examination) நடைபெறும். இத்தேர்வுகள் மூலம் IAS உட்பட 24 அரசு சேவை துறைகளுக்கான
அதிகாரிகள் - தேர்வு செய்யப்படவுள்ளனர்.
கடந்த ஆண்டுகளில் இத்தேர்வுகளில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குகொண்டுள்ளனர். தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரை உட்பட -
நாடு முழுவதும் உள்ள 45 நகரங்களில் இத்தேர்வுகள் நடைபெறும்.
இவ்வாண்டுக்கான தேர்வுகள் குறித்த விபரம் இம்மாதம் 4ம் தேதி வெளியிடப்பட்டது. இத்தேர்வுகளில் பங்கேற்க விரும்புவோர் -
www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் - மார்ச் 5 நள்ளிரவுக்குள் பதிவு செய்யவேண்டும்.
இத்தேர்வுகளில் கலந்துக்கொள்ள விரும்புவோர் வயது 21 - 30 க்குள் இருக்கவேண்டும். அதாவது - ஆகஸ்ட் 2, 1982 க்கு முன்னரோ, அல்லது
ஆகஸ்ட் 1, 1991 க்கு பிறகோ, பிறந்தவராக இருக்க கூடாது.
இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்த பட்டத்தினையும் பெற்றவராக இருக்கலாம். பட்டப்படிப்பின் இறுதி ஆண்டு மாணவராகவும்
இருக்கலாம்.
இத்தேர்வுகளில் வெற்றிப்பெற 4 முயற்சிகளுக்கு அனுமதி வழங்கப்படும். SC/ ST / OBC சமுதாய மக்களுக்கு விதிமுறைகள்
தளர்த்தப்பட்டுள்ளன.
(A) நுழைவு தேர்வுகள் (Preliminary Exam)
மே 20 அன்று நடைபெறும் நுழைவு தேர்வுகளில் இரண்டு தாள்கள் (OBJECTIVE TYPE) அடங்கும். ஒவ்வொரு தாளுக்கும் 200 மதிப்பெண்கள்
வழங்கப்படும். மொத்தம் 400 மதிப்பெண்கள். தவறான பதில்களுக்கு மதிப்பெண்கள் குறைக்கப்படும் (NEGATIVE MARKING).
இவ்வாண்டு சுமார் 1037 காலியிடங்கள் உள்ளதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர் நுழைவு தேர்வினை எழுதினாலும் -
மொத்த காலியிடங்களில் 12 - 13 மடங்கு (சுமார் 12,000 - 13,000 பேர்) மாணவர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டு, அடுத்தக்கட்ட முக்கிய
தேர்வுகளுக்கு (Main Examination) அழைக்கப்படுவர். முடிவுகள் ஆகஸ்ட் மாதம் வெளியாகும்.
(B) முக்கிய தேர்வுகள் (Main Exam)
முக்கிய தேர்வுகள் இவ்வாண்டு அக்டோபர் 5 துவங்கும். அவை 21 நாட்கள் நீடிக்கும். இதற்கான விண்ணப்பம் - நுழைவு தேர்வுகள் முடிவுக்கு
பிறகே பெறப்படும். முக்கிய தேர்வுகளில் - 9 தாள்களுக்கான பரீட்சை நடத்தப்படும். அவை -
==> மொழிப்பாடம் (300 மதிப்பெண்கள்),
==> ஆங்கிலம் (300 மதிப்பெண்கள்),
==> கட்டுரை (200 மதிப்பெண்கள்),
==> பொது பாடங்கள் (General Studies) - 2 தாள்கள் (2 x 300 மதிப்பெண்கள் ) மற்றும்
==> மாணவர் தேர்வு செய்யும் இரண்டு பாடங்களில் - தலா இரண்டு தாள்கள் (4 x 300 மதிப்பெண்கள்).
மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலம் தாள்களில் மதிப்பெண்கள் - தரவரிசை தயாரிக்கப்படும்போது கணக்கில் எடுக்கப்படாது. மீதியுள்ள 2000
மதிப்பெண்களில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்கள் - அடிப்படையிலேயே - இத்தேர்வுகளின் மூன்றாம் கட்டமான நேர்காணலுக்கு (INTERVIEW) மாணவர்கள் அழைக்கப்படுவர்.
முக்கிய தேர்வு முடிவுகள் பொதுவாக மார்ச் மாதம் வெளியிடப்படும். 12,000 - 13,000 பேர் முக்கிய தேர்வுகள் எழுதினாலும், அவ்வாண்டின்
காலியிடங்களில் இரு மடங்கு மாணவர்களே நேர்காணலுக்கு (INTERVIEW) அழைக்கப்படுவர் (சுமார் 2000 பேர்). நேர்காணல்கள் - ஏப்ரல் / மே மாதங்களில் நடைபெறும். நேர்காணலுக்கு 300 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
முக்கிய தேர்வுகளில் உள்ள 2000 மதிப்பெண்களுடன், நேர்காணல் மதிப்பெண்கள் 300 ம் கூட்டப்பட்டு அதன் அடிப்படையிலேயே இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும். இறுதிமுடிவுகள் - பொதுவாக அடுத்த நுழைவு தேர்வுகள் துவங்குவதற்கு முன்னர் வெளியாகும் (மே / ஜூன் மாதம்).
இத்தேர்வுகள் குறித்த முழு விபரங்கள் காண இங்கு அழுத்தவும். |