புற்றுநோய் தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நோக்கில், சென்னை டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியின் தேசிய மாணவர் படையினர், எஸ்.சந்தோஷ் பாபு தலைமையில் மோட்டார் சைக்கிள் வாகன பயணமாக தமிழகமெங்கம் சென்று பரப்புரை செய்து வருகின்றனர்.
சென்னையிலிருந்து புறப்பட்ட இப்பரப்புரைக் குழுவினர், திருச்சி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி வழியாக, நேற்று காலையில் காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளிக்கு வந்தடைந்தனர். அங்கு நகர அரிமா சங்கம் சார்பில் அவர்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டது.
துளிர் பள்ளி கேளரங்கில் நடைபெற்ற மேடை நிகழ்ச்சிக்கு, காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஏ.வஹீதா தலைமை தாங்கினார். நகர அரிமா சங்க தலைவர் எஸ்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா முன்னிலை வகித்தார். நகரப் பிரமுகர்களான ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், ஹாஜி ஏ.எஸ்.ஜமால், ஜுவெல் ஜங்ஷன் கே.அப்துர்ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புற்றுநோய் குறித்து விழிப்புணர்வூட்டும் நோக்கில் ஜித்தா காயல் நற்பணி மன்றத்தால் தயாரித்து வெளியிடப்பட்ட “புற்றுக்கு வைப்போம் முற்று” குறுந்தகடு பரப்புரைக் குழுவினருககு அன்பளிப்புச் செய்யப்பட்டது. ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ, ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் ஆகியோர் குறுந்தகடை வழங்கினர்.
பின்னர், புற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள், அதற்காக அரசு மேற்கொண்டு வரும் செயல்திட்டங்கள் குறித்து பரப்புரைக் குழு தலைவர் சந்தோஷ்பாபு உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து புற்றுநோய் தடுப்பு குறித்த - பரப்புரைக் குழுவின் ஓரங்க நாடகம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை, துளிர் பள்ளியின் அலுவலக மேலாளர் சித்தி ரம்ஜான் ஒருங்கிணைத்திருந்தார். கொமந்தார் இஸ்மாஈல் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட பயணக் குழுவினர், காயல்பட்டினம் எல்.எஃப்.ரோடு, பிரதான வீதி, கே.டி.எம். தெரு வழியாக கே.எம்.டி. மருத்துவமனையைச் சென்றடைந்தனர். அங்கு, மருத்துவமனை நிர்வாகிகள், இருதய நோய் மருத்துவ சிறப்பு நிபுணர் டாக்டர் மஹ்பூப் சுப்ஹானீ ஆகியோர் அவர்களுக்கு வரவேற்பளித்தனர். பின்னர் புற்றுநோய் தடுப்பின் அவசியத்தை உணர்த்தும் ஓரங்க நாடகம் பரப்புரைக் குழுவினரால் நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, புற்றுநோய் காரணி கண்டறியும் குழு - CFFC ஏற்பாட்டில், கே.எம்.டி. மருத்துவமனை வளாகத்தில் துவக்கப்படவிருக்கும் புற்றுநோய் பரிசோதனைக்கான சிறப்பு அறையை பரப்புரைக் குழுவினர் பார்வையிட்டனர்.
கே.எம்.டி. மருத்துவமனையில் நிகழ்ச்சிகள் நிறைவுற்ற பின்னர், திருச்செந்தூர் சாலை, அப்பா பள்ளித் தெரு, சித்தன் தெரு, அம்பல மரைக்கார் தெரு, சதுக்கைத் தெரு ஆகிய தெருக்களில் நகர்வலமாகச் சென்ற பரப்புரைக் குழுவினர், சென்ட்ரல் மேனிலைப்பள்ளியை சென்றடைந்தனர். செல்லும் வழியில், புற்றுநோய் தடுப்பு குறித்து பொதுமக்களிடம் பரப்புரை செய்தனர்.
அங்கிருந்து காட்டுத் தைக்கா தெரு, சீதக்காதி நகர், இரத்தினபுரி வழியாக மீண்டும் துளிர் பள்ளியை அடைந்த பரப்புரைக் குழுவினருக்கு அங்கு மதிய உணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
நிகழ்வுகள் அனைத்திலும், சுமார் 50 பேர் கொண்ட பரப்புரைக் குழுவினர் பங்கேற்றனர். நிகழ்ச்சிகளை பெண்கள் உள்ளிட்ட நகர பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு அவதானித்தனர்.
பரப்புரைக் குழுவினர், தம் அடுத்தகட்ட பயணமாக நாகர்கோயில், கன்னியாகுமரி செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்,
சில படங்கள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன. (13.02.2012 - 14:05hrs)
செய்தி திருத்தப்பட்டது @ 13.02.2012 - 18:45hrs
|