2500 MW - 3500 MW அளவுக்கு மின்சார பற்றாக்குறை தமிழகத்தில் பல ஆண்டுகளாக நிலவுகிறது. கடந்த காலங்களில் - தமிழக மின்சார வாரியம் -
பற்றாக்குறையினை - வெளியிலிருந்து மின்சாரத்தினை வாங்கியும், காற்றாலை மூலம் பெறும் மின்சாரம் மூலமும், திட்டமிடப்பட்ட மின்வெட்டுகள்
மூலமும் சமாளித்து வந்தது. ஆனால் - தற்போது நிலவும் மின்சார வாரியத்தின் மோசமான நிதி நிலைமையினால் - வெளியில் இருந்து அதிக
விலைக்கு மின்சாரத்தினை வாங்க - அரசாங்கம் தயாராக இல்லை எனக்கூறப்படுகிறது.
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ள 2000 MW அளவு மின்சாரத்தில், தமிழகத்திற்கு 925 MW கிடைக்கும்.
கூடங்குளம் அணு மின் நிலையத்தின் அவசியத்தை உணர்த்தவும், அதற்கான எதிர்ப்பினை வலு இழக்க செய்யவும் - அரசாங்கம், வெளியில்
இருந்து மின்சாரத்தினை வாங்க அவசரம் காண்பிக்கவில்லை என ஒரு சிலர் கூறுகின்றனர்.
450 MW அளவிலான மின்சாரத்தினை வெளியில் இருந்து வாங்க டெண்டர் டிசம்பர் 3 அன்று அறிவிக்கப்பட்டது. எதிர்வரும் பிப்ரவரி 18 அன்று
டெண்டர் முடிவுகள் வெளியாகவுள்ளன. இருப்பினும் - தற்போதைய நிலையில் பார்க்கும்போது - டெண்டர் மூலம் கிடைக்கவுள்ள - 450 MW
மின்சாரம் என்பது மின் தட்டுப்பாட்டுக்கு ஒரு குறிப்பிட்ட அளவே தீர்வு தரும்.
தமிழக மின்சார வாரியத்தின் மோசமான நிதி நிலைமைக்கு பல காரணங்கள் உள்ளன. அவைகளை விரிவாக அடுத்த பாகத்தில் காணலாம்.
தற்போது நிலவும் மின்வெட்டுக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் - அடிப்படையிலான காரணம் - திட்டமிடப்படாத வளர்ச்சியே.
1957 ஆம் ஆண்டு தமிழகத்தில் மின்சாரம் இணைப்புகளின் எண்ணிக்கை 4.3 லட்சம். இன்று அது 223.44 லட்சமாக உள்ளது. 1957 ஆம் ஆண்டு -
மின்சாரம் பெற்ற ஊர்களின் எண்ணிக்கை வெறும் 1813. ஆனால் இன்று அது 63,956 ஆக உள்ளது. 1957 ஆம் ஆண்டு உச்ச நிலை மின்சார
தேவை - 172 MW. ஆனால் இன்றைய தேவை 10,702 MW. 1957 ஆம் ஆண்டு சராசரியாக ஒரு நபர் 21 யூனிட் மின்சாரத்தினை பயன்படுத்தினர்.
ஆனால் - இன்று தொலைக்காட்சி, ஏசி. பிரிட்ஜ் போன்ற சாதனங்களின் வருகையால் - தனி நபர் மின்சாரப்பயன்பாடு - சுமார் 1040 யூனிட்டாக
(ஆண்டுக்கு) உள்ளது.
அது மட்டும் அல்ல. மின்சார இணைப்புகளின் எண்ணிக்கை ஆண்டொன்றுக்கு 4 - 5 சதவதீம் வளர்ந்து வருகிறது.
மேலும் புதிய தொழிற்சாலைகளும்
- விரைவாக ஒப்புதல் வழங்கப்பட்டு துவங்கப்பட்டு வருகின்றன. ஆனால் - இவைகளினால் ஏற்படும் மின்சாரத்தேவையினை சமாளிக்க - புதிதாக
மின் உற்பத்தி மையங்கள் விரைவாக அமைக்கப்படவில்லை.
தமிழகத்தில் உள்ள - சுமார் 5.5 லட்ச தொழிற்சாலை இணைப்புகள், மொத்த இணைப்புகளில் - 3 சதவீதத்திற்கும் குறைவே. ஆனால் - உற்பத்தியாகும், மின்சாரத்தில் அவை - ஏறத்தாழ 35 சதவீதத்தை பயன்படுத்துகின்றன.
[தொடரும்] |