இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இலங்கை வெலிகமையில் நடைபெற்ற மீலாத் விழாவில் பங்கேற்றுவிட்டு கொழும்பு சென்ற - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு, இலங்கை காயல் நல மன்றம் (காவாலங்கா) சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது.
இதுகுறித்து, காவாலங்கா அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
வரவேற்பு:
இலங்கை நாட்டின் வெலிகமை நகரில் நடைபெற்ற மீலாத் விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றிவிட்டு, தமிழகம் திரும்பும் வழியில், 07.02.2012 செவ்வாய்க்கிழமை இரவு கொழும்பு வந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய பொதுச் செயலாளரும்; தமிழக தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகதீன் மற்றும் அவருடன் வந்திருந்த அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளுள் ஒருவரான தளபதி ஷஃபீக்குர்ரஹ்மான் ஆகியோருக்கு, எமது இலங்கை காயல் நல மன்றம் (காவாலங்கா) சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது.
கொழும்பு வந்தடைந்த அவர்களை, காவாலங்கா சார்பில் ஹாஜி பி.எம்.நஜ்முத்தீன், ஹாஜி பி.எம்.ரஃபீக், ஹாஜி எஸ்.ஏ.ஜவாஹிர், ஹாஜி எம்.என்.மக்கீ, ஹாஜி பி.எம்.முஸ்ஸம்மில், ஹாஜி பி.எம்.இக்பால் ஆகியோர் வரவேற்று, கொழும்பு புகாரீ அன் கோ இல்லத்தில் தங்க வைத்தனர்.
அமைச்சர் ரஊஃப் ஹக்கீமுடன் சந்திப்பு:
பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களின் வருகையை தமிழ்த்தென்றல் அல்ஹாஜ் அலீ அக்பர் மூலம் அறிந்துகொண்ட இலங்கை நீதியமைச்சர் ரஊஃப் ஹக்கீம், மறுநாள் 08.02.2012 அன்று காலையிலேயே அவர்களின் தங்குமிடம் வந்து, பேராசிரியரையும், தளபதியையும் இலங்கை பாராளுமன்றத்திற்கு அழைத்துச் சென்றார்.
இந்திய - இலங்கை உறவுகள் குறித்து, இலங்கை பாராளுமன்றத்திலுள்ள தனதலுவலகத்தில் அவர் நீண்ட நேரம் உரையாடினார். இலங்கை - இந்திய முஸ்லிம்களின் எதிர்கால பரஸ்பர ஒத்துழைப்புகளைப் பற்றி அவர்கள் வெகுநேரம் உரையாடினர்.
முஸ்லிம் லீக் தூதுக்குழு:
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பில் உத்தியோகப்பூர்வ தூதுக்குழு ஒன்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவைச் சந்திக்க வேண்டும் என்று போராசிரியர் காதர் மொகிதீன் அப்போது அபிப்பிராயம் தெரிவிக்க, அமைச்சர் ரஊஃப் ஹக்கீம் அதனைப் பெரிதும் வரவேற்றதோடு, அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளையும் முன்னின்று செய்து தருவதாக உறுதியளித்தார்.
மேலும் இந்திய வெளிவிவகாரம் மற்றும் மனித வள மேம்பாட்டு இணையமைச்சர் இ.அஹ்மத் அவர்களையும் இலங்கை அரசின் சார்பாக உத்தியோகப்பூர்வ அழைப்பு விடுக்க விரும்புவதாக அப்போது அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கை வானொலி ஒலிபரப்பு வீச்செல்லையை தமிழகம் வரை நீட்டல்:
பின்னர், இலங்கை வானொலி முஸ்லிம் சேவை நிகழ்ச்சிகளை தமிழ்நாட்டு மக்களும் கேட்டுப் பயன்பெற உதவிடுமாறு பேராசிரியர் காதர் மொகிதீன் வேண்டுகோள் விடுத்தார். இதே வேண்டுகோளை முன்வைத்து, இந்தியா - காயல்பட்டினத்திலிருந்து எழுத்தாளர் சாளை எஸ்.எம்.ஏ.பஷீர், எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் கடந்த 24.02.2010 அன்று, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை நிகழ்ச்சிகளின் அப்போதைய பணிப்பாளர் அல்ஹாஜ் எம்.இசட்.அஹ்மத் முனவ்வர் ஏற்பாட்டில், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்ஸன் சமரசிங்கவை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்ததையும், பின்னர், மறைந்த மர்ஹூம் எம்.எல்.ஷாஹுல் ஹமீத் (எஸ்.கே.) தலைமையிலான குழுவினர், 26.05.2010 அன்று ஹட்ஸன் சமரசிங்கவை நேரில் சந்தித்து அதே கோரிக்கையை வலியுறுத்தியதையும், இந்தியாவில் ஒலிபரப்பைத் தர அனுசரணையாளர்கள் தேவை என்று அப்போது ஹட்ஸன் சமரசிங்க தெரிவித்ததையும், ஹாஜி பி.எம்.ரஃபீக் அப்போது நினைவுகூர்ந்தார்.
தேவையான அனுசரணையைப் பெற்றிட அனுசரணையாளர்களை அணுகி முயற்சிக்கலாம் என அப்போது பேராசிரியர் காதர் மொகிதீன் தெரிவித்தார்.
இலங்கை பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான அல்ஹாஜ் ஹஸன் அலீ, தமிழ்த்தென்றல் அல்ஹாஜ் அலீ அக்பர் ஆகியோர் இந்நிகழ்வின்போது உடனிருந்தனர்.
ஜனாதிபதி ஆலோசகர் அஸ்வர் சந்திப்பு:
இவ்வமர்வையடுத்து, இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களான - ஜனாதிபதியின் ஆலோசகர் அல்ஹாஜ் ஏ.எச்.எம்.அஸ்வர், அல்ஹாஜ் முஹம்மத் ஹரீஸ் ஆகியோர், பேராசிரியர் காதர் மொகிதீனை பாராளுமன்றத்திலேயே சந்தித்து உரையாடினர்.
தொலைபேசியில் பேட்டி:
பேராசிரியர் அவர்களின் இந்த வருகையை அல்ஹாஜ் ஓ.எல்.எம்.ஆரிஃப் மூலம் அறிந்துகொண்ட இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஆலோசகர் அல்ஹாஜ் எம்.இசட்.அஹ்மத் முனவ்வர், அவரை ஒலிபரப்பு நிலையத்திற்கழைத்து நேர்காணல் செய்ய விரும்பினார். எனினும் நேரமின்மை காரணமாக, இலங்கை பாராளுமன்றம் செல்லும் வழியில், அமைச்சரின் வாகனத்திலிருந்தவாறே தொலைபேசி மூலமாக அமைச்சர் ரஊஃப் ஹக்கீம், பேராசிரியர் காதர் மொகிதீன் ஆகியோரைப் பேட்டி கண்டு, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை நிகழ்ச்சியில் அதை நேரடி ஒலிபரப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு, இலங்கை காயல் நல மன்றம் (காவாலங்கா) சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
அல்ஹாஜ் S.A.ஜவாஹிர்,
நிர்வாகக் குழு உறுப்பினர்,
இலங்கை காயல் நல மன்றம் (காவாலங்கா),
கொழும்பு, இலங்கை. |