தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நிலவும் மின்வெட்டு பிரச்சனை தற்போது உச்சகட்டத்தினை அடைந்துள்ளது. அதிகாரப்பூர்வமாக மின்வெட்டு நேரம் அறிவிக்கப்படாவிட்டாலும் - சென்னையை தவிர தமிழகத்தின் பிற பகுதிகளில் 8 மணி நேரம் வரை தினசரி மின்வெட்டு அறிவிக்கப்படாமல் அமலில் உள்ளது. தலைநகர் சென்னையில் - தினமும் ஒரு மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது.
தொடரும் மின்வெட்டுகளால் தேர்வுகளை எதிர்நோக்கியிருக்கும் மாணவர்கள், தொழிற்சாலைகள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிப்பிக்குள்ளாகியுள்ளனர்.
புகைப்படம்:
தி ஹிந்து
நேற்று (வெள்ளிக்கிழமை) கோவையில் - தொழிற்சாலைகள் முழுநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டன. சுமார் 25,000 - சிறு மற்றும் பெரிய தொழிற்சாலைகள் - இப்போராட்டத்தினை ஆதரித்து நேற்று இயங்கவில்லை. காந்திபுரம் பகுதியில் சுமார் 8000 தொழிற்சாலைகளின் பிரதிநிதிகள் - ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவை பகுதியில் மட்டும் தினசரி உற்பத்தி இழப்பு சுமார் 250 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
ஏன் மின்வெட்டு தற்போது தீவிரம் அடைந்துள்ளது? பல காரணங்கள் இதற்கு கூறப்படுகிறது.
மாநிலத்தின் தினசரி தேவை சுமார் 11,500 MW மின்சாரம். ஆனால் - உற்பத்தி செய்யப்படுவதோ/வெளி சந்தையில் பெறப்படுவதோ, தினமும் சுமார் 8000 MW அளவு தான். தினசரி பற்றாக்குறை - ஏறத்தாழ 3500 MW ஆகும்.
துண்டுவிழும் தேவையை மின்சார வாரியத்தால் பூர்த்தி செய்ய இயலவில்லை. மின் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனங்களுக்கு - சுமார் 10,000 கோடி ரூபாய்க்கு மேல் தமிழ்நாடு மின்சார வாரியம் பாக்கி வைத்துள்ளது. ஆதலால் - தனியாரிடம் இருந்து கூடுதல் மின்சாரம் பெற முடியாதது ஒரு காரணமாக கூறப்படுகிறது.
வட சென்னை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள பழுதினால் - அங்கு மேற்கொள்ளப்படும் 210 MW மின் உற்பத்தி முற்றிலும் நின்று விட்டதாக கூறப்படுகிறது. சென்னை எண்ணூரில் உள்ள அனல் மின் நிலையத்திலும் - உற்பத்தி தற்போது 100 MW அளவில் இருப்பதாகவே கூறப்படுகிறது (கொள்ளளவு - 450 MW).
மேலும் தென் மாநிலங்களில் - மின்சார பயன்பாடு உயர்ந்திருப்பதால், தமிழகத்திற்கு - குஜராத் போன்ற மாநிலங்களில் இருந்து மின்சாரம், கொண்டு வர இயலவில்லை என்றும் கூறப்படுகிறது. குஜராத்தில் இருந்து தினசரி - 500 MW மின்சாரம் கொண்டு வர ஒப்பந்தம் உள்ளதாகவும், இருப்பினும் - ஆனால் தினமும் 200 MW மின்சாரம் தான் கிடைக்கபெறுவதாகவும் கூறப்படுகிறது.
டிசம்பர் மாதம் எதிர்பார்க்கப்பட்ட புதிய மின்சார விநியோக மூலங்கள் (வல்லூர் - 1000 MW, எண்ணூர் - 600 MW) - ஜூன் மாதம் முதல் தான் இயங்க துவங்கும் என கூறப்படுகிறது. தனியார் நிறுவனங்களில் இருந்து மின்சாரம் வாங்க பிப்ரவரி 18 அன்று புது டெண்டர் விடப்படும் என தெரிகிறது. அதன் மூலம் சுமார் 500 MW மின்சாரம் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.
[தொடரும்]
|