அமீரக காயல் நல மன்றத்தை இனி துபை காயல் நல மன்றம் என்றழைப்பதெனவும், காயல்பட்டினம் நகா மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக கூடுதல் தொகையை ஒதுக்கீடு செய்யவும் அமீரக காயல் நல மன்ற செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அமீரக காயல் நல மன்றத்தின் பிப்ரவரி 2012 மாதத்திற்கான செயற்குழுக் கூட்டம் மன்றத்தின் தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜே.எஸ்.ஏ.புகாரீ அவர்களின் இல்லத்தில், துணைத்தலைவர் சாளை ஷேக் ஸலீம் தலைமையில், 10.02.2012 வெள்ளிக்கிழமை மாலை அஸ்ர் தொழுகைக்குப் பின் நடைபெற்றது.
ஹாஜி எம்.எஸ்.நூஹ் ஸாஹிப் இறைமறை குர்ஆன் வசனங்களுடன் கூட்டத்தைத் துவக்கி வைத்தார். கூட்டத் தலைவர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
இக்கூட்டத்தில் மன்றத்தால் செய்து முடிக்கப்பட்ட, செய்யப்பட்டு வருகிற, இன்ஷாஅல்லாஹ் இனி செய்யவிருக்கிற நகர்நலப் பணிகள் மற்றும் நகர் நடப்புகள் குறித்து விரிவாக கலந்தாலோசனை செய்யப்பட்டது.
நிறைவில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - அமைப்பின் பெயர் மாற்றம்:
ஐக்கிய அரபு அமீரகம் அபூதபீயில் காயல் நல மன்றம் உதயமானதையடுத்து, அமீரகத்தில் இரண்டு மன்றங்கள் ஆகிவிட்டதால், இனி துபையில் செயல்பட்டு வரும் இம்மன்றத்தின் பெயர், "துபை காயல் நல மன்றம்" Kayal Welfare Association - Dubai [KWAD] என்று மாற்றம் செய்யப்படுகிறது. மன்றத்தின் தகவல் தொடர்புகள் உள்ளிட்ட அனைத்தம்சங்களையும் இனி இப்பெயரிலேயே செய்வதென தீர்மானிக்கப்பட்டது.
அமீரகத்தில் அபூதபீ நீங்கலாக ஷார்ஜாஹ், அஜ்மான், உம்முல் குவைன், ஃபுஜைராஹ், ராஸ் அல் கைமாஹ் ஆகிய - அமீரகங்களில் வசிக்கும் காயலர்களை உறுப்பினர்களாகக் கொண்டு இம்மன்றம் செயல்படும்.
தீர்மானம் 2 - சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் வேண்டுகோள் ஏற்பு:
நெல்லை - பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியிலிருந்து பெறப்பட்ட வேண்டுகோள் கடிதம் கூட்டத்தில் படிக்கப்பட்டது.
நமதூர்வாசிகளின் பிரதிநித்துவம் கண்டிப்பாக அக்கல்லூரியின் செயற்குழுவில் இடம்பெற வேண்டும் என்ற அடிப்படையிலும், கல்லூரியின் ஆக்கப்பூர்வமான கட்டிடப்பணிகளுக்கு உதவும் நோக்கிலும், நம் மன்றத்தின் மூலம் அதிக உறுப்பினர்களைச் சேர்ப்பது என்றும்,
கல்லூரி செயற்குழுவின் செயல்திட்டங்கள் மன்றும் உறுப்பினர்களின் உரிமைகள் குறித்து தெரிந்துகொள்ள மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் ஜனாப் ஷக்காஃப், ஜனாப் நிஜாம் ஆகியோர் கல்லூரியுடன் தொடர்புகொண்டு தகவல்களைக் கேட்டுப் பெறுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 3 - மைக்ரோ காயல் திட்டத்திற்கு வரவேற்பு:
நமதூர் மக்களுக்குச் செய்யப்பட்டு வரும் மருத்துவ உதவிகளை ஒருங்கிணைந்த முறையில் செய்வதற்காக, நம் நகரில் உருவாகியிருக்கும் ‘மைக்ரோ காயல்‘ என்ற புதிய அமைப்பை இம்மன்றம் வரவேற்பதோடு, அதன் செயல்பாடுகளை அவதானிப்பதற்காக டாக்டர் பி.எம்.செய்யித் அஹ்மத், ஜனாப் எம்.யு.முஹம்மத் அலீ ஆகிய இருவரையும் நியமிப்பதென தீர்மானிக்கப்பட்டது.
அவர்களின் தகவலறிக்கையைத் தொடர்ந்து, மைக்ரோ காயல் அமைப்புடனான ஒத்துழைப்பு குறித்து இறுதி முடிவு செய்யவும், அதுவரையிலும் மருத்துவத்திற்கான மன்றத்தின் நேரடி உதவிகள் தொடரும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 4 - அபூதபீ கா.ந.மன்றத்திற்கான தகவல் தொடர்பாளர் நியமனம்:
அபூதபீ காயல் நல மன்றத்துடன் தகவல் பரிமாற்றங்களைச் செய்துகொள்ள, ஜனாப் ஹுசைன் ஃபாரூக் அவர்களை நியமிப்பதென்றும், மன்றத் தலைவரின் நேரடி பார்வையின் கீழ் அவர் செயல்படுவார் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 5 - அரசு மகளிர் மேனிலைப்பள்ளி ஓய்வறை மேம்பாட்டுக்கு நிதியுதவி:
தீவுத்தெரு அரசினர் மகளிர் மேனிலைப் பள்ளியிலுள்ள மாணவியர் ஓய்வறை வசதியை மேம்படுத்துவதற்கு, போதுமான நிதியை மன்றத்தின் சார்பில் வழங்க தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 6 - கல்வி வளர்ச்சிக்கு கூடுதல் நிதியொதுக்கீடு:
மன்றத்தின் கல்விக்குழுவின் வேண்டுகோளின்படி, நகரில் கல்வி மேம்பாட்டு செலவினங்களுக்காக கூடுதல் தொகை ஒதுக்கபட்டது.
தீர்மானம் 7 - சிறப்பு மலர் பணிகள்:
மன்றத்தின் சிறப்பு மலர் பணிகளை விரைந்து முடிக்கும்படி ஹாஜி டி.எஸ்.ஏ.யஹ்யா முஹ்யித்தீன், சாளை ஷேக் ஸலீம் ஆகியோரை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மஃரிப் தொழுகைக்குப் பின் துஆவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது, எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்! கூட்டத்தில் மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கியுபசரிக்கப்பட்டது.
இவ்வாறு, அமீரக காயல் நல மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
துபை காயல் நல மன்றம் சார்பாக,
சாளை ஷேக் ஸலீம்,
துணைத்தலைவர்.
படங்கள்:
M.S.அப்துல் ஹமீத்,
செயற்குழு உறுப்பினர். |