காயல்பட்டினம் காக்கும் கரங்கள் நற்பணி மன்றம், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை, கே.எம்.டி. மருத்துவமனை ஆகிய நிறுவனங்கள், தூத்துக்குடி திரவியம் எலுமபு முறிவு மருத்துவமனையுடன் இணைந்து, எலும்பு மூட்டு நோய்களுக்கான மருத்துவ சிகிச்சை இலவச முகாமை இன்று காலை 10.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனை வளாகத்தில் நடத்தின.
முகாம் துவக்க நிகழ்ச்சிக்கு, கே.எம்.டி. மருத்துவமனை செயலாளர் ஹாஜி வாவு எம்.எம்.முஃதஸிம் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ், அதன் துணைத்தலைவர் ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ, பொருளாளர் ஹாஜி செய்யித் முஹம்மத் அலீ, நகர அரிமா சங்க தலைவர் ஹாஜி எஸ்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா, அரிமா சங்க மாவட்ட நிர்வாகி ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஹாஃபிழ் ஏ.ஆர்.அப்துல் காதிர் வாஃபிக் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். காக்கும் கரங்கள் நற்பணி மன்றத்தின் ஆலோசகர் எம்.அப்துல் ரசாக் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தலைமையுரையைத் தொடர்ந்து, சென்னை காயல்பட்டினம் ஐக்கிய சங்கத்தின் செயலர் ஹாஜி ஏ.கே.பீர் முஹம்மத் வாழ்த்துரை வழங்கினார்.
பின்னர், முகாமின் பயன்கள் குறித்து திரவியம் மருத்துவமனை மருத்துவர் டாக்டர் ஷபீர் விளக்கிப் பேசினார்.
காக்கும் கரங்கள் நற்பணி மன்ற உறுப்பினர் எம்.ஏ.சி.சுஹைல் இப்றாஹீம் நன்றி கூற, மவ்லவீ சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
பின்னர் துவங்கிய முகாமில், எலும்பு பிசகு, எலும்பு முறிவு உள்ளிட்ட நோய்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. இம்முகாமில், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, 81 ஆண்கள், 231 பெண்கள் என மொத்தம் 312 பேர் பங்கேற்று மருத்துவ ஆலோசனை பெற்றனர்.
முகாம் ஏற்பாடுகளை, காக்கும் கரங்கள் நற்பணி மன்ற தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன் தலைமையில் குழுவினர் செய்திருந்தனர். |