1997-98 ஆண்டு - அப்போதைய தி.மு.க. ஆட்சியின் போது - மக்கள் பங்களிப்புடன் செயல்படுத்தக்கூடிய நமக்கு நாமே திட்டம்
அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் 2000-2001ம் ஆண்டுவரை செயல்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தின் அடிப்படை கோட்பாடுகளில் மாற்றம் ஏதும் இல்லை எனினும் 2001-02ஆம் ஆண்டிலிருந்து - புதிதாக ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க.
அரசாங்கத்தால் - இத்திட்டத்தின் பெயர் ‘கிராம தன்னிறைவுத் திட்டம்’ என்று மாற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டது. பின்னர் 17.7.02ல் மீண்டும்
இத்திட்டத்தின் பெயர் தன்னிறைவுத் திட்டம் (SELF SUFFICIENCY SCHEME) என்று மாற்றப்பட்டு, 2005-06 ஆம் ஆண்டுவரை செயல்படுத்தப்பட்டது.
30.7.07 மற்றும் 31.7.07 அன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாட்டில் ‘நமக்கு நாமே திட்டம்’ மீண்டும் செயல்படுத்தப்படும் என்று
அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதி அறிவித்தார். 2011 ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள அ.தி.மு.க. அரசு - இத்திட்டத்திற்கு
'தன்னிறைவுத் திட்டம்’ (SELF SUFFICIENCY SCHEME) என மீண்டும் பெயர் சூட்டியுள்ளது.
1997 ஆம் ஆண்டு முதல் - மாறும் அரசாங்கங்களால் - இத்திட்டத்தின் பெயர் நமக்கு நாமே/தன்னிறைவு திட்டம் என பெயர் மாற்றப்பட்டு
வந்தாலும், பொது மக்களுக்கு பிரயோசனமான பல திட்டங்கள் - மாநிலம் முழுவதும் - இத்திட்டம் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு என இவ்வாண்டு தமிழக அரசு 100 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இந்நிதி - ஒவ்வொரு மாவட்டத்திற்கும், அம்மாவட்டங்களின்
மக்கள் தொகைக்கு ஏற்ப வழங்கப்படும்.
இத்திட்டத்தின் மூலம் - பொதுமக்களுக்கு தேவையான பல காரியங்கள் செய்யலாம். ஒரு திட்டத்தின் மதிப்பீட்டில் மூன்றில் ஒரு பங்கினை
(குறைந்தது) பொது மக்கள் வழங்கினால், மீதி பங்கினை மாநில அரசு வழங்கும்.
இத்திட்டம் குறித்த சாராம்சம் - ஜனவரி 15 அன்று காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஏற்பாட்டில் நடந்த
அனைத்து ஜமாஅத்துகள் - மக்கள் கூட்டமைப்புகளின் கூட்டத்தின் போது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இத்திட்டம் குறித்த முழு விபரம் கீழே தரப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் இத்திட்டம் குறித்த வழிமுறைகளை காண இங்கு அழுத்தவும்.
பொது மக்களின் பங்கேர்தல் - சமூக பணிகளை திட்டமிட, ஒருங்கிணைக்க மற்றும் நிதி திரட்ட - மிகவும் அவசியம் ஆகும். அப்போதுதான்
உருவாக்கப்படும் சமூக சொத்துகளை - நெடுங்காலம் பாதுகாக்கமுடியும்.
பொது மக்களின் சுய உதவி இயக்க முறையினை மேம்படுத்த, சமூக சொத்துக்களை உருவாக்குவதில் பொதுமக்களை மேலும் ஆர்வமுடைய செய்ய
- அரசு தன்னிறைவு திட்டத்தினை அறிமுகப்படுகிறது. இத் திட்டம் நகரம் மற்றும் கிராமம் ஆகிய அனைத்துப் பகுதிகளிலும் செயல்படுத்தப்படும்.
1. பொதுமக்களின் பங்களிப்பு:
கண்டறியப்பட்ட திட்டத்தினை நிறைவேற்ற - பொதுமக்களின் நிதி பங்களிப்பு - மூன்றில் ஒரு பங்காக இருக்கவேண்டும்.
2. தன்னிறைவுத்திட்டத்தின் கீழ் பணிகளை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள்:
i) தன்னிறைவுத்திட்டத்தின் கீழ் பணிகளை எடுத்து செய்வதற்கான தேவை குறித்த கருத்து, தனி நபர், குழு, நிறுவனங்கள், கம்பெனிகள்,
கம்பெனிகள் அல்லது சமுதாய மக்கள் மூலமாக உருவாகலாம்.
ii) செய்ய வேண்டிய பணியை கண்டறிந்த பின், பணியின் தன்மையை குறிப்பிட்டு விண்ணப்பமும், மூன்றில் ஒரு பங்கு தொகையை வழங்கிட
சம்பந்தமும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் விண்ணப்பமாக கொடுக்க வேண்டும்.
iii) மாவட்ட ஆட்சித்தலைவர் - விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள தேவை, இத்திட்டத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டுள்ளதா என கண்டறிவார்.
அதன் பிறகு, அக்கோரிக்கை குறித்த விரிவான மதிப்பீட்டு தொகை விபரங்களை கோருவார். அதன் பிறகு - விண்ணப்பதாரர், குறிப்பிட்ட
தொகையினை - கேட்புக் காசோலையாக மாவட்ட ஆட்சி தலைவரிடமோ அல்லது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலரிடமோ
கொடுக்க வேண்டும்.
iv) உள்ளாட்சி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் அல்லது அரசுத் துறை நிறுவனங்கள் வழங்கும் நிதி இத்திட்டத்தின் கீழ் ஏற்றுக்
கொள்ளப்படமாட்டாது.
v) பணிகளை செய்வதற்கு உள்ளாட்சி மன்றம் அல்லது அப்பணி சம்பந்தப்பட்ட துறையின் அனுமதி தேவையெனின் அவற்றின் அனுமதியை, நிர்வாக
அனுமதி வழங்குவதற்கு முன் மாவட்ட ஆட்சித் தலைவர் பெற வேண்டும்.
vi) உருவாக்கப்படும் சொத்துக்கள் உள்ளாட்சி நிறுவனங்கள் அல்லது துறையின் பராமரிப்பின் கீழ் இருக்க வேண்டியிருப்பின், அச்சொத்துக்களை
உருவாக்க அந்த துறைகளின் ஒத்திசைவினை மாவட்ட ஆட்சித் தலைவர் பெற வேண்டும்.
vii) குறிப்பிட்ட அளவுள்ள தொகைக்குள், பல்வேறு பணிகளை செய்ய கோரிக்கைகள் வரப்பெறின் அவற்றுள் மிக அதிக அளவில் சமுதாயத்திற்கு
பயன்தரும் பணிகளைக் கண்டறிந்து அத்தகைய பணிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
3. பரிந்துரைக்கப்படும் திட்டங்கள்:
கீழ்க்காணும் திட்டங்கள் - தன்னிறைவு திட்டம் 2011 - 2012 கீழ பரிந்துரைக்கப்படுகிறது:
i) அரசு கல்லூரிகள், அரசு விடுதிகள், அரசு மற்றும் உள்ளாட்சி மன்றங்களின் பள்ளிகளுக்கான கட்டிடங்கள் (சுற்று சுவர் மற்றும் சுற்றுவேலி
உள்பட), ஆய்வகங்கள், பள்ளிகளுக்கான கழிவறைகள் கட்டிகொடுக்கலாம்
ii) அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள், துணை மையங்கள், கால்நடை மருந்தகங்கள், கால்நடை வளர்ப்பு மையங்கள்,
நூலகங்கள் ஆகியவற்றிற்கு கட்டிடங்கள் (சுற்று சுவர் மற்றும் சுற்றுவேலி உள்பட) கட்டிகொடுக்கலாம்
iii) நகர்ப்புறங்களில் நூலகங்கள், மதிய சத்துணவு கூடங்கள், அங்கன்வாடிகள், பள்ளிக்கூட சமையல் அறைகள், அரசு நியாய விலை கடைகள்
ஆகியவை கட்டிகொடுக்கலாம்
iv) கிராமம் மற்றம் நகரங்களில் குடிநீர் ஆதாரங்கள் உருவாக்குதல், சிமெண்ட் சாலை அமைத்தல், சூடுமிதிக்கும் களம் (Threshing Floor) போன்ற
சமுதாய சொத்துக்களை உருவாக்குதல்
v) சமுதாய சொத்துக்கள் அனைத்தையும் பராமரிப்பது. ஒருங்கிணைந்த பெண்கள் சுகாதார வளாகங்களுக்கு முன்னுரிமை (பராமரிப்பில்)
வழங்குவது
vi) பாலங்கள், அல்லது சிறிய பாலங்கள் கட்டுதல், சாலைகளை தரம் உயர்த்துதல், தெருக்கள் மற்றும் சிறிய சந்துகளை
செங்கல் அல்லது கப்பி கற்கள் அல்லது சிமெண்ட் சிலாப்பு அல்லது சிமெண்ட் கான்கிரிட் கொண்டு சீரமைத்தல்
vii) பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், சாலை திட்டு (Traffic Islands), நீரூற்று, தெருவிளக்குகள் (சூரிய ஒளியால் இயங்கும் தெரு
விளக்குகள் உட்பட) போன்றவற்றை அமைத்தல் மற்றும் அவற்றை மேம்படுத்தி பராமரித்தல்
viii) பொது மக்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக அரசு மற்றும் உள்ளாட்சி மன்ற பள்ளிகள், நூலகங்கள் மற்றும்
கட்டிடங்களுக்கு தேவையான அறைகலன்கள் (பர்னிச்சர்), கம்ப்யூட்டர்கள் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றை வாங்குதல்.
பழைய கம்ப்யூட்டர்கள், உபகரணங்கள் மற்றும் அறைகலன்கள் வாங்கக்கூடாது
4. நிபந்தனைகள்
மேற்கூரிய பணிகள், கீழே குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு மேற்கொள்ளப்பட வேண்டும்.
a) சொத்தின் உரிமைதாரரின் முன் அனுமதி பெறாமல் எந்த நிரந்தர கட்டுமான பணியும் செய்யக்கூடாது
b) பணிக்கான பங்களிப்பை அளிக்க முன்வரும் நபர் / நிறுவனம் சொத்திலோ அல்லது அதன் பயன்பாட்டிலோ (Property / Use of property)
எந்த உரிமையும் கோரக் கூடாது.
c) பணிக்காக பங்களிப்பு நிதி வழங்கியவர்களின் பெயர்களை, மாவட்ட ஆட்சித் தலைவரின் முன் அனுமதி பெற்று, பணி நடைபெறும் இடத்தில்
விளம்பரப் பலகையாக வைக்கலாம். விளம்பரப் பலகையில் குறைந்தது மூன்றில் இரண்டு பகுதி பரப்பில் ‘தன்னிறைவுத்திட்டம்’ என்பது தெளிவாக
குறிப்பிடப்பட வேண்டும். பணி செய்யும் இடத்தின் மதிப்புக்கு குந்தகம் ஏற்படாத வகையிலும், திட்ட பணிக்காக பங்களித்தோர் சொத்துக்கு
உரிமையோ அல்லது குத்தகை உரிமையோ, கோர வாய்ப்பு அளிக்காத வகையில் அந்நிறுவனம் விளம்பரம் செய்ய அனுமதிக்கலாம்.
d) திட்டப் பணிக்கு பங்களித்தோர் போதுமான அக்கறை காட்டவில்லை அல்லது ஏதாவது நிபந்தனைகள் மீறப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர்
கருதினால், பணியைச் செய்யவும், பராமரிக்கவும் வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படும் அல்லது பணியை தொடர அனுமதிக்கப்படமாட்டாது.
5. செய்யக்கூடாத பணிகள்
கீழ்க்காணும் பணிகளை (விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ள பணிகள் தவிர்த்து) தன்னிறைவு திட்டங்கள் கீழ் செய்யக்கூடாது:
i) மத்திய, மாநில அரசாங்க துறைகளுக்கு, அரசாங்க நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள், இதர சங்கங்கள் ஆகியவற்றிற்கு அலுவலக அல்லது
குடியிருப்பு கட்டிடங்களையோ (இத்திட்டத்தின் கீழ்) கட்டக்கூடாது
விதிவிலக்கு:
ஆரம்ப சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான குடியிருப்பு கட்டிடங்களை புதிதாக கட்டிகொடுக்கவோ, சரிசெய்யவோ,
புனரமிக்கவோ செய்யலாம். மேலும் - அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள், கால்நடை மருந்தகங்கள் ஆகியவற்றிற்கு
கட்டிடங்கள், சுற்று சுவர்கள் கட்டிகொடுக்கலாம். நியாய விலை கடைகள், நேரடி வாங்கிச்சேர்த்தல் மையங்கள் (Direct Procurement Centres),
பால் தயாரிப்பாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், மொத்த (உணவு பொருட்களை) குளிர் படுத்தும் மையங்கள் (Bulk Chilling Centres)
ஆகியவற்றிற்கு கட்டிடங்கள் கட்டிக்கொடுக்கலாம்.
ii) அனைத்து அசையும் பொருட்கள், சாதனங்கள், அறைகலன்கள் (பர்னிச்சர்) ஆகியவற்றை (இத்திட்டத்தின் கீழ் வாங்கக்கூடாது)
விதிவிலக்கு:
அரசு மற்றும் உள்ளாட்சி மன்ற பள்ளிகள், நூலகங்கள், மதிய சத்துணவு கூடங்கள், அங்கன்வாடிகள், அரசு கல்லூரிகள், அரசு விடுதிகள், அரசு
மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார் மையங்கள், அரசு கால்நடை மருத்துவமனைகளுக்கு தேவையான அறைகலன்கள் (பர்னிச்சர்) மற்றும்
சாதனங்களை வாங்கலாம்.
iii) அரசு உதவிபெறும் அல்லது சுய உதவியில் செயல்படும் எந்த பள்ளிக்கூடத்திற்கும், கல்லூரிக்கும் எந்த பணிகளும் (இத்திட்டத்தின் கீழ்)
செய்யக்கூடாது
விதிவிலக்கு:
100 சதவீதம் அரசு உதவி பெரும் பள்ளிக்கூடங்களுக்கு - அவை தமிழ் வழியில் மட்டும் பாடங்களை நடத்தினால் - அவைகளுக்கு, வகுப்பறைகள்,
ஆய்வு கூடங்கள் மற்றும் கழிப்பறைகள் கட்டிக்கொடுக்கலாம். இத்திட்டத்தின் கீழ் ஓர் ஆண்டில் - அப்பள்ளிக்கூடத்திற்கு.10 லட்ச ரூபாய்க்கு மேல்
அரசு மானியம் வழங்கப்படக்கூடாது.
ஒருமுறை - அரசு உதவி பெரும் பள்ளிக்கூடம் இத்திட்டத்தின் கீழ் உதவி பெற்றுவிட்டால் - இத்திட்டத்தின் கீழ் 3 ஆண்டுகளுக்கு உதவிபெற
இயலாது.
இதுபோன்ற விசயங்களில், மாவட்ட ஆட்சி தலைவரின் விசாரணைகள் போக, கீழ்க்காணும் சான்றிதழ்கள் - மாவட்ட ஆரம்ப கல்வி அலுவலர்
அல்லது மாவட்டத்தின் தலைமை கல்வி அலுவலர் ஆகியோரிடம் இருந்து பெறப்பட வேண்டும்.
(a) இப்பள்ளியில் 100 சதவீதம் தமிழ் வழியிலேயே வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஆங்கில வழி வகுப்புகள் கிடையாது
(b) இப்பள்ளி 100 சதவீதம் அரசு உதவி மூலமே இயங்குகிறது. அந்த பள்ளி வளாகதிலேயோ, அதே நிர்வாகத்தினால் வேறு இடத்திலோ சுய
உதவி மூலம் வகுப்புகள் ஏதும் நடத்தப்படுவதில்லை
iv)
அனைத்து லாப நோக்க பணிகளுக்கும் இத்திட்டத்தின் மூலம் உதவி வழங்க அனுமதி கிடையாது
v) எந்த மத்திய, மாநில அரசுகளின் நிவாரண நிதிகளுக்கு மானியமோ, கடனோ இத்திட்டத்தின் கீழ் வழங்க அனுமதி இல்லை
vi) நிலங்களை ஆர்ஜிதம் செய்யவோ, ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலத்திற்கு பொருளாதார உதவி வழங்கவோ இத்திட்டத்தின் கீழ் அனுமதி
இல்லை
vii) முன்னரே செய்யப்பட பணிகளுக்கு/ வாங்கப்பட்ட பொருட்களுக்கு பொருளாதாரம் முழமையாகவோ, பகுதியாகவோ வழங்க அனுமதி இல்லை
viii) தனி நபருக்கும், குடும்பக்களுக்கும் சொத்துக்கள் உருவாக்கக்கூடாது
ix) இறைவரி (Revenue) மற்றும் தொடர் செலவுகளுக்கு அனுமதி இத்திட்டத்தின் கீழ் கிடையாது
x) வழிப்பாட்டு தளங்களில் மற்றும் மத அடிப்படையில் இயங்கும் அமைப்புகளுக்கு சொந்தமான நிலங்களில் பணிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் அனுமதி
கிடையாது
xi) குளங்களில் , ஊரணிளில் , ஆறுகளில் , தொட்டிகளில் , கால்வாய்களில் , வாய்கால்களில் தூர்வார் பணிகளுக்கு அனுமதி கிடையாது
விதிவிலக்கு:
சிறு அணைகளை (bunds) தூர்வாரவும், பலப்படுத்தவும், PWD நிறுவனத்தின் Sluice/Weirs போன்ற அணைக்கட்டுகளை கட்டவும்/புதுப்பிக்கவும் -
மாவாட ஆட்சி தலைவர் - அவசியம் என கருதினால் செய்யலாம். இது போன்ற திட்டங்களுக்கு பொதுமக்களின் பங்களிப்பு குறைந்தது - PWD
உடைய மதிப்பீடுபடி - 50 சதவீதத்திற்கு குறையாமல் இருக்கவேண்டும். MGNREGS / IAMWARM திட்டங்கள் கீழ் - upstream/downstream supply
channels - போன்ற திட்டங்களை நிறைவேற்றலாம்.
xii) சல்லி / WBM சாலைகள் இத்திட்டம் கீழ் அமைக்கக்கூடாது (BT தர சாலைகள் வரை அமைக்கலாம்)
xiii) சோடியம் விளக்குகள்/உயர் கோபுர விளக்குகள் ஆகியவை இத்திட்டத்தின் கீழ் நிறுவப்படக்கூடாது
6. பணிகளை நிறைவேற்றுதல்
i) அரசின் உரிய அதிகாரியால் அங்கீகரிக்கப்பட்ட அல்லது பொது பணித்துறையால் நிர்ணயிக்கப்பட்ட பணிகளுக்கான தற்போதைய
விலைப்பட்டியலின்படி உள்ளாட்சி நிறுவனங்கள் அல்லது சம்மந்தப்பட்ட துறையால் பணிகளின் மதிப்பீடு தயாரிக்கப்பட்ட பின்னரே, நிர்வாக அனுமதி
வழங்கப்பட வேண்டும். பணிக்கான மதிப்பீட்டுத் தொகையில் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு தொகை கேட்புக் காசோலை மூலம் பணமாக
மாவட்ட ஆட்சியரின் தன்னிறைவுத்திட்டம் நிதி என்ற பெயரில் பெறப்பட வேண்டும். மீதமுள்ள தொகை, அரசு ஒதுக்கீடு செய்யும் நமக்கு நாமே திட்ட
நிதியிலிருந்து அளிக்கப்படும். மேலும், மத்திய அல்லது மாநில அரசின் வேறு திட்டங்களின் வழிகாட்டு நெறிமுறைகள், இத்திட்டத்திற்கு இசைவாக
இருந்தால், அத்திட்டங்களின் நிதியும் , பொது மக்களின் பங்களிப்புக்கு இணையாக சேர்த்துக்கொள்ளப்படும்.
ii) மக்கள் இத்திட்டத்தில் பெரிய அளவில் பங்கேற்க ஏதுவாக, பொது மக்களோ அல்லது பணிக்கான பங்களிப்பை அளித்தவரோ, மேற்கண்ட
பணியை தாங்களாகவே அல்லது வேறு முகவர்கள் மூலமாக செய்திட விரும்பினால், தன்னிறைவுத்திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்யும் போது
எழுத்து பூர்வமாக தெரிவிக்க வேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவர் இந்த கோரிக்கையை ஆய்வு செய்து, பணிக்கான பொதுமக்களின் பங்களிப்பு 50
விழுக்காடுகளுக்கு மேலிருப்பின், பங்களித்தவரையோ அல்லது அதன் முகவரையோ, அப்பணியை அதற்கான மதிப்பீட்டின்படி செயல்படுத்த அனுமதி
வழங்குவார்.
iii) பணிக்கான பொதுப்பங்களிப்பை அளித்தவர் / நிறுவனம் தானே பணியை நிறைவேற்ற முன்வரவில்லை என்றால், அப்பணிகள் 1998 ஆம்
ஆண்டு தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டத்தின்படி ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் நிறைவேற்றப்பட வேண்டும்.
iv) பணிகள் தொழில் நுட்ப அடிப்படையில் மேற்பார்வையிடுவதற்கான முகவர் யார் என்பதை மாவட்ட ஆட்சித் தலைவர் முடிவு செய்வார்.
சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிறுவனமோ அல்லது இது தொடர்புடைய துறையோ, முகவராக இருக்கலாம். மாவட்ட ஆட்சித் தலைவர் தேவைப்படும்
நிதியை இம்முகமைக்கு விடுவிப்பார்.
v)
a) உள்ளாட்சி மன்றமோ/தொடர்பு துறையோ/ நிதிவழங்கியவரோ/ தனியார் நிறுவனங்களோ அல்லது மேற்கூறிய நிறுவனங்கள் ஆகியவற்றில்
பணியை மேற்கொள்வோருக்கு பணி நிறைவேற்றல் ஆணை வழங்கப்படும்.
b) பணிகளை நிறைவேற்றுவது தனியார் நிறுவனங்களோ / சங்கங்களோ / பொது மக்களாகவோ இருந்தாலும், இப்பணியை கண்காணிக்கும்
முகவர்களான உள்ளாட்சி மன்றங்கள்/தொடர்புடைய துறையிடம் மட்டுமே இதற்கான நிதி இருக்கும்
c) பணி செய்யப்பட்ட அளவு குறித்து சம்பந்தப்பட்ட தொழில் நுட்ப பிரிவுகளால் சரிபார்க்கப்பட்டு, மற்ற அரசு திட்டங்களில் பணிச்
செய்யப்பட்டதற்கு தொகை வ ழ ங் க ப் ப டு ம் வழிமுறைகளின்படியே இத்திட்டத்தின் கீழும் பட்டியல்கள் அனுமதிக்கப்படும்
d) உயர்நிலை பள்ளி/மேல் நிலைப் பள்ளிகள் உள்ளிட்ட பள்ளிக் கூடங்களைப் பொறுத்தவரை மேற்கண்ட கண்காணிப்புத் தவிர, சம்பந்தப்பட்ட
பொதுப்பணித் துறை அல்லது நகராட்சி அல்லது மாநகராட்சிகள் ஆகியன கட்டிடத்திற்கான உறுதி தன்மை குறித்து சான்றிதழ் வழங்க வேண்டும்.
கட்டிடப் பணி நிறைவு பெற்றதற்கான பணிநிறைவு அறிக்கையை தொழில்நுட்பக் குழு தயார் செய்ய வேண்டும்.
vi) 100 விழுக்காடு மக்கள் பங்களிப்புடன் பணியை மேற்கொள்ளும் இனங்களில் சம்பந்தப்பட்ட பயனாளி சங்கம் / பங்களிப்பு அளித்தவர்கள்
தாங்களே பணியை நிறைவேற்றுவதற்கு விருப்பம் தெரிவித்தால், நமக்கு நாமே திட்டத்தின்படி செலுத்த வேண்டிய முன்பண பங்களிப்பு தொகையை
செலுத்த வேண்டி வலியுறுத்தாமல், பணியை நிறைவேற்ற அவர்களிடம் ஒப்படைக்கலாம். எனினும் மேற்கண்ட பணிகள், அங்கீகரிக்கப்பட்ட கட்டிட
அமைப்பு மற்றும் கட்டிட உறுதி தன்மைகள் உட்பட வழக்கமான பணி நிறைவேற்றப்பெற்றதற்கான அளவுகள் சரிபார்க்கப்படுவதற்கு உட்பட்டு
மேற்கொள்ளப்பட வேண்டும்.
7. தன்னிறைவுத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சொத்துக்களை பராமரித்தல்.
தன்னிறைவுத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட பணிகளை / சொத்துக்களை சம்பந்தப்பட்ட சம்பந்தப்பட்ட துறை சார்பாக பணிக்கான பங்களிப்பை
வழங்கியோரே பராமரித்து வருவது மிகவும் விரும் ப த் த க் கது ஆகும் . எனவே, இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சொத்துக்களை தொடர்ந்து
பராமரித்து வருவதற்காக சுயமாக நிதிபெற்று செயல்படும் ஒரு பயனாளிகள் குழுவை உள்ளூர் மக்கள் அமைக்க வேண்டும். உள்ளூர் தேவைக்கேற்ப
திட்டமிட்டு, பணிகளை செயல்படுத்தி, பின்னர் பராமரித்து வருவதற்கு உள்ளூர் மக்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும்.
8. நிதி ஒதுக்கீடுமற்றும் திட்டங்களுக்கான நிதி வழங்குதல்:
i. 2011 - 12 ஆண்டிற்கான பட்ஜெட் மதிப்பீட்டில் - இத்திட்டத்திற்கு - 100 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்
ii. மொத்த தொகையான 100 கோடி ரூபாயில் - 25 விழுக்காடு - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, அத்துறையின் ஆணையர் மூலம் சிறப்பு
திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க ஒதுக்க வேண்டும். மீதி தொகையை - இரண்டு தவணையாக, மாவட்டங்களுக்கு, அவைகளின் மக்கள் தொகை
அடிப்படையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் வழங்குவார். அதனை - மாவட்ட ஆட்சியர், கிராமப்புறம்/நகர்புறம் என
முன்னுரிமை அடிப்படையில் - திட்டங்களுக்கு வழங்குவார்.
iii.
a) தன்னிறைவுத்திட்டத்தின் கீழ் சிறப்பு திட்டங்களை நிறைவேற்றுவதற்கு மாவட்டத்திற்கு கூடுதல் நிதி தேவைப்படின், அத்தகைய திட்டங்கள் குறித்த
கோரிக்கைகளை ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குநருக்கு அனுப்ப வேண்டும். கூடுதல் நிதி மற்றும் சிறப்பு திட்டங்களுக்கான
நிதியை இயக்குநரிடம் கோருமுன், மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை முதலில் முழுமையாக செலவு செய்திருக்க வேண்டும்.
b) தேவைப்படின், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத் ராஜ் ஆணையர் , ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு செயலாளருடன் கலந்து
ஆலோசித்து, டிசம்பர் 31 ஆம் தேதி அன்று உள்ள நிலலரப்படி, மாவட்டங்களில் இத்திட்டத்தின் கீழ் பணிகளுக்காக ஒதுக்கப்படாமல் உள்ள
தொகையை, திட்ட செயல்பாடுகள் நன்றாக உள்ள மற்றும் திட்டங்களை செயல்படுத்த நிதி அதிகமாக தேவைப்படும் மாவட்டங்களுக்கு மறு ஒதுக்கீடு
செய்து வழங்குவார்.
iv.
a) தன்னிறைவுத்திட்டத்தின் கீழ் அரசு மற்றும் பொது மக்களிடமிருந்து பெறப்படும் நிதி தன்னிறைவுத்திட்டத்திற்கென துவங்கப்படும் வங்கி சேமிப்புக்
கணக்கில் வைக்கப்பட வேண்டும்.
b) மாவட்ட ஆட்சித் தலைவரால் பெறப்படும் எல்லா நன்கொடைகளும் மாவட்ட ஆட்சித் தலைவரின் தன்னிறைவுத்திட்டக் கணக்கு என்ற
பெயரில் எடுக்கப்பட்ட கேட்புக் காசோலையாக இருக்க வேண்டும். பெறப்பட்ட எல்லா நன்கொடைகளுக்கும் பற்றுச் சீட்டு வழங்க வேண்டும்.
c) பணமாக பெறப்படும் நன்கொடைகளுக்கென தனியாக ஒரு பதிவேடு பராமரித்து வர வேண்டும். இந்த கணக்குகளையும், பதிவேட்டையும்,
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் பராமரித்து வர வேண்டும்.
d) நிர்வாக அனுமதி வழங்கும் போதே நன்கொடை தொகை உட்பட 75 விழுக்காடு தொகையை உள்ளாட்சி மற்றும் தொடர்புடைய துறைக்கு மாவட்ட
ஆட்சித் தலைவர் விடுவிக்க வேண்டும். மீதமுள்ள தொகையை பயன்பாட்டு சான்றிதழ் (Utilisation Certificate) பெற்ற பிறகு விடுவிக்க
வேண்டும்.
(v) ஏதாவது காரணத்தால், உத்தேசிக்கப்பட்ட பணி மேற்கொள்ளப்படாமல் இருந்தால், பெறப்பட்ட நன்கொடையின் முழுதொகையையோ அல்லது
ஒரு பகுதியையோ, நடைபெற்றுள்ள வேலை மற்றும் அதன் மதிப்புக்கு ஏற்ப, திருப்பி தர மாவட்ட ஆட்சித் தலைவர் ஆணையிடுவார். இது போன்ற
நேர்வுகளில், பங்களிப்புத் தொகைக்கு வட்டி ஏதும் இன்றி தொகை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ, பங்களிப்பு வழங்கியவருக்குத் திருப்பி
அளிக்கப்பட வேண்டும்.
9. தகவல், கல்வி மற்றும் செய்தி தொடர்பு
தன்னிறைவுத்திட்டத்தின் சிறப்பு அம்சங்களையும் இத்திட்டத்தின் வெற்றிச் செயல்பாடுகள் குறித்தும் உள்ளூர் பத்திரிக்கை மற்றும் மின்னணு செய்தி
சாதனங்கள் மூலம் வெளியிட தேவையான தகவல் ஒளிபரப்பு மற்றும் விளம்பரங்கள் ச ம் ப ந் த மான நடவடிக்கை களை மாவட்ட ஆட்சித்
தலைவர் கள் ஏற்பாடு செய்திட வேண்டும். இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில், ஒரு விழுக்காட்டு தொகையை, தகவல்
மற்றும் செய்தி சம்பந்தமான நடவடிக்கைகளுக்கும், இத்திட்டம் பற்றிய ஆவணங்கள் தயாரிப்பதற்கும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
10. சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் செய்யவேண்டிய அனைத்து பணிகளையும்
மாவட்ட ஆட்சித் தலைவருக்கு பதிலாக, சென்னை மாநகராட்சி ஆணையர் நிறைவேற்றுவார். அதன்படி, இத்திட்டத்தின் கீழ் பணிகளுக்கான
நிர்வாக ஒப்புதல்களை சென்னை மாநகராட்சி ஆணையர் வழங்குவார்.
11. தன்னிறைவுத்திட்ட செயல்பாட்டிற்கான மேற்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளில், எதிர்காலத்தில் ஏற்படும் சூழ்நிலை மாற்றங்களை கருத்தில்
கொண்டு தேவையான மாற்றங்களை - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையருடன் கலந்தாலோசனை செய்து - செய்ய ஊரக வளர்ச்சி
மற்றும் ஊராட்சித் துறை அரசுச் செயலாளருக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது.
|