சங்கரன்கோவில் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக, திமுக, மதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகளிடையே நான்கு முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. சங்கரன்கோவில் (தனி) சட்டப்பேரவை இடைத்தேர்தல் மார்ச் 18-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் பிப்ரவரி 22-ம் தேதி தொடங்குகிறது.
அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அமைச்சர்கள் உள்பட மொத்தம் 43 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அதிமுகவால் அமைக்கப்பட்டு அவர்களும் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக சார்பில் ஜவகர் சூரியகுமார் அறிவிக்கப்பட்டு, அவரும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
மதிமுக வேட்பாளராக சதன் திருமலைக்குமார் நிறுத்தப்பட்டுள்ளார். பிப்ரவரி 24-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வதுடன், அவர் 25-ம் தேதி பிரசாரத்தைத் தொடங்க உள்ளார்.
தேமுதிக வேட்பாளராக கே. முத்துக்குமார் போட்டியிடுகிறார். இவரது பெயரை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் திங்கள்கிழமை (பிப்ரவரி 20) அறிவித்தார்.
சங்கரன்கோவில் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,05,840 பேர். இதில் ஆண் வாக்காளர்கள் 1,02,795 பேர். பெண் வாக்காளர்கள் 1,03,045 பேர். இவர்கள் வாக்களிக்க வசதியாக மொத்தம் 242 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன.
தகவல்:
தினமணி |