2011 - 2012 ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் அறிவிப்பில் - தமிழகத்தில் உள்ள நகர்புற பகுதிகளுக்கு, ஒருங்கிணைத்த வளர்ச்சி குறிப்பணிகள் (INTEGRATED URBAN DEVELOPMENT MISSION - IUDM) அறிவிக்கப்பட்டது. அதன்படி சம்பந்தப்பட்ட அரசு துறைகளிடம் இருந்து, அடுத்த ஐந்தாண்டுகள் நிறைவேற்ற திட்டமிடபட்டுள்ள பணிகள் குறித்த விபரமும், அதற்கான உத்தேச தொகை குறித்தும் தமிழக அரசு வினவியிருநதது.
அதன்படி நகராட்சி நிர்வாகத்துறை (COMMISSIONERATE OF MUNICIPAL ADMINISTRATION - CMA) - அடுத்த 2 - 3 மூன்று ஆண்டுகளில், ரூபாய் 5890 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நகர்ப்புறங்களில் (மாநகராட்சி, நகராட்சி) திட்டங்கள் நிறைவேற்றப்படவுள்ளதாகவும், அதில் நடப்பாண்டில் 506 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பலவித திட்டங்கள் நிறைவேற்றப்படவுள்ளதாகவும் அரசுக்கு தெரிவித்திருந்தது.
மேலும் டவுன் பஞ்சாயத் பகுதிகளில் ரூபாய் 763 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டங்களில் நிறைவேற்றப்படவுள்ளதாகவும், அதில் நடப்பாண்டில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பலவித திட்டங்கள் றைவேற்றப்படவுள்ளதாகவும் அரசுக்கு தெரிவித்திருந்தது.
ஆக மொத்தம் - 756 கோடி ரூபாயினை நடப்பாண்டில், தமிழகரசிடம் நகராட்சி நிர்வாகத்துறை கேட்டிருந்தது. இவ்வாண்டு 750 கோடி ரூபாய் தான் ஒதுக்கமுடியும் என்றும், மீதி 6 கோடி ரூபாயினை, உள்ளாட்சி அமைப்புகளே ஒதுக்கவேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
அதன்படி தற்போது - ஒவ்வொரு உள்ளாட்சி மன்றத்திற்கும் - குடிநீர் விநியோகம், மழை நீர் வடிகால் திட்டம், கழிவு நீர் வடிகால் திட்டம், சாலை அமைத்தல், தெருவிளக்குகள் அமைத்தல் போன்ற பணிகளுக்கு நகராட்சி நிர்வாகத்துறை நடப்பாண்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதில் காயல்பட்டினத்திற்கு குடிநீர் விநியோக திட்டத்திற்காக 2 கோடி ரூபாயும், குப்பைகள் அகற்றும் திட்டத்திற்காக 50 லட்ச ரூபாயும் (ஆக மொத்தம் 2.5 கோடி ரூபாய்) ஒதுக்கியுள்ளது.
30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காயல்பட்டினத்தில் - பொன்னன்குறிச்சி கிராமத்தில் இருந்து குடிநீர் வழங்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதில் 24 கோடி ரூபாய், மத்திய அரசு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 3 கோடி ரூபாய் மாநில அரசும், 3 கோடி ரூபாய் காயல்பட்டினம் நகர்மன்றமும் வழங்கவுள்ளது. மாநில அரசின் பங்கான 3 கோடியில் தான் தற்போது 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
காயல்பட்டினம் நகர்மன்றம் மூலம் நிறைவேற்றப்படவுள்ள இக்குடிநீர் திட்டத்திற்கு நிர்வாக ஒப்புதல் (Administrative Sanction) இன்னும் சில நாட்களில் வழங்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன. |