இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா சபையில் 05.02.2012 அன்று (நேற்று) மீலாத் விழா நடைபெற்றது.
முன்னதாக, காயல்பட்டினம் நெய்னார் தெரு ஹலீமா பெண்கள் தைக்காவில், 28.01.2012 அன்று மகளிருக்கான பேச்சுப்போட்டியும், 29.01.2012 அன்று மகளிருக்கான ஹிஃப்ழுப் போட்டியும் நடைபெற்றது.
மஹ்ழரா அரபிக்கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, மஹ்ழரா வளாகத்தில் 01.02.2012 அன்று நடைபெற்றது. 02, 03 தேதிகளில் மஹ்ழரா குர்ஆன் மத்ரஸா மாணவ சிறாரின் பல்சுவை சன்மார்க்கப் போட்டிகள் நடைபெற்றன.
நேற்று மீலாத் விழா நடைபெற்றது. காலை 07.00 மணியளவில் ஃபர்ஸன்ஜி மவ்லிதும், 09.00 மணியளவில், ஆண்களுக்கான திருக்குர்ஆன் மனன (ஹிஃப்ழு)ப் போட்டியும் மஹ்ழரா வளாகத்தில் நடைபெற்றது.
மாலையில், மீலாத் விழா சிறப்புக் கூட்டம், மஹ்ழராவின் முன்புறம், அம்பல மரைக்கார் தெருவில் அமைக்கப்பட்டிருந்த வெளிமேடையில் நடைபெற்றது.
மஹ்ழரா குர்ஆன் மத்ரஸாவின் ஆசிரியர் ஹாஃபழ் சொளுக்கு முஹ்யித்தீன் அப்துல் காதிர் தவ்ஹீத் கிராஅத ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். மஹ்ழரா செயற்குழு உறுப்பினர் ஹாஜி கத்தீப் ஏ.ஜே.முஹம்மத் மீராஸாஹிப் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
நிகழ்ச்சிக்குத் தலைமையேற்றிருந்த மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஏ.கே.முஹம்மத் அஸ்ஃபர் அஷ்ரஃபீ தலைமையுரையாற்றினார். மஃரிப் தொழுகைக்குப் பிறகு திக்ர் மஜ்லிஸ் நடைபெற்றது.
இரவு 07.15 மணிக்கு, அண்ணலார் மீது கொள்ள வேண்டிய நேசம், அதன் மகத்துவம், ஸலவாத்தின் மகிமைகள் உள்ளிட்ட செய்திகளை உள்ளடக்கி, சேலம் சூரமங்கலம் நூருல் இஸ்லாம் அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ எம்.முஹம்மத் அபூதாஹிர் பாக்கவீ சிறப்புரையாற்றினார்.
பின்னர், முன்னதாக நடைபெற்ற சன்மார்க்கப் போட்டிகளில் முதல் மூன்றிடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிறைவாக, மாநிலங்களவையின் முன்னாள் உறுப்பினரும், தமிழ்நாடு அரசின் டெல்லிக்கான முன்னாள் பிரதிநிதியுமான கம்பம் பெ.செல்வேந்திரன் சிறப்புரையாற்றினார்.
மஹ்ழரா மீலாதுர்ரஸூல் கமிட்டி செயலாளர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் நன்றி கூற, மஹ்ழரா செயற்குழு உறுப்பினர் மவ்லவீ எஸ்.எஸ்.இ.காழீ அலாவுத்தீன் மஹ்ழரீ துஆவுடன் விழா நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன. நிகழ்ச்சிகளை காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் நெறிப்படுத்தினார்.
நபிகளார் மீது சுமார் நான்கு இலட்சம் ஸலவாத்துகள் ஓதிய மாணவர் ஒருவருக்கு இவ்விழாவின்போது சிறப்புப் பரிசு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்விழாவில், நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் நேர்ச்சை வினியோகிக்கப்பட்டது.
விழா நிகழ்ச்சிகள் அனைத்தும், காயல்பட்டினம் உள்ளூர் தொலைக்காட்சியான முஹ்யித்தீன் டிவியிலும், அதன் வலைதளத்திலும் நேரலை செய்யப்பட்டது. |