அரசுப் பேருந்துகள் இரண்டு ஒன்றோடொன்று மோதிக்கொண்ட நிகழ்வு நேற்றிரவு நடைபெற்றுள்ளது.
நேற்று (05.02.2012) இரவு 10.00 மணியளவில், தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் நோக்கிச் செல்லும் அரசுப் பேருந்து ஒன்று காயல்பட்டினம் பேருந்து நிலையத்திலிருந்து, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி சந்திப்பில், பிரதான வீதியை நோக்கித் திரும்பியது.
அதே நேரத்தில், தாயிம்பள்ளி திருப்பத்திலிருந்து பெரிய நெசவுத்தெரு, எல்.கே.லெப்பைத்தம்பி சாலை வழியாக வரவேண்டிய - திருச்செந்தூரிலிருந்து தூத்துக்குடி செல்லும் பேருந்து, பிரதான வீதி வழியே வந்ததால், எதிரே வந்த திருச்செந்தூர் செல்லும் பேருந்துடன் மோதியது. இதில் திருச்செந்தூர் நோக்கி சென்ற பேருந்தின் இடதுபக்க தகடு பெயர்ந்தது.
நகரில் ஒருவழிப்பாதை நடைமுறையில் உள்ளதை அறியாமல் வந்துவிட்டதால் இந்நிகழ்வு ஏற்பட்டுவிட்டதாக, தூத்துக்குடி செல்லும் பேருந்தின் ஓட்டுநர் தெரிவித்ததாகவும், திருச்செந்தூருக்கு பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மாற்றுப் பேருந்தில் அனுப்பப்பட்டதாகவும், அந்நிகழ்வின்போது அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
நகரில் ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, போக்குவரத்து நெரிசல் பெரும்பாலும் குறைந்துள்ளதெனினும், தற்போதுதான் ஒருவழிப்பாதை நடைமுறைக்கு வந்துள்ளது என்பதால், இவ்வழித்தடத்தில் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் மனதில் ஒருவழிப்பாதை முற்றிலும் பதியும் வரை, தாயிம்பள்ளி - பெரிய நெசவுத் தெரு திருப்பத்தில் போக்குவரத்துக் காவலர்கள் மூலம் எல்லா நேரமும் ஒருவழிப்பாதை நடைமுறைப்படி வழிகாட்டப்பட வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
படங்கள்:
ஹபீபுர்ரஹ்மான் (ஹாங்காங்),
மற்றும்,
கருநாகப்பள்ளி F.S.மூஸா,
காயல்பட்டினம். |