காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் ஆண்டு விழாவை முன்னிட்டு, விளையாட்டு விழா இம்மாதம் 01, 02 தேதிகளில், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் நடைபெற்றது.
முன்னதாக, பள்ளி ஆட்சிக்குழு உறுப்பினர் எல்.கே.லெப்பைத்தம்பி, தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா ஆகியோர், காயல்பட்டினம் நகராட்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று, விளையாட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளக் கோரி நகர்மன்றத் தலைவருக்கு அழைப்பிதழ் அளித்திருந்தனர்.
02.02.2012 அன்று நடைபெற்ற விளையாட்டு விழாவின் துவக்கமாக, காயல்பட்டினம் கடற்கரையிலிருந்து, பள்ளியின் விளையாட்டு வீரர்களால் நகர்வலமாகக் கொண்டு வரப்பட்ட விளையாட்டு விழா ஜோதி, போட்டிகள் நடைபெறும் ஐக்கிய விளையாட்டு சங்க வளாகத்தில் ஏற்றப்பட்டது.
பின்னர் மாணவர் அணிவகுப்பு நடைபெற்றது. விழா தலைவர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, உலக அமைதியைப் பறைசாற்றும் வகையில் வெண்புறா பறக்கவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து விளையாட்டு விழா உறுதிமொழி முன்மொழியப்பட, மாணவர்கள் வழிமொழிந்தனர்.
பின்னர் துவங்கிய தடகள விளையாட்டுப் போட்டிகளில், 100, 200, 1,500 மீட்டர் ஓட்டப் போட்டியும், 800 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியும் நடைபெற்றது. நீளம் தாண்டல், உயரம் தாண்டல், வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், முன்னாள் மாணவர்கள் பங்கேற்ற மிதிவண்டி மெதுவோட்டப் போட்டி, பள்ளி ஆசிரியர்கள், நகரப் பிரமுகர்கள் - பொதுமக்கள் பங்கேற்ற லக்கி கார்னர் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.
பின்னர் பரிசளிப்பு விழா துவங்கியது. பள்ளி தாளாளர் டாக்டர் முஹம்மத் லெப்பை விழாவிற்குத் தலைமை தாங்கினார். பள்ளி துணைத்தலைவர் ஹாஜி எஸ்.எம்.உஸைர், நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் மற்றும் நகரப் பிரமுகர்கள், பள்ளியின் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா வரவேற்புரையாற்றினார்.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிகழ்வில் கலந்துகொள்வதில் தான் பெருமிதமடைவதாகத் தெரிவித்த அவர், அண்மையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் இரண்டாமிடம் பெற்று சாதனை புரிந்தமைக்காக இப்பள்ளி மாணவர்களையும், அதற்கு ஊக்கமளித்த நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர் குழுமத்தினரையும் வாழ்த்துவதாகத் தெரிவித்தார்.
இப்பள்ளி மாணவர்கள் கடும் முயற்சி செய்து, மாவட்ட, மாநில, தேசிய போட்டிகளில் பல சாதனைகள் புரிய வாழ்த்துவதுடன், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், உலகளவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டி உள்ளிட்ட போட்டிகளிலும் இம்மாணர்வகள் சாதனைகள் பல புரிந்து, தாம் கற்ற பள்ளிக்கும், பிறந்த மண்ணுக்கும் பெருமையீட்டித் தர வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
அவருக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில், தாளாளர் டாக்டர் முஹம்மத் லெப்பை நினைவுப் பரிசு வழங்கினார்.
பின்னர், பரிசளிப்பு விழா துவங்கியது. துவக்கமாக, சிறப்பு விருந்தினரான நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
அவரைத் தொடர்ந்து, மேடையில் முன்னிலை வகித்த பள்ளி நிர்வாகிகள், நகரப் பிரமுகர்கள் பரிசுகளை வழங்கினர்.
அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் இரண்டாமிடம் பெற்ற வீரர்களுக்கு, பள்ளி நிர்வாகம் சார்பிலும், பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சார்பிலும் சிறப்புப் பரிசுகள் துவக்கமாக வழங்கப்பட்டது.
அடுத்து, நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் அதிகளவில் வெற்றிகளையீட்டிய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பின்னர், விளையாட்டுத் துறையில் மாணவர்களுக்கு பயிற்சியளித்தமைக்காக, பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, லக்கி கார்னர் போட்டியில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் மற்றும் பிரமுகர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, அனைத்து விளையாட்டுப் போட்டிகளிலும் முதலிடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பரிசளிப்பின் சிறப்பம்சமாக, ஒரு மைல் அளவு கொண்ட - 1,500 மீட்டர் ஓட்டப் போட்டியில், மூத்த மாணவர்களுக்கு சமமாக களமிறங்கி ஓடிய சிறுவனுக்கு, சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா மேடையின் கீழிறங்கி வந்து பணப்பரிசு வழங்கினார். அவரையடுத்து, பள்ளியின் ஆட்சிக்குழு உறுப்பினர் எல்.கே.லெப்பைத்தம்பி, தாளாளர் டாக்டர் முஹம்மத் லெப்பை, ஹாஜி எஸ்.எம்.ஸதக்கத்துல்லாஹ், ஹாஜி ஏ.எஸ்.ஜமால் முஹம்மத் என்ற ஜமால் மாமா ஆகியோர் பணப்பரிசுகள் வழங்கி மகிழ்வித்தனர்.
நிறைவாக, பள்ளியின் மூத்த ஆசிரியர் டேவிட் செல்லப்பா நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது. பரிசளிப்பு விழா நிகழ்ச்சிகளை, பள்ளியின் ஓய்வுபெற்ற ஆசிரியர் எம்.ஏ.புகாரீ நெறிப்படுத்தினார்.
விழா ஏற்பாடுகளை, பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா தலைமையில், உடற்கல்வி ஆசிரியர்களான வேலாயுதம், ஜமால் முஹம்மத், அண்மையில் ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியர் ஜெபராஜ் ராஜநாயகம் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.
நகரின் பல பகுதிகளிலிருந்தும் விளையாட்டு ஆர்வலர்களும், பெற்றோர் மற்றும் பொதுமக்களும், பள்ளியின் அனைத்து வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களும் போட்டிகளை ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
தகவல் மற்றும் படங்கள்:
அஹ்மத் மீராத்தம்பி,
ஆசிரியர்,
எல்.கே.மேனிலைப்பள்ளி, காயல்பட்டினம்.
செய்தி திருத்தப்பட்டது. @ 05.02.2012 - 09:15hrs) |