காயல்பட்டினத்தின் பல தெருக்களில், சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் கடந்த நகர்மன்றத்தின்போது சிமெண்ட் சாலைகள் அமைக்க, தூத்துக்குடியைச் சார்ந்த ரம்போலா என்பவருக்கு, கடந்த 01.10.2010 அன்று பணியைத் துவக்கி, 31.03.2011 அன்று அனைத்து சாலைகளையும் அமைத்து முடிக்க காயல்பட்டினம் நகராட்சியால் ஒப்பந்தப்புள்ளி அளிக்கப்பட்டது.
அதனடிப்படையில் துவக்கப்பட்ட பணிகள், ஒப்பந்தப்படி கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் முடிக்கப்படாமல் டிசம்பர் மாதம் வரை நீடித்தது.
ஒருவழியாக புதிய சாலைகள் அமைக்கப்பட்ட பிறகு, அவற்றின் ஓரங்கள் சரிசெய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால் நகர மக்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாயினர்.
கீழே விழுந்து எலும்பு முறிவு, வாகனங்கள் சாலையோரங்களில் தவறி விழுந்து சேதம் என தொடர்ச்சியாக ஏற்பட்ட பாதிப்புகளைக் கருத்திற்கொண்ட காயல்பட்டினம் சிறிய குத்பா பள்ளி ஜமாஅத்தினர், 25.01.2012 அன்று காயல்பட்டினம் நகராட்சியில் நடைபெற்ற மக்கள் குறைதீர் மாதாந்திர கூட்டத்தில் இதுகுறித்து நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதாவிடம் முறையிட்டனர்.
பின்னர், நகர்மன்றத் தலைவர் தலைமையில், நகராட்சி நிர்வாகத்தினர் சிமெண்ட் சாலை பகுதிகளுக்கு வந்தபோது, அங்கு சந்திக்கப்பட்ட பாதிப்புகளை அவர்கள் பட்டியலிட்டு, ஒப்பந்தக் காரரிடம் பணிகளை விரைந்து முடிக்கக் கூறுமாறும, செய்யாவிடில் நடவடிக்கை எடுக்குமாறும் முறையிட்டனர். அதனைத் தொடர்ந்து, எஞ்சிய பணிகளை விரைந்து முடிக்க, நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தொலைபேசி மூலம் ஒப்பந்தக்காரருக்கு எச்சரிக்கை விடப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை 11.00 மணியளவில், காயல்பட்டினம் சித்தன் தெருவிலுள்ள சாலையோரங்களில் பரத்துவதற்காக குவித்து வைக்கப்பட்டிருந்த மணல், ஜே.சி.பி. இயந்திரத்தின் துணையுடன் சாலையோரங்களில் பரத்தப்பட்டது.
|