தூத்துக்குடி மாவட்டத்தில் மறுசுழற்சி செய்யவியலாத ப்ளாஸ்டிக் பொருட்களைத் தடை செய்வது குறித்து பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் பயிலரங்கங்கள் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் தலைமையில, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
அதன் பிறகு, மறுசுழற்சி செய்யவியலாத ப்ளாஸ்டிக் பொருட்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்ட பல்வேறு வழிகாட்டுதல்கள் செய்யப்பட்டது.
மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து பெறப்பட்ட வழிகாட்டு செயல்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மறுசுழற்சி செய்யவியலாத ப்ளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடை செய்வது குறித்து பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து பெறப்பட்ட கருத்தின் அடிப்படையில் நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றியமை...
நகராட்சி நிர்வாகத்தின் மூலம் இரண்டு முறை இதற்காக பேரணி நடத்தியமை...
நகராட்சியின் சார்பில் வணிக நிறுவனங்களுக்கு நேரில் சென்று இதுகுறித்த விழிப்புணர்வூட்டும் சுற்றறிக்கைகளை அளித்தமை...
வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களை நகராட்சி கூட்டரங்கில் கூட்டி, இதுகுறித்து அறிவுறுத்தியமை...
இப்படி பல்வேறு நடவடிக்கைகள் நகராட்சி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், தற்போது காயல்பட்டினத்தில் பெரும்பாலும் அனைத்து வணிக நிறுவனங்களிலும் ப்ளாஸ்டிக் கேரி பைகள் பயன்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பலசரக்கு மளிகைகளிலும், உணவகங்களிலும் காகிதத்தில் பொதிந்தோ, துணிப்பைகளிலோ, பாத்திரங்களிலோ பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
உணவகங்களில் தட்டில் வாழையிலை, அலுமினியத் தாள் ஆகியவற்றில் வைத்து உணவுகள் பரிமாறப்பட்டு வருகிறது...
இறைச்சிக் கடைகளில் காகிதத்தின் மேல் வாழையிலையை வைத்து, அதன் மீது இறைச்சியை வைத்து பொதிந்து கொடுக்கப்படுகிறது. ஓரிரு கடைகளில் மட்டும் பழைய முறைப்படி பனையோலைப் பட்டையைக் கொண்டு இறைச்சி பொதிந்து கொடுக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வணிக நிறுவனங்கள், இறைச்சிக் கடைக்காரர்களிடம் வினவியபோது,
நாங்களாக இந்த ப்ளாஸ்டிக் பைகளை விரும்பவில்லை... வாடிக்கையாளர்கள்தான் தமது வேலைக்கு இலகுவாக இருப்பதாகக் கருதி அவற்றை அதிகளவில் பயன்படுத்தத் துவங்கினர்... அவர்களின் தேவையைக் கருத்திற்கொண்டு நாங்களும் ப்ளாஸ்டிக் கேரி பைகளை வாங்கியளிக்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டது...
இதனால், பொருட்கள் வாங்குவதற்காக தம் கைகளில் துணிப்பையையும, பாத்திரங்களையும் கொண்டு வந்த வாடிக்கையாளர்கள் நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக அப்பழக்கத்தை மாற்றி, இறுதியில் முற்றிலும் மறந்துபோயினர்...
இன்று ப்ளாஸ்டிக் கேரி பைகளுக்கு நகரில் தடை விதிக்கப்பட்டுள்ளது வணிகர்களாகிய எங்களைப் பொருத்த வரை மகிழ்சியே! என்றாலும், இந்த ப்ளாஸ்டிக் கேரி பைகளை வாங்கிய அதே விலையில் துணிப் பைகளை நாங்கள் வாங்கினால்தான் எங்களால் எதிர்பார்க்கும் இலாபத்தை சம்பாதிக்க இயலும்... இல்லையெனில் வாடிக்கையாளர்களிடம் துணிப்பைக்கும சேர்த்து கட்டணம் வசூலிக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்படும்...
எனவே, அரசுத் துறைகள் இந்த துணிப்பை உற்பத்தியை விரிவாக்கி, மிகவும் மலிவாக அவற்றை அளித்தால் இக்குறை நிரந்தரமாகத் தீர்க்கப்பட்டு, சுகாதாரமான முறையில் பொருட்களை வாங்க - விற்க வழியேற்படும்... என்று தெரிவித்தனர்.
வாடிக்கையாளர்களிடம் இதுகுறித்து வினவியபோது,
ப்ளாஸ்டிக் பொருட்களால் சுகாதாரத்திற்கு பெரும் கேடு உள்ளது என்பதை பொதுநல அமைப்புகளும், அரசுத் துறைகளும் எங்களுக்கு போதிய அளவில் அறிவூட்டியிருக்கின்றன... அந்த அறிவுரைகளை நாங்கள் மதித்து செயல்பட ஆயத்தமாக இருக்கிறோம்...
அதே நேரத்தில், இந்த அவசர உலகத்தில் எங்களால் ஒவ்வொரு தேவைக்கும் வீட்டிலிருந்து பாத்திரங்களைக் கொண்டு வந்தோ, துணிப்பைகளைக் கொண்டு வந்தோ பொருட்களை வாங்குவதென்பது சாத்தியமற்றது என்பதால், கடைகளில் ப்ளாஸ்டிக் கேரி பைகளை எவ்வாறு இலகுவாகப் பெற்றோமோ அதே போன்று இந்த துணிப்பைகளையும் இலகுவாகப் பெற்றுக்கொள்ள வழியிருந்தால் எங்கள் சிரமங்கள் போக்கப்படும்... என்று தெரிவித்தனர்.
தற்காலங்களில், இறைச்சிக் கடைகளிலும் பலசரக்கு மளிகைகளிலும் பெரும்பாலும் அரை கிலோவுக்கு மேல் பொருட்கள் வாங்கினால்தான் துணிப்பையில் வைத்து வழங்கப்பட்டு வருகிறது. அரை கிலோ, கால் கிலோ எடையில் பொருட்களை வாங்கினால் காகிதத்தில்தான் பொதிந்தளிக்கப்பட்டு வருகிறது.
இதனால், வாடிக்கையாளர்கள் சிறிது பாதுகாப்பின்றியும், வானத்தில் சுற்றித் திரியும் பருந்து, காக வகையறாக்கள் பூரிப்புடனும் உள்ளனர். பயத்தையுணர்ந்த பெண்களில் சிலர் மட்டும் தம் கைகளில் கூடைப் பைகளை ஏந்திச் செல்வது வழமையாகியுள்ளது.
|